நன்மை பயக்கும் ஆப்பிள் சாறு வினிகர்

2 mins read
6a2dba29-19d9-43a3-b36c-2015222a3787
ஆப்பிள் சாறு வினிகர். - படம்: இணையம்

ஆங்கிலத்தில் ஆப்பிள் சைடர் வினிகர் எனப்படும் ஆப்பிள் சாறு வினிகரில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. அந்தச் சாற்றை தினமும் அருந்தினால் நம் உடல் ஆரோக்கியத்தில் பலவிதமான நன்மைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான் ஆகியவை அதில் அடங்கும்.

நுண்ணுயிர் எதிர்ப்பு

ஆப்பிள் சாறு வினிகர் பல்வேறு வகையான நுண்ணுயிர்களைக் கொல்லக்கூடிய ஆற்றல் கொண்டது. ஆதி காலத்தில் மனிதர்கள் அந்த வினிகரை பூஞ்சை, பேன், காதில் ஏற்படும் தொற்று ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பயன்படுத்தினார்கள்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்

வகை இரண்டு நீரிழிவு நோய் உள்ளவர்களும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் ஆப்பிள் சாறு வினிகரை அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமாக இருப்பவர்களும் வினிகரை அருந்தி வரலாம்.

உடல் எடை குறைப்பு

வினிகர் அருந்தி வந்தால் பசி முழுமையாக அடங்கிவிடும் என்று நம்பப்படுகிறது. இதனால் உடல் பருமனாக இருப்பவர்கள் அவர்களின் எடையைக் குறைக்க ஆப்பிள் சாறு வினிகர் ஏதுவாக இருக்கும். மேலும், இதனால் ஒருவர் அடிக்கடி தின்பண்டங்கள் சாப்பிடும் பழக்கத்தையும் குறைத்துக்கொள்ளலாம்.

இதய நலனைப் பாதுகாத்தல்

ஆப்பிள் சாறு வினிகர் ஒருவரின் கொழுப்பளவைக் குறைக்க உதவும். இதயம் சார்ந்த பெரும்பாலான நோய்கள் வருவதற்கான முக்கியக் காரணமாக இருப்பது நம் உடலில் இருக்கும் கொழுப்பளவு.

சரும அழகை மெருகூட்டுதல்

உலர்ந்த சருமம், அரிக்கும் தோலழற்சி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஆப்பிள் சாறு வினிகரை சருமத்தில் தடவலாம். சிறிதளவு வினிகரைத் தண்ணீரில் கலந்த பிறகு மெதுவாக சருமத்தில் பூசும்போது சருமம் ஈரமாகிறது.

ஆப்பிள் சாறு வினிகரை எவ்வாறு பயன்படுத்துவது

வினிகரை அருந்துவதற்குப் பதிலாக அதன் சுவை பிடிக்காதவர்கள் உணவிலும் அதைச் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு தேக்கரண்டி வினிகர் மட்டும் அருந்தினால் போதும். தண்ணீர், குளிர்பானம், தேநீர் போன்றவற்றில் கலந்தும்கூட ஆப்பிள் சாறு வினிகரை அருந்தலாம்.

சருமப் பிரச்சினை உள்ளவர்கள் குளிக்கும்போது வினிகரை நீரில் கலந்துகொள்ளலாம். சிகை அழகை மெருகூட்ட விரும்புபவர்கள் சிறிதளவு வினிகரைத் தண்ணீரில் கலந்த பிறகு அதைத் தலைக்குப் பூசி குளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்