செல்லப்பிராணிகளின் சுகாதாரத்தைக் காக்கும் வழிகள்

2 mins read
6eb5cfc8-6538-41ba-bb7b-c665c9c17a17
செல்லப்பிராணிகளின் நோய் எதிர்ப்பாற்றல் மனிதர்களை விட மிகக் குறைவு என்பதால் மிருகங்களுக்கு எளிதில் தொற்று ஏற்படலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்கும் போது வீடுகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.

செல்லப்பிராணிகளின் நோய் எதிர்ப்பாற்றல் மனிதர்களை விட மிகக் குறைவு என்பதால் மிருகங்களுக்கு எளிதில் தொற்று ஏற்படலாம். எளிய முறைகளைப் பின்பற்றி சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கப் பல வழிகள் உள்ளன.

கழிவுகளை உடனே அகற்றுதல்

அனுதினமும் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளின் மலத்தை அகற்றிச் சுத்தப்படுத்துவது மிக முக்கியம். சுத்தம் செய்யாமல் நீண்டநேரம் அப்படியே இருந்தால் கிருமிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பூனைகளின் மலம் மூலம் மனிதர்களைப் பாதிக்கக்கூடிய கிருமிகள் எளிதில் பரவலாம்.

செல்லப்பிராணிகளுக்கான படுக்கை

செல்லப்பிராணிகளின் ரோமம், அழுக்கு ஆகியவற்றில் உண்ணிகள் மற்றும் இதர தோல் ஒட்டுண்ணிகள் வளரலாம். சுத்தமான படுக்கையில் செல்லப்பிராணிகள் தூங்கினால் பொடுகு வளர்ச்சியும் ஏற்படாது.

செல்லப்பிராணிகளைத் தொட்ட பிறகு...

செல்லப்பிராணிகளைக் கொஞ்சி, தழுவிய பிறகு கைகளை நாம் நன்கு கழுவ வேண்டும். பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்று எளிதில் பரவலாம்.

செல்லப்பிராணிகளின் உணவை வைக்கும் இடம்

உலர் நாய் உணவு ‘சால்மோனெல்லா’ எனும் கிருமியால் மாசுபடலாம். அது மனிதர்களுக்குப் பரவினால் பல்வேறு வகைகளில் மனிதர்களின் நோயெதிர்ப்பாற்றல் பாதிக்கப்படும். செல்லப்பிராணிகள் உலர்ந்த உணவு, காற்று புகாத கலன்களில் வைக்கப்பட வேண்டும்.

உண்ணி வராமல் தடுக்க

உண்ணி எனப்படும் பூச்சி வகைகளில் ஒன்று செல்லப்பிராணிகளை எளிதில் தாக்கக்கூடியவை. அந்தப் பூச்சி வகை செல்லப்பிராணிகளைக் கடிப்பதால் தொற்று ஏற்படும். செல்லப்பிராணி வைத்திருப்பவர்கள் பிராணிகளை வெளியே அழைத்துச் சென்று வீடு திரும்பியதும் தவறாமல் நன்றாகக் துடைக்கவோ குளிக்க வைக்கவோ வேண்டும்.

பிராணிகளின் முடி உதிர்தல்

ஒவ்வாமை அல்லது காசநோயால் அவதிப்பட்டால் வீட்டை அன்றாடம் தூசி உறிஞ்சி மூலம் சுத்தம் செய்வது அவசியம். குறிப்பாக, பூனையின் சிறுநீரில் காணப்படும் ஒருவகை புரதம் மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது.

செல்லப்பிராணிகள் விளையாட்டுப் பொருள்கள்

பிராணிகள் விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடும் போது அதில் கிருமிகள் எளிதாக உருவாகும். விளையாட்டுப் பொருள்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு அவற்றை உடனடியாக சவர்க்காரம் மூலம் கழுவ வேண்டும். மனிதர்களின் சருமம் விளையாட்டுப் பொருள்களுடன் அடிக்கடி உரசினால் தோல் சார்ந்த தொற்றுகள் எளிதில் ஏற்படலாம்.

எந்தச் சவர்க்காரத்தைப் பயன்படுத்துவது

அடிக்கடி சுத்தம் செய்வது போலவே எதை வைத்து சுத்தம் செய்கிறோம் என்பதும் முக்கியம். சில வீட்டுத் துப்புரவுப் பொருள்கள், செல்லப்பிராணிகளின் தோலுக்கு ஏற்புடையதாக இருக்காது. எடுத்துக்காட்டாக, வடிகால் கிளீனர்கள், செறிவூட்டப்பட்ட பாத்திரங்கழுவ பயன்படும் சவர்க்காரம், சுண்ணாம்பு அகற்றும் பொருள்கள் ஆகியவை அதில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்