தியானத்தின் மூலம் மனத்தை ஒருமுகப்படுத்தினால் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கலாம், எந்த நிலையிலும் நிதானத்தைக் காக்கலாம். பெளத்த சமயத்தின் கிளைகளில் ஒன்றான நிச்சிரன் பெளத்த போதனைகளை 30 ஆண்டுகளுக்குமேல் பின்பற்றியதன் விளைவே தாம் தற்போது உணரும் மிகுந்த மனநிறைவு என்கிறார் ஜெயந்தி பழனிசாமி , 44.
புத்தர் பெருமான் பூவுலகில் கூறிய கடைசி போதனைகளாகக் கருதப்படும் ‘சத்தர்ம கமலச் சூத்திரம்’ என்ற நூலில் உள்ள ‘டைமோக்கூ’ என்ற மந்திரத்தை இந்த மார்க்கத்தின் சாதகர்கள் காலையிலும் மாலையிலும் ஜபம் செய்வார்கள். மருந்தகச் சோதனை ஆய்வு நிபுணராகப் பணியாற்றும் திருவாட்டி ஜெயந்தி, தம் கணவரும் பெளத்தத்தில் ஈடுபடுவதாகக் கூறினார்.
திருவாட்டி ஜெயந்தி 11 வயதில் இருந்தபோது, பெளத்தத்தைப் பற்றி தம் பாட்டி தமக்கு அறிமுகம் செய்ததாகக் குறிப்பிட்டார். பெளத்த போதனைகளுடன் வளர்ந்ததால் தம் மனது தெளிவுடன் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். “நமக்குள் சுய அறிவு, ஞானம், ஆரோக்கியம் ஆகிய பண்புகள் இருந்தாலும் அதனை வெளிக்கொணர்வதற்காகச் சில ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். இதனால் என் சுய மதிப்பும் அறிவும் கூடும் என்பது எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
ஆளுமை, செல்வாக்கு, சுய நிர்வாகம் போன்றவற்றை பெளத்த சமயம் நுணுகி ஆராய்வதாகக் குறிப்பிட்ட திருவாட்டி ஜெயந்தி, சிங்கப்பூர் சோக்கா சங்கத்தின் மாதாந்திர தமிழ் வகுப்புகளில் கலந்துகொண்டு சமய அறிவை மேலும் வளப்படுத்தினார்.
“நம் வாழ்க்கையும் முன்னேற்றமும் நம் கையில்தான் உள்ளது என்பது பெளத்த சமயத்தின் அடிநாதம்,” என்று அவர் கூறுகிறார்.
விசாக தினத்தை சோக்கா சங்கத்தினர் சிறப்பாகக் கொண்டாடுவதில்லை என்றாலும் இந்நாளன்று புத்தர் பெருமான், மார்க்க நிறுவனர் நிச்சிரன் மற்றும் அனைத்துலக சோக்கா அமைப்பின் தலைவர் டைசாக்கூ இகேடாவின் அறிவு மொழிகளை நினைவுகூர்வதாகத் திருவாட்டி ஜெயந்தி குறிப்பிட்டார்.
2023ல் காலமான டாக்டர் டைசாக்கூ இகேடாவைத் தம் மானசீக வழிகாட்டியாகக் கருதும் திருவாட்டி ஜெயந்தி, வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவது நொடிப்பொழுதில் சாத்தியம் என்று அவர் கூறியதை இயன்றவரை நினைவுகூருகிறார்.
“நீங்கள் ஐந்து தடவை வீழ்த்தப்பட்டாலும் ஆறாவது முறையாக எழுங்கள் என்பதை டாக்டர் இகேடா சொல்வார்,” என்றார் திருவாட்டி ஜெயந்தி.
தொடர்புடைய செய்திகள்
இரண்டு மகள்களுக்குத் தாயாராக இருந்தாலும் தாம் பெரியவர் என்ற மமதையை விடுத்து, வாழ்நாள் தோறும் சுயத்தைத் தொடர்ந்து கவனித்து குறைகளைக் களைந்து வரவேண்டும் என்ற சிந்தனையைக் கடைப்பிடித்து வருவதாக ஜெயந்தி கூறினார்.
“அப்போதுதான் என் பிள்ளைகளின் மதிப்பை என்னால் தொடர்ந்து பெற்றிருக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
“எந்த நிலையிலும் மன நிம்மதியை உணரும் பக்குவமான புத்த அறிவைப் பெறுவது மனித வாழ்க்கையின் குறிக்கோளாகும். தியானத்தாலும் வழிபாட்டாலும் மனத்தின் விகாரங்களை அகற்ற முடியும். சுயநினைவை புத்தநிலைக்கு உயர்த்த முடியும். இந்த வழியில் நான் செல்வதை எண்ணி மிகவும் மகிழ்கிறேன்,” என்று அவர் கூறினார்.


