பெற்றோர்-குழந்தை பிணைப்பை வலுப்படுத்தவும், பெற்றோரிடம் குழந்தை வளர்ப்பு குறித்த கருத்துகளைப் பகிரும் நோக்கிலும், 6 முதல் 14 வயது வரையுள்ள சிறார்களின் பெற்றோருக்கான மாநாடு மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தால் நடத்தப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் ‘ஸ்பார்க்கல்டோட்ஸ்’ பெற்றோர் மாநாடு, சாங்கி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டூடியோவில் மே 18, 19ஆம் தேதிகளில் நடைபெற்றது.
‘நேர்மறைத் தொடர்புகளும் வலுவான அடித்தளமும்’ எனும் கருப்பொருளில் அமைந்த இம்மாநாட்டில் இரு முக்கியக் குறிப்பு உரைகளும் 16 வெவ்வேறு பயிலரங்குகளும் இடம்பெற்றன.
சிறார்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விளையாட்டுகளைக் கொண்ட பல்வேறு சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஒரு பெற்றோராகத் தமது அனுபவங்கள் சிலவற்றை பார்வையாளர்களுடன் அவர் பகிர்ந்தார்.
அடுத்த தலைமுறையைப் பேணி உருவாக்கும் பொறுப்புடைய பெற்றோருக்கு அதனைச் செம்மையாக நிறைவேற்ற இவ்வகை நிகழ்ச்சிகள் உதவும் என்றார் அவர்.
இளம் பருவத்தில் குழந்தைகளின் மன, குணநலன்களை சீராக வடிவமைப்பது குறித்து உரையாற்றினார் தேசிய கல்விக் கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நற்குணம், குடியியல் கல்வி மைய சிறப்புத் திட்டங்களுக்கான இயக்குனர் பேராசிரியர் டான் ஊன் செங்.
குழந்தை வளர்ச்சியின் அறிவியல், குழந்தை, பாலர் பருவ மேம்பாட்டின் அவசியம், பெற்றோர் குடும்பத்தினரின் ஆதரவு என பலவற்றைக் குறித்து அவர் விரிவாகப் பேசினார். குழந்தைகளின் குணங்களை நெறிப்படுத்த பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
சிறார்களின் உணர்வுகளைக் கையாளும் வழிமுறைகள் குறித்தும், அவை ஏற்படுத்தும் நேர்மறைத் தாக்கங்கள் குறித்துப் பேசினார் நடிகையும் ‘தி டிம்பிள் லாஃப்ட்’ன் நிறுவனருமான திருவாட்டி ஜோன் பே. சிறார்களிடம் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை அந்நிறுவனம் நடத்துகிறது.
அவர்களுக்கு சுயக்கட்டுப்பாடு, தீர்வுகாணும் வழிகள், குழுவாகப் பயணித்தல் உள்ளிட்ட முக்கிய வாழ்க்கைத் திறன்களைக் கற்றுத் தர வேண்டிய அவசியத்தை திருவாட்டி பே வலியுறுத்தினார்.
சிறப்புரைகளுக்கும் அவற்றைத் தொடர்ந்த பயிலரங்குகளிலும் பெற்றோர், பிள்ளைகள் என 1,800 பேர் பங்கேற்றனர்.
இந்த மாநாடு குழந்தையுடனான பிணைப்பு குறித்து அறியவும், குழந்தைகளுக்குப் பிற குழந்தைகளுடன் உரையாடவும் சிறந்த வாய்ப்பு என்றார் மூன்று வயது சிறுவனின் தந்தை தினேஷ் குமார்.
குழந்தைகளுக்கு நிர்வாக செயல்பாடுகளைக் கற்றுத்தரும் நோக்கில் மூன்று விளையாட்டுகளைக் கொண்ட பயிலரங்கை வழிநடத்தினார் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பள்ளியைச் சேர்ந்த ஜியான் நூர்சிலன்.
இந்த விளையாட்டுகள் சிறார்களின் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்று சொன்ன அவர், அவற்றை வீட்டில் செயல்படுத்தும் உத்திகளையும் பகிர்ந்தார்.
சிறார்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள கலை ஒரு சிறந்த வழி என்றார் ‘கலை மூலம் உணர்ச்சிகளை ஆராய்தல்’ எனும் பயிலரங்கை வழிநடத்திய கலைஞர் கரோலின் செவ்.
குழந்தைகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த பாதுகாப்பான சூழலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை என அவர் கூறினார்.
இளம் பெற்றோருக்கு, தற்போதைய சூழலுக்கேற்ற குழந்தை வளர்ப்பு உத்திகளைப் பகிரும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக சொன்னார் ஸ்பார்க்கல்டோட்சின் மொழி வல்லுநர் திருவாட்டி வள்ளியம்மை.
புத்தகங்கள், இணையம் மூலம் படித்தது அறிந்துகொள்வதை விட நடைமுறையில் கற்றறிந்தோரிடம் நேரடியாக உரையாடுவது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் சொன்னார்.