கணவரின் தவில் இசைக்‌கு கரகமாடும் மனைவி

கணவரின் தவில் இசைக்‌கு கரகமாடும் மனைவி

2 mins read
cafa9e58-cf93-4d33-adb0-7e92188b5bfe
கரகாட்டக்‌ கலைஞர் கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரன். - படம்: இணையம்
multi-img1 of 2

காலத்திற்கேற்ப கலைகளும் மாறிவிட்டன என்கிறார் கலைமாமணி விருதுபெற்ற கரகாட்டக்‌ கலைஞர் தேன்மொழி ராஜேந்திரன், 51.

பயிலரங்குகள்மூலம் கரகாட்டக் கலையை சிங்கப்பூரர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து கலைமாமணி தேன்மொழி இங்கு வரவழைக்கப்பட்டார்.

அவருடைய கணவரும் தவில் கலைஞருமான 59 வயது கலைச்சுடர்மணி ராஜேந்திரனும் வந்திருந்தார். இத்தம்பதியர் 42 ஆண்டுகள் அனுபவத்தோடு, 5,000க்‌கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இதுவரை படைத்துள்ளனர்.

தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கும் திருமதி ராஜேந்திரன், கரகாட்டத்தை முதலில் கற்றுக்கொண்ட தம் அக்கா, திருமணத்திற்குப் பிறகு ஆட்டத்தை நிறுத்தியவுடன் கலை விட்டுப்போய்விடக் கூடாது என்பதால் தாமும் கரகாட்டம் பயிலத் தொடங்கியதாகக் கூறினார்.

ஆரம்பத்தில் தம்மை ஆட்டக்காரி என எல்லோரும் கேலி செய்ததால், கரகாட்டம் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டதாக அவர் சொன்னார். ஆனால், தாம் கரமாடும் திறமையைப் பார்த்தவர்கள் தாம் சிறப்பாக ஆடுவதாக ஊக்குவித்ததாலும், இந்தக் கலையின் நீண்ட வரலாற்றை அறிந்துகொண்டதாலும், தம் அக்காவிடமே முறைப்படி கரகாட்டத்தைக்‌ கற்று அரங்கேற்றம் செய்ய முடிவெடுத்தார் திருமதி ராஜேந்திரன்.

“இந்தக்‌ கலைமூலம் கிடைத்த வருமானம், பேர் புகழினால் நான் உச்சம் தொட்டிருக்கிறேன்,” என்றார் அவர்.

கரகாட்டக் கலையை மேலும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல இடங்களுக்குச் சென்று மேடையேறத் தொடங்கினார் அவர்.

கரகத்தில் அம்மன் கரகம், அடுக்கு கரகம், பூங்கரகம், ஆட்டக்கரகம், கிளிக் கரகம், சக்தி கரகம், செடிக் கரகம், அக்னிக் கரகம் எனப் பல வகைகள் உண்டு.

தொடர்புடைய செய்திகள்

“பாரம்பரியக் கலையான கரகாட்டம் ஆதியிலிருந்ததற்கும், இடைக்‌காலத்தில் இருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும், பல மாறுபாடுகளைக் கண்டு வந்துள்ளது,” என்றார் திருமதி ராஜேந்திரன்.

ஆதிகாலத்தில் தெய்வ வழிபாட்டில் மட்டும் ஆடி வந்த கரகாட்டத்தை இப்போது யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொண்டு ஆடலாம். ஆனால் பாரம்பரியமான கலையைப் பாரம்பரியமாக முறைப்படி கற்றுக்கொண்டு பாரம்பரியமாகவே வளர்ப்பது அவசியம் என்று கூறினார் திருமதி ராஜேந்திரன்.

அடவிற்கும் தாளத்திற்கும் ஏற்ப கரகம் ஆடும் முறையைத் தவில் வாசிக்‌கும் தம் கணவரிடமிருந்து கற்றுக்‌கொண்டதாக அவர் கூறினார்.

தவில் என்பது நாதஸ்வரத்திற்குப் பக்‌கவாத்தியமாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும்.

18 வயதில் தவிலைத் தூக்கி தோளில் போட்ட திரு ராஜேந்திரன், “22 கிலோ சுமை கொண்ட என் தவிலை இரவு 10 மணிக்‌கு வாசிக்‌க ஆரம்பித்தால், அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து வாசிப்பேன்,” என்று கூறினார்.

உண்மையான பாரம்பரியக் கலைஞர்கள் இக்‌கலையிலிருந்து விலகிவரும் இக்‌காலத்தில், தற்போது பாரம்பரியக் கரகாட்டம் ஆடும் கலைஞர்கள் தமிழகத்தில் 10 பேருக்‌கும் குறைவாகவே இருப்பதாகக் கூறினார் அவர்.

“வெள்ளித்திரையில் ஆடுவதெல்லாம் உண்மையான கரகாட்டமே கிடையாது. கரகாட்டத்தின் உண்மையான வடிவம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்‌கிறது,” என்று ஆதங்கப்பட்டார் திருமதி ராஜேந்திரன்.

குறிப்புச் சொற்கள்