இயற்கை நுண்ணுலகை ஆராய அரிய வாய்ப்பு

இயற்கை நுண்ணுலகை ஆராய அரிய வாய்ப்பு

2 mins read
2d4c64fd-9606-49f6-a3b8-ad43812fd40e
லீ கொங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்திற்கு ‘ஹிடாச்சி’ நிறுவனம் இரவல் தந்துள்ள நுண்ணோக்கிமூலம் எடுக்கப்பட்ட கடற்பாசிப் புகைப்படம். - படம்: ஹிடாச்சி ஏஷியா, லீ கொங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகம்
multi-img1 of 2

தாங்கள் இதுவரை கண்டிராத நுணுக்கத்துடன் இயற்கையை ஆராய பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அரிய வாய்ப்பு.

லீ கொங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகமும் ‘ஹிடாச்சி’ நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ள புதிய முயற்சி அதனைச் சாத்தியமாக்கியுள்ளது.

ஓர் உயிரினத்தை 1,000 மடங்கு நுணுக்கத்தில் காட்டக்கூடிய அதிநவீன ‘ஹிடாச்சி டிஎம்4000பிலஸ் II’ மேசை எதிர்மின்னணு நுண்ணோக்கியை (scanning electron microscope) அரும்பொருளகத்திற்கு இரவல் தந்துள்ளது ஹிடாச்சி.

மே 30ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் அரும்பொருளகம் நடத்தும் ‘அதிசயமான நுண்ணுலகங்களின் இரகசியங்கள்’ எனும் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் நுண்ணோக்கியை இயக்கி, ஆராயலாம்.

மேலும், ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘ஹிடாச்சி’ நிறுவனம், அரும்பொருளகத்துடன் இணைந்து வழங்கும் ‘பல்லுயிர்ச்சூழல் நுண்ணுலகங்கள்’ திட்டம்வழி உயர்நிலை, மேல்நிலை மாணவர்கள் நுண்ணோக்கியை இயக்கும் வாய்ப்பைப் பெறுவர். மாணவர்களால் தொலைவிலிருந்தும் நுண்ணோக்கியை இயக்கமுடியும்.

அரும்பொருளக ஆய்வாளர்கள், கல்வித்திட்டத்திற்கும் ஆராய்ச்சிகளுக்கும் (மாணவர்கள் தொடங்கிய ஆய்வுகள் உட்பட) நுண்ணோக்கியைப் பயன்படுத்தலாம்.

ஹிடாச்சி, தென்கிழக்காசிய அரும்பொருளகக்துடன் கூட்டுமுயற்சியில் ஈடுபடுவது இதுவே முதன்முறை.

‘ஸ்டெம்’ என்றழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பக் கல்வியை மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தை 2017ல் சிங்கப்பூரில் ‘ஹிடாச்சி ஏஷியா’, ‘ஹிடாச்சி ஹைடெக் சிங்கப்பூர்’ இணைந்து அறிமுகப்படுத்தின.

மே 21 முதல் ஜூலை 28ஆம் தேதி வரை அரும்பொருளகத்தில், ‘நேச்சர் ரீமிக்ஸ்டு’ எனும் தற்காலிக ஒலிஒளிக் காட்சிக்கூடத்தில் ஹிடாச்சி நுண்ணோக்கியைக் காணலாம்.

இயற்கையோடு இணைக்கும் செயற்கை நுண்ணறிவுப் புகைப்படங்கள்

‘நேச்சர் ரீமிக்ஸ்டு’ கூடத்தில் ‘சிஸ்ட்ரம்’ கலைக்குழு வழங்கும் இரு கலைப் படைப்புகளும் உள்ளன.

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டக் கற்பனை உயிரினங்களைப் புகைப்படங்களோடு ஒலிஒளிக் காட்சியாகச் சித்திரிக்கிறது ‘நேச்சர் ரீமிக்ஸ்டு’ காட்சிக்கூடம்.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டக் கற்பனை உயிரினங்களைப் புகைப்படங்களோடு ஒலிஒளிக் காட்சியாகச் சித்திரிக்கிறது ‘நேச்சர் ரீமிக்ஸ்டு’ காட்சிக்கூடம். - படம்: ஹிடாச்சி ஏஷியா, லீ கொங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகம்

முதல் படைப்பு, 19ஆம் நூற்றாண்டு தென்கிழக்காசியத் தரவுகள்மூலம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டக் கற்பனை உயிரினங்களைச் சித்திரிக்கிறது. அவை புகைப்படங்களாகக் காகிதத்திலும் ‘அக்ரிலிக்’கிலும் அச்சடிக்கப்பட்டுள்ளன.

புகைப்படங்களின் அருகே வரும்போது அவை, ஒலி ஒளிமூலம் உயிர்பெறுகின்றன. அவற்றுக்கு natureremixed.com இணையத்தளத்தில் மக்கள் பெயரிட்டு மகிழலாம்.

“2022லிருந்து உருபெற்றுவரும் இப்படைப்பு, சென்ற ஆண்டு தென்கொரியாவின் சோல் நகரிலும் இடம்பெற்றது,” என்றார் ‘சிஸ்ட்ரம்’ குழுவின் இசையமைப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன். காடுகளில் எழும் ஒலிகளை விதவிதமாக மாற்றியமைத்து அவர் இப்படைப்புக்கு வழங்கியுள்ளார்.

கடற்பாசியை நுணுக்கமாக ஆராயும் வாய்ப்பை மக்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்குகிறது  ஹிடாச்சி நுண்ணோக்கி.
கடற்பாசியை நுணுக்கமாக ஆராயும் வாய்ப்பை மக்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்குகிறது ஹிடாச்சி நுண்ணோக்கி. - படம்: ஹிடாச்சி ஏஷியா, லீ கொங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகம்

இரண்டாம் படைப்பு, ஹிடாச்சி நுண்ணோக்கிமூலம் கிடைத்த கடற்பாசிப் புகைப்படங்களோடும் பலவித ஒலிகளோடும் செய்யப்பட்ட ஆறு நிமிட 15 நொடிக் காணொளி.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுஇயற்கை