வனவிலங்குத் தோட்டங்களில் விடுமுறை கொண்டாட்டம்

வனவிலங்குத் தோட்டங்களில் விடுமுறை கொண்டாட்டம்

2 mins read
c9b14b99-20de-43ae-a2ea-426ebdae9f0b
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், மண்டாய் வனவிலங்குக் காப்பகம் போன்றவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மே 24 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும்.  - படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்

இந்த ஆண்டின் பள்ளி விடுமுறைக் காலத்தின்போது, மே 24 முதல் செப்டம்பர் 8 வரை, சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், மண்டாய் வனவிலங்குக் காப்பகம் போன்றவற்றில் அனைவரும் ஈடுபடும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ‘ஸூலிம்பிக்ஸ்’ மீண்டும் திரும்பியுள்ளது.  

மே 25 முதல் ஆகஸ்ட் 25 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி, சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திலும் ரிவர் வொண்டர்சிலும் நடைபெறும். 

விளையாட்டு உணர்வையும் இயற்கையின் அதிசயங்களையும் இணைக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. 

அரியவகை விலங்குகள் பற்றியும், நீரில் வாழும் மீன் வகைகள் பற்றியும், பங்கேற்பாளர்கள் கண்டு அறியலாம். 

இந்த சுவாரசியமான நடவடிக்கைகளில் அனைத்து வயதில் இருப்பவர்களும் ஈடுபட வரவேற்கப்படுகிறார்கள்.

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திலும் ரிவர் வொண்டர்சிலும் ‘சாம்பியன்ஸ் கிராமத்தில்’ ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

வனவிலங்குப் பூங்காக்கள் முழுவதும் பலவிதமான நடவடிக்கைகளை முடிப்பதுடன், பார்வையாளர்கள் பரிசுகளையும் பெற்றுக்கொள்ளலாம். 

அவர்கள் செய்த சாகசங்களின் நினைவாக இவை அமையும். இந்த நடவடிக்கையில் எல்லா வயதினரும் பங்கெடுக்கலாம். 

அது மட்டுமல்லாமல், 30ஆம் ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடும் ‘நைட் சஃபாரி’ல், மே 24 முதல் செப்டம்பர் 8 வரை, கடந்த ஆண்டுகளில் பூங்காவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பார்வையாளர்கள் கண்டு அறியலாம்.

உலகின் முதல் இரவு நேர விலங்கியல் தோட்டமான இது 30 ஆண்டுகளைக் கொண்டாடுவதால், உள்ளூர்வாசிகளுக்கு மே 17 முதல் ஜூன் 23 வரை, $30 நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

பூங்காவின் சாதனைகளைப் பற்றி அறியவும், பூங்காவைப் பற்றி அதிகம் அறியப்படாத கதைகளையும் நினைவுகளையும் கண்டறியவும், ‘நைட் சஃபாரி’ஐச் சுற்றிப் பார்க்க, பங்கேற்பாளர்கள் மின்னிலக்கப் பாதையைப் பயன்படுத்தலாம்.

மற்றோர் அம்சமாக பறவைகளைச் சந்திக்கும் வாய்ப்பை பொதுமக்கள் மே 31 முதல் ஜூன் 30 வரை பெறலாம்.

பறவைகள் மகிழ்வனத்தில் (பேர்ட்ஸ் பேரடைஸ்) வருகையாளர்கள், ‘மீட் தி ஃப்ளாக்’ எனும் புதிய அங்கம் ஒன்றில் ஈடுபட முடியும். இது ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பறவை இனத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும். 

மேல் விவரங்களுக்கு மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் இணையத்தளத்தை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்