தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பம், மின்னிலக்கச் சேவைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிங்கப்பூரின் என்பிஎஸ் அனைத்துலகப் பள்ளிக்கு ஏப்ரல் 29ஆம் தேதி வருகையளித்தார்.
அப்போது மாணவர்களிடம் உரையாற்றிய டாக்டர் தியாகராஜன், தமது கல்விப் பயணம், தொழில்நுட்ப வளர்ச்சி, தாம் மேற்கொள்ளும் பணிகளைப் பற்றிப் பேசியபோது, அவரது பயணம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மாணவர்களிடத்தில் ஆர்வம் அதிகரித்தது.
கல்வி, தொழில்நுட்பம், பன்னாட்டுப் பயணங்கள் குறித்து டாக்டர் தியாகராஜனிடம் கேள்வி கேட்க மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதால் பல கலாசாரங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்ததாகவும் அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட அனுபவங்களை அளித்ததாகவும் டாக்டர் தியாகராஜன் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு மனிதர்களை விஞ்சிவிடுமா எனக் கேட்டதற்கு, மனிதத் தன்மையை விஞ்சாது என அவர் பதிலதித்தார்.
எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பதை அவர் எடுத்துரைத்தார். அதன் சிறந்த பயன்பாட்டிற்கு, சமமான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறு மாணவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் புதிய கண்ணோட்டங்களை டாக்டர் தியாகராஜன் வழங்கினார். அவர் அளித்த பதில்கள், மாணவர்களின் கற்றல் பயணத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தன.

