வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மேலும் 18 பேர், ‘இந்தியன் ஹால் ஆஃப் ஃபேம் சிங்கப்பூர்’ எனும் சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரின் பழம்பெரும் வர்த்தகரும் சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபையின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான அமரர் ஹர்டியால் சிங் பஜாஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
எஸ்ஆர்சி எனப்படும் சிங்கப்பூர் பொழுதுபோக்கு மன்றத்தில் சனிக்கிழமை (மே 25) மாலை நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் விருதாளர்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் முன்னிலையில் மேடைக்கு அழைக்கப்பட்டு விருது, சான்றிதழ், பொன்னாடை வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த விருது நிகழ்ச்சி, தற்போது மூன்றாவது முறையாக நடந்தேறியுள்ளது.
2020ல் தொடங்கப்பட்ட அந்தப் பட்டியலில் இந்த 18 சாதனையாளர்களுடன் மொத்தம் 120 பேர் இடம்பெறுகின்றனர்.
1905ல் இந்தியாவில் கன்கா டோக்ரானில் பிறந்த திரு ஹர்டியால் சிங், பிறகு மலாயாவுக்கும் அதன் பிறகு சிங்கப்பூருக்கும் வந்தார். ஜப்பானியப் படையெடுப்புக் காலத்தில் ஜப்பானிய ஆட்சியாளர்கள் கையில் அவதிப்பட்டிருந்தபோதும் அவர் கடைப்பிடித்த நன்னெறிகளைக் கைவிடவில்லை என்று விருதை அவர் சார்பாகப் பெற்ற கொள்ளுப்பேரன் திரு ஏ ஜே சிங் பஜாஜ் கூறினார். திரு ஹர்டியால் சிங் 1967ல் உயிர் நீத்தபோது அவருக்கு வயது 62.
காலஞ்சென்ற உடற்கட்டழகுக் கலைஞர் எஸ் கே ராமச்சந்திராவுக்கும் கௌரவம் அளிக்கப்பட்டது.
திடல்தட விளையாட்டுத் துறையிலிருந்து சாந்தி பெரேரா, யு கே ஷியாம், கே ஜெயமணி, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி குர்சரன் சிங், தொழிலதிபர்கள் முகம்மது அப்துல் ஜலீல், டாக்டர் டி சந்துரு, பரதநாட்டிய கலைஞர்கள் உஷாராணி மணியம், கவிதா கிருஷ்ணன், எடை தூக்கும் வீரர் சர்விந்தர் சிங் சோப்ரா, ஊடகவியலாளர் விஸ்வா சதாசிவன், சுகாதாரத்துறை முன்னோடி டாக்டர் உமா ராஜன், சுகாதாரத் துறை முன்னோடி டாக்டர் வி பி நாயர், சட்டத்துறையிலிருந்து திரு சத்பால் கத்தார், பொறியியல் துறையின் சார்பில் ஏ பி கோபிநாத் மேனன், காற்பந்துத் துறையிலிருந்து ரோய் கிருஷ்ணன், கோல்ஃப் விளையாட்டுத் துறை சார்பில் சேம்சன் கிப்சன் ஆகியோர் விருதளித்து கெளரவிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
விருது பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்த திரு விஸ்வா சதாசிவன், நாடளவில் அங்கீகாரம் பெற்றிருந்தபோதும் இந்தியச் சமூகத்திலிருந்து அங்கீகாரம் பெறுவதில் தனிப்பட்ட மகிழ்ச்சியை உணர்வதாகக் கூறினார்.
“இந்தியச் சமூகம் இவ்வாறு ஒன்றுசேர்ந்து சாதனையாளர்களைக் கெளரவிக்கும் இந்த முயற்சி நம் ஒற்றுமையைக் காட்டுவதாகக் கருதுகிறேன்,” என்று முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விஸ்வா கூறினார்.
தற்போதைய சாதனையாளர்கள் மட்டுமின்றி முன்னோடிகளையும் நினைவில் கொண்டு இவ்வாறு கெளரவிப்பது பாராட்டப்படவேண்டிய முயற்சி என்று சுகாதாரத் துறை முன்னோடியான டாக்டர் உமா ராஜன், 83, தெரிவித்தார்.
இந்த அங்கீகாரத்துக்கு இந்திய சமூகம் சிறந்த வரவேற்பைக் கொடுத்து வருவதாக புகழ்பெற்ற இந்தியர் பட்டியல் அமைப்பின் தலைவர் திரு எஸ்.ஏ. நாதன் தமிழ் முரசிடம் கூறினார்.
“இம்முறை சாதனையாளர்களில் சிலரை நல்லெண்ணத் தூதர்களாகவும் நியமித்துள்ளோம். சாதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய மதிப்பைப் பெற்றுத் தருவதில் இவர்கள் பங்காற்றவுள்ளனர்,” என்று முன்னைய இந்தியன் மூவி நியூஸ் சஞ்சிகையை வழிநடத்தியவருமான திரு எஸ்.ஏ.நாதன் கூறினார்.