ஆசியான் போட்டிகளுக்கு மாணவர்கள் ஆயத்தம்

ஆசியான் போட்டிகளுக்கு மாணவர்கள் ஆயத்தம்

2 mins read
08d748a4-938e-4bb0-ba01-919b14782be7
போட்டிகளில் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கும் சிங்கப்பூர் மாணவ விளையாட்டு வீரர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

24 பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ விளையாட்டு வீரர்கள், வியட்னாமின் டா நாங் நகரில் மே 31 முதல் ஜூன் 9ஆம் தேதி வரை நடக்கும் 13வது ஆசியான் பள்ளி விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ளனர்.

அவர்கள் திடல்தடப் போட்டிகள், பூப்பந்து, கூடைப்பந்து, நீச்சல் என நான்கு விளையாட்டுகளில் போட்டியிடுவர்.

இப்போட்டிகளுக்காக அவர்கள் மே 29ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து புறப்படுவர்.

மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி, மே 21ஆம் தேதி செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

“கடினமான உலகப் புவிசார் அரசியல் சூழலிலும் இப்போட்டிகள் நடைபெறுவது, ஆசியான் நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையைச் சித்திரிக்கிறது,” என்றார் சிறப்பு விருந்தினரான கல்வி மற்றும் வெளியுறவு இரண்டாம் அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான்.

விளையாட்டு வீரர்கள் சிலருடன் சிறப்பு விருந்தினரான கல்வி மற்றும் வெளியுறவு இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் (பின்வரிசை நடுவில்).
விளையாட்டு வீரர்கள் சிலருடன் சிறப்பு விருந்தினரான கல்வி மற்றும் வெளியுறவு இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் (பின்வரிசை நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2019க்கு அடுத்து இப்போட்டிகள் நடைபெறுவது இதுவே முதன்முறை. ‘பிரகாசிக்க இணைதல்’ என்பதே இவ்வாண்டின் கருப்பொருள். 10 ஆசியான் நாடுகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவ விளையாட்டாளர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்வர்.

14.1 மீட்டர் இலக்கு

ஏற்கெனவே இருமுறை உயரம் தாண்டுதலில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துள்ளார் விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவர் விரேஷ் குமார், 17.

1.85 மீட்டர் உயரத்தைத் தாண்டி, 2023 டிரின்பாகோ காமன்வெல்த் இளையர் போட்டிகளில் 12ஆவது நிலையையும் 2023 தாய்லாந்து தென்கிழக்காசிய இளையர் திடல்தடப் போட்டிகளில் ஏழாவது நிலையையும் பிடித்தார் விரேஷ். 2023 தேசிய பள்ளி ‘பி’ பிரிவு போட்டிகளில் 1.90 மீட்டர் உயரம் தாண்டி முதல் நிலையையும் எட்டியவர்.

வியட்னாமில் விரேஷ் மும்முறை தாவி நீளம் தாண்டுதலில் பங்கேற்க உள்ளார். அண்மைய தேசிய பள்ளிப் போட்டிகளில் மும்முறை தாவி நீளம் தாண்டுதலில் வெற்றிபெற்றதால் அவருக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.

இதுவரை மும்முறை தாவி நீளம் தாண்டுதலில் 13.61 மீட்டர் தூரம் வரைத் தாண்டியுள்ள விரேஷ், வியட்னாமில் 14.1 மீட்டரைக் குறிவைக்கிறார்.

என் பயிற்சி, 14.1 மீட்டர் தாண்ட என்னால் முடியும் என நம்பிக்கையளித்துள்ளது.
மும்முறைத் தாண்டுதலில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ள விரேஷ் குமார், 17.

கடுமையான போட்டியை முறியடிக்கக் குறி

12 பேர் கொண்ட ஆண்கள் கூடைப்பந்து அணியில் ஆங்கிலோ சீனத் தொடக்கக் கல்லூரியின் இஷான் கோல், 17, மற்றும் நீ ஆன் உயர்நிலைப் பள்ளியின் ஷபிர் அகம்மது ஷாஜான், 16, உறுப்பினர்களாவர்.

சென்ற ஆண்டு அணியின் துணைத் தலைவராக இருந்த இஷான், இவ்வாண்டு தலைவராக முன்னேறியுள்ளார். அணியில் ஐந்தே இடங்கள் எஞ்சியிருந்த நிலையில், இவ்வாண்டு புதிதாக நுழைந்தார் ஷபிர்.

“மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகள் எங்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கும்,” என்றார் ஷபிர்.

“எங்கள் அணி தயாராக உள்ளது. இப்போட்டிகளில் பதக்கம் வெல்வோம் என நம்புகிறோம்,” என்றார் இஷான்.

குறிப்புச் சொற்கள்