எல்லோருக்கும் ஒரு காலகட்டத்தில் தனியே பயணிக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படலாம். கல்லூரியில் படிக்கும்போதோ பிற்காலத்தில் வேலைக்குச் செல்லும்போதோ இந்நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
தனியாகச் சுற்றுப்பயணம் செல்வது சிலருக்கு அச்சத்தைத் தரலாம், குறிப்பாக முதன்முறை பயணிப்பவர்களுக்குத் தயக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.
அவ்வாறு தனியாகப் பயணிக்கும்போது பாதுகாப்பான, சுவாரசியமான அனுபவத்தைப் பெறுவதற்குச் சில குறிப்புகளைத் தெரிந்துகொண்டால் மிகவும் உதவியாகயிருக்கும்.
முன்கூட்டியே திட்டமிடல்
பயணத்திற்குக் கிளம்பும்முன் செல்லவிருக்கும் சுற்றுலாத் தலங்கள், வழக்கமான போக்குவரத்து முறைகள், தங்குமிடத்திலிருந்து சுற்றிப்பார்க்கக் போகும் இடங்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளன, எவ்வளவு பணம் தேவைப்படும், செல்லும் வாகனம், உணவகங்களின் முகவரி போன்றவற்றைத் தெரிந்து வைத்திருந்தால் பணத்தையும் நேரத்தையும் சேமிக்கலாம்.
எடுத்துச் செல்ல வேண்டியவை
சுற்றுலாவிற்குத் தேவைப்படும் பொருட்களைக்கொண்ட ஒரு பட்டியலை உருவாக்கவும். அதில் ஒவ்வொரு பொருளையும் எழுதும்போது, ‘இது அவசியமா?’ என்ற கேள்வியைக் கேட்டு தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தூக்கிச் செல்ல வேண்டிய பொருள்களின் எடை நிச்சயமாக குறையும்.
தண்ணீர்ப் புட்டி, வெளியூர் சிம் அட்டை, பணம், கடவுச்சீட்டு, பயண ஆவணங்கள், தொழில்நுட்பக்கருவிகள், மருந்து, ஆடை, குளியல் பொருள்கள் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
தங்குமிடம்
தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது செலவை மட்டும் பார்க்காமல் இதற்கு முன் அந்த விடுதியில் தங்கிய வாடிக்கையாளர்களின் இணைய மதிப்பீட்டைப் படிக்க வேண்டும். மேலும், நகர எல்லை அல்லது ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடங்களில் தங்கும்போது அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
விலை அதிகமாகவுள்ள தங்குமிடங்கள் அனைத்தும் நல்ல இடங்கள் இல்லை. அதே சமயத்தில் காசு குறைவாக இருந்தால் அந்த விடுதி மோசமானது என்றும் சொல்ல முடியாது. நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீடுகளில் தங்க முடிந்தால் மேலும் சிறப்பு.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்பு
புதிய நாடுகளுக்குத் தனியாகப் பயணம் செய்யும்போது இரவில் நீண்ட நேரம் வெளியில் சுற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், செல்லும் ஊரில் தெரிந்த ஒருவரின் தொலைபேசி எண்ணையும் அந்த ஊரின் அவசரகால தொலைபேசி எண்களையும் தெரிந்து வைத்துக்கொள்ளவும்.
வெளியில் செல்லும்போது தேவையான அளவு மட்டுமே பணத்தைக் கையில் வைத்துக்கொள்வது முக்கியம். அந்தப் பணத்தைப் பாதுகாப்பான முறையில் பையில் மறைத்து வைத்து எடுத்துச் செல்லவும்.
தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்குத் தங்கள் பையில் ‘மிளகுத் தூள் ஸ்ப்ரே’யை வைத்துக் கொள்வதும் நல்லது.

