தமிழ் மரபு, கலாசாரம், விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியைக் கையிலெடுத்துள்ளனர் ‘தமிழா’ அமைப்பைச் சேர்ந்த இளையர்கள்.
மரபுகள், பொது அறிவு, கலைகள், இலக்கியம் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் அமைந்த ‘வினாடி வினா’, தாயம் உருட்டி விளையாடும் ‘பரமபதம்’ ஆகியவற்றை இணைத்து ‘தாயம்’ விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.
நற்பணிப் பேரவை, தேசிய நூலகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, உட்லண்ட்ஸ் தேசிய நூலகக் கட்டடத்தில் கடந்த மே 26ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் தொலைக்காட்சிப் பிரபலங்கள் வடிவழகன்-விக்னேஸ்வரி தம்பதியர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
முதல் சுற்றில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த இளையர்கள் 32 பேர், இருவர் கொண்ட 16 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டியிட்டனர். அதில் வென்ற நால்வர் அரையிறுதிச் சுற்றுக்கும் அதிலிருந்து இருவர் இறுதிச் சுற்றுக்கும் தகுதிபெற்றனர்.
வெற்றி பெற்ற குழுவுக்கு $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற சௌமியா திருமேனி, 21, ஷபினா, 20, இருவரும் இப்போட்டியில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். தமிழ் இலக்கிய, இலக்கணம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை இப்போட்டி தூண்டியதாக அவர்கள் கூறினர்.
மற்றொரு போட்டியாளரான தேசிய சேவையாற்றும் ரிஷி பாலகிருஷ்ணன், “பொதுவாக வினாடி வினாப் போட்டிகள் சற்று பதற்றமாக இருக்கும். ஆனால் இப்போட்டி கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இது ஒரு வித்தியாசமான அனுபவம், என்று சொன்னார்.
கடந்த ஈராண்டுகளாக இப்போட்டியை ‘தமிழா’ அமைப்பினர் நடத்தி வருவதாகக் கூறிய அதன் கலாசாரக் குழு இயக்குநர் க்ரிஷ்மிதா, 20, இளையர்களிடம் கலைநயத்துடன் கூடிய தமிழ் விளையாட்டையும் தமிழ் மொழி, மரபுக் கூறுகளையும் கொண்டுசெல்லும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வமைப்பைச் சேர்ந்த ஐவர் இணைந்து செயல்பட்டு இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியதாக கூறிய அவர், இப்போட்டி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் நம்புவதாகக் கூறினார்.