தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கலந்துரையாடிய சமூக ஆர்வலர்கள்

பல்லின சமூக அடையாளத்தை வலியுறுத்திய சஜர்னர்ஸ் விழா

2 mins read
396ba1f1-1ffb-4609-b3a9-2b3a65305244
மற்ற இனத்தாரின் உணவுகளை உண்பதோடு நின்றுவிடுகிறோம்; ஆனால் அதையும் தாண்டி, பண்பாடுகள் ஒன்றோடொன்று ஊடாடவேண்டும் என்றார் திரு அருண் மகிழ்நன். - படம்: டையலாக் செண்டர்
multi-img1 of 3

சிங்கப்பூரின் பல்லின, பல சமய அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்கில் சஜர்னர்ஸ் (II) விழா மே 24 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. அதற்கு ‘டையலாக் சென்டர்’ ஏற்பாடு செய்தது.

விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ‘பல பண்பாடுகள் சங்கமிக்கும் சிங்கப்பூரின் வேர்களும் கிளைகளும்’ என்ற கலந்துரையாடல் சிங்போஸ்ட் அரங்கில் வெள்ளிக்கிழமை (மே 24) இரவு நடைபெற்றது. அதற்கு சுமார் 100 பேர் வந்திருந்தனர்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவரும் கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வு ஆலோசகருமான அருண் மகிழ்நன், விழாக்களும் கலைகளும் தயாரிக்கும் ஆட்ரீ பரேரா மற்றும் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளரும் வரலாற்றாசிரியருமான முனைவர் ஹோ சி டிம் இருவரும் கலந்துரையாடினர்.

கலந்துரையாடலை ‘ஹேஷ்.பீஸ்’ நிறுவனர் நஸ்ஹத் ஃபஹீமா வழிநடத்தினார்.

இனப் பாகுபாட்டால் ஏற்பட்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என கலந்துரையாடல் ஆராய்ந்தது.
இனப் பாகுபாட்டால் ஏற்பட்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என கலந்துரையாடல் ஆராய்ந்தது. - படம்: டையலாக் செண்டர்

“சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்கப்பூரில் சீனர், மலாய்க்காரர், இந்தியர், பிறர் என்ற பிரிவுகளின் அடிப்படையில் சமூகம் இயங்குவது நம் பண்பாட்டுப் புரிதலுக்கு உதவியுள்ளதா, இடையூறு விளைவித்துள்ளதா?” என்ற கேள்வியோடு தொடங்கினார் திருவாட்டி நஸ்ஹத்.

“ஆங்கிலேய காலத்திலிருந்தே இன அடிப்படையில் பிரிவுகள் இருந்தன. இவை அன்றும் இன்றும் என்றும் நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கியுள்ளன. “பிறர் என்ற பிரிவு சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், சிங்கப்பூரிலுள்ள கிட்டத்தட்ட 100 இனங்களையும் தனித்தனிப் பிரிவுகளாக்கினால் எப்படி நிர்வகிப்பது?” என்றார் திரு அருண் மகிழ்நன்.

சிங்கள வேர்களைக் கொண்ட ஆட்ரீ, சிங்களத்தைத் தன் இன அடையாளமாக அதிகாரபூர்வமாக பதிவுசெய்வதில் சந்தித்த சவால்களை விவரித்தார். சில தாய்மொழிகளே பள்ளிகளில் கற்பிக்கப்பட்டதால் மற்ற பண்பாடுகளைப் பற்றிய அறிதல் குறைந்ததாகவும் அவர் சொன்னார்.

சிறுபான்மை இனத்தாரின் பாரம்பரியக் கலைகள் பெரும்பான்மையினரை சென்றடையாததால் அவர்களுக்கு ஆதரவாளர்கள் கிடைப்பதில்லை என்றார் ஆட்ரீ.

இன்றும் இந்தியர்-இந்து, மலாய்-முஸ்லிம் ஆகியவற்றுக்கிடையேயான வேற்றுமைகளை அறிவதில் அடிப்படைத் தவறுகளைச் செய்கிறோம் என்பதை அவர் சுட்டினார்.

அடையாள அட்டையிலிருந்து இனத்தை அகற்றவேண்டும் என முன்பு தான் பரிந்துரைத்திருந்ததாகவும், அவ்வாறு செய்தால் சிறுபான்மை இனத்தார் பாதிக்கப்படுவர் என உணர்ந்ததாகவும் நினைவுகூர்ந்தார் முனைவர் ஹோ. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை விற்க சிறுபான்மை இனத்தார் சந்திக்கும் சவால்களையும் அவர் எடுத்துரைத்தார்.

“பண்பாட்டுப் புரிதலுக்கும் மக்களுக்கும் இடையே இன்னும் இடைவெளி நிலவுகிறது. உதாரணத்திற்கு, சீனர் என்ற அடையாளத்தைத் தாண்டி ‘கேன்டனீஸ்’, ‘ஹாக்கியேன்’ என்றால் என்ன என்பதை அறிய மக்கள் முயலவேண்டும்,” எனக் கூறி கலந்துரையாடலை முடித்துவைத்தார் திருவாட்டி நஸ்ஹத்.

ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மைய உறுப்பினர்களில் சிலர்.
ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மைய உறுப்பினர்களில் சிலர். - படம்: டையலாக் செண்டர்

நிகழ்ச்சிக்கு வருகையளித்த முன்னாள் அமைச்சர் யாக்கோப் இப்ராஹிம், தன் சொந்த பிள்ளைகளின் அடையாள நெருக்கடியை எடுத்துக்காட்டாக சுட்டி, இதுபோன்ற சவால்களை அடுத்த தலைமுறையினர் எதிர்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார்.

பண்பாட்டுப் புரிதலுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளி இன்னும் நிலவுகிறது. சீனர் எனும் அடையாளத்தைத் தாண்டி ‘கேன்டனீஸ்’, ‘ஹாக்கியேன்’ என்றால் என்ன என்பதை அறிய மக்கள் முயல வேண்டும்.
நஸ்ஹத் ஃபஹீமா

விழாவின் ஓர் அங்கமாக, மே 25ஆம் தேதி பல்லின சிங்கப்பூரில் வாழும் சவால்களைச் சித்திரிக்கும் நாடகமும் மே 26ஆம் தேதி சீக்கிய நிலையம், மதரசா அல்ஜுனித், ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

குறிப்புச் சொற்கள்