உன்னி மேனனுடன் பாடும் வாய்ப்பைப் பெறும் சிங்கப்பூர் பாடகர்கள்

உன்னி மேனனுடன் பாடும் வாய்ப்பைப் பெறும் சிங்கப்பூர் பாடகர்கள்

2 mins read
84a2d87e-770c-43b6-8d53-910b8741eacf
பெரியவர் பிரிவில் இறுதிச் சுற்றில் பாடிய ஐவர். (இடமிருந்து) வெற்றியாளர்கள் திருப்புரசுந்தரி, தாட்சாயணி, ஷிவானி, அஷ்வதி, துஷ்யந்த். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

மாஸ்க் ஸ்டூடியோஸ் ஏற்பாடு செய்த ‘அல்டிமேட் பாடகர் 2.0’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெற்ற இறுதிச் சுற்றில், 16 வயது முதல் 60 வயது வரை உள்ள பெரியவர் பிரிவில் முதல் பரிசை வென்றார் திருப்புரசுந்தரி எஸ், 39. அவர் சிறுவர்களுக்குக் கர்நாடக இசை சொல்லிக் கொடுப்பதோடு, சென்னையில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 4’ல் சிறந்த 20 பாடகர்களில் ஒருவராக அவர் விளங்கினார்.

ஆறு வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் பிரிவில் முதல் பரிசை வென்றார் சம்ரிதி சஞ்ஜீபன், 10. அவர் ஐந்து வயதிலிருந்து கர்நாடக இசையைக் கற்று வந்துள்ளார். இறுதிச் சுற்றில் ‘ராசாவே’, ‘நாளை இந்த வேளை’ ஆகிய பாடல்களை மிக அழகாகப் பாடினார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘கேபிட்டொல்’ அரங்கில் நடைபெறவுள்ள ‘சிங்கப்பூரில் நேரடியாக உன்னி மேனன்’ இசை நிகழ்ச்சியில் அவர்கள் பிரபல பின்னணிப் பாடகர் உன்னி மேனனுடன் சேர்ந்து பாடவுள்ளனர்.

சிறுவர் பிரிவில் இரண்டாம் நிலையில் ஒன்பது வயது மானசா தீபனும் மூன்றாம் நிலையில் பத்து வயது தயாளகுணதாசன் அனந்தசயனும் வந்தனர். அவர்களும் சம்ரிதியும் உன்னி மேனன் இசை நிகழ்ச்சியின் தொடக்கப் பாடலை பாடுவர்.

“சிறு பிள்ளைகள் தங்களது வயதுக்கேற்ற பாடல்களையே எடுக்கவில்லை. இது சாதாரண விஷயமல்ல. சிங்கப்பூரில் அவ்வளவு திறன் கொட்டிக் கிடக்கிறது,” என்றார் நடுவர்களில் ஒருவரான பரசு கல்யாண்.

பெரியவர் பிரிவில் இரண்டாம் நிலையை துஷ்யந்த் மாதவனும் மூன்றாம் நிலையை தாட்சாயணியும் கைப்பற்றினர். இறுதிச் சுற்றுக்கு அவர்களுடன் அஷ்வதி அருண், ஷிவானி ஹரிஹரன் இருவரும் தகுதிபெற்றிருந்தனர்.

ஐவரும் உன்னி மேனன் இசை நிகழ்ச்சியின் இரண்டாம் பாடலைப் பாடுவர்.

பிரபல சென்னை இசைக் கலைஞர் மெளன ராகம் முரளி மற்றும் இசைக் குழுவினர், பாடகர்கள் வர்ஷா கிருஷ்ணன், பி ஆர் கிருஷ்ணா, ஸ்ரீநிஷா ஜெயசீலன் ஆகியோரும் உன்னி மேனன் இசை நிகழ்ச்சியில் பாடுவர்.

நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை https://sg.bookmyshow.com/e/UNNILIVE இணையத்தளத்தில் வாங்கலாம். ஜூன் 2ஆம் தேதி வரை ‘MSEB15’ கடவுச்சொல்வழி 15% தள்ளுபடியைப் பெறலாம்.

பல வார உழைப்புக்கு உகந்த பலன்

ஜனவரி 1 முதல் மார்ச் 17ஆம் தேதி வரை ‘அல்டிமேட் பாடகர் 2.0’ போட்டிக்கு, இரு பிரிவுகளிலும் கிட்டத்தட்ட 50 பேர் தாம் பாடிய காணொளிகளை அனுப்பியிருந்தனர். அவர்களில் 26 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்.

இரு தகுதிச் சுற்றுகள், காலிறுதி மற்றும் நேரடி அரையிறுதி, இறுதிச் சுற்றுகளுக்குப் பின்னர் வெற்றியாளர்கள் வாகைசூடியுனர்.

அவ்வளவு திறன் சிங்கப்பூரில் தேங்கிக் கிடக்கிறது.
நடுவர் பரசு கல்யாண்
போட்டியின் சிங்கப்பூர் நடுவர்கள் (இடமிருந்து) மோகன் ராமகிருஷ்ணன், பரசு கல்யாண், லாவண்யா சம்பத். இந்தியாவின் மெளன ராகம் முரளியும் நடுவராக இருந்தார்.
போட்டியின் சிங்கப்பூர் நடுவர்கள் (இடமிருந்து) மோகன் ராமகிருஷ்ணன், பரசு கல்யாண், லாவண்யா சம்பத். இந்தியாவின் மெளன ராகம் முரளியும் நடுவராக இருந்தார். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்