தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவறிழைக்கத் தயங்கும் பெண் பிள்ளைகள்: ஆய்வு

3 mins read
c57da2cd-21d4-4af9-a8d7-40aca73e974f
இளம் வயதில் தன்னம்பிக்கை அதிகமாக இருந்தாலும் வயது ஏற ஏற அது குறைவதைப் பெண் பிள்ளைகள் உணர்வதாக இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. - படம்: பிக்சா பே

முழுமையாக ஒரு வேலையை முடிப்பதில் ஆண் பிள்ளைகளைவிட பெண்களே மன அழுத்ததிற்கு ஆளாவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த நிலைக்கு பரிபூரணவாதம் (Perfectionism) என்று பெயர்.

குழந்தைகளுக்கான கட்டுமான விளையாட்டுப் பொருள்களைத் தயாரிக்கும் அனைத்துலக நிறுவனமான ‘லெகோ’, 36 நாடுகளைச் சேர்ந்த 61,500 பெற்றோர், பிள்ளைகளிடம் இந்த ஆய்வை நடத்தியது.

பரிபூரணவாதத்தால் சிறுமிகள் ஐந்து வயதிலிருந்தே மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும், இதனால் தங்களது படைப்பாற்றலில் அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை பாதிப்படைவதாக தெரியவந்துள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் ஐவரில் மூவர் இவ்வகை மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், அன்றாடம் காதில் விழும் சொற்கள் தவறிழைப்பது குறித்த பயத்தையும் புதிய முயற்சி மேற்கொள்வதில் தயக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெண் பிள்ளைகள் தவறு செய்யத் தயங்குவதால் அவர்களின் யோசனைகளை விரிவுபடுத்துவதிலும் கருத்துகளை வெளிப்படுத்துவதிலும் தடங்கல் ஏற்படுவதாக ஆய்வில் பங்கெடுத்த பெற்றோர் கூறினர்.

வேலைகளைக் குறையில்லாமல் செய்ய வேண்டிய மனப்போக்கு ஆண் பிள்ளைகளைவிட பெண்களுக்கு அதிகம் இருப்பதாகப் பெற்றோர் கருதினர்.

இந்த மனநிலையைக் கொண்டிருப்பது சவால்களை எதிர்கொள்ள உதவும் என்றாலும், வேலையைக் குறையில்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என மனநல நிபுணர்கள் சொல்கின்றனர்.

இத்தகைய எண்ணம் கொண்டிருப்போருக்கு சிறு குறைகளும் பெரிய தோல்வியைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

சில பெண்களுக்கு குடும்பம், சமூகம் ஏற்படுத்தும் அழுத்தம் இல்லாமல் தங்களுக்குத் தானே அழுத்தம் ஏற்படுத்திக் கொள்வதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

சுய அழுத்தம், சமூக நெருக்குதல் என இரண்டின் காரணமாகவும் வேலையைக் குறையில்லாமல் செய்ய வேண்டிய அழுத்தம் தமக்கு ஏற்பட்டதாக தமிழாசிரியை சரீனா பானு சொன்னார்.

தாம் சிறந்து விளங்கியபோதும் தமது சாதனைகளைவிட தம் சகோதரர்களின் சாதனைகளே பெற்றோரால் அதிகம் பாராட்டப்பட்டது என்பதை அவர் சுட்டினார்.

பொதுவாக இந்திய சமூகத்தில் பெற்றோர் சிலரிடம் இவ்வகை பாகுபடுத்தும் மனநிலையைப் பார்க்க முடிவதாக ஆசிரியை சரீனா கூறினார்.

இவை அனைத்தையும் அனுபவத்தில் கண்டு வளர்ந்ததால், வகுப்பு மாணவர்கள் அனைவரையும் ஒரே மாதிரி பார்ப்பது, தோல்விகளை ஏற்று அதிலிருந்து பாடம் கற்க சொல்லிக் கொடுப்பது, படைப்பாற்றல் உள்பட எல்லாவித திறன்களுக்கும் சம மதிப்பளிப்பது, பாராட்டுவது போன்றவற்றை கவனமாக கடைப்பிடிப்பதாக அவர் சொன்னார்.

எதையும் தன்னிடம் ஆலோசிக்க பாதுகாப்பான சூழல் அமைத்துத் தருவதை தாம் உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

பொதுவாக, மாணவிகளிடையே எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகம் இருக்கும் என்றார் மற்றோர் ஆசிரியை ஆஷிகா.

வகுப்பறைகளில் பொதுவாக எவ்வித வேறுபாடின்றி அனைவரும் நடத்தப்படுவதாகச் சொன்னதுடன், தனக்குப் பிடித்த துறையில் சாதிக்க மாணவர்களை ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.

உலகில் யாரும் எதுவும் குறைபாடின்றி இருக்க முடியாது என்பதை மாணவர்களிடம் வலியுறுத்தி, தொடர்ந்து தங்கள் திறன்களை சுய மதிப்பீடு செய்து மேம்படுத்திக்கொள்ள கற்றுக்கொடுப்பதாகவும் அவர் சொன்னார்.

பயன்பாட்டுச் சொற்கள் ஏற்படுத்தும் தாக்கம்

பொதுவாக, சமூகத்தில் சிறுமிகள் அழகு, குணம் குறித்து பாராட்டப்படுவதையும், சிறுவர்கள் அறிவு, துணிவு பற்றிப் பாராட்டப்படுவதையும் இந்த ஆய்வு கோடிட்டுக் காட்டியது.

இதைத் தொடர்ந்து, படைப்பாற்றலைப் பொறுத்தமட்டில், சிறுமிகளின் ஆர்வத்தை விட சிறுவர்களின் ஆர்வத்தை இச்சமூகம் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக 68 விழுக்காடு பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.

சிறு தவறிழைப்பதைப் பெருங்குற்றமாகக் கருதாமல், அவற்றைக் கற்றல் பயணத்தின் ஒரு பகுதியாகக் கருதி பாராட்டினால் தங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என ஆய்வில் பங்கெடுத்த சிறுமிகள், இளம் பெண்களில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் கூறினர்.

கற்பனைத்திறன், துணிச்சல், ஊக்கம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தி பாராட்டப்பட்டால் நேர்மறைத் தாக்கம் ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

குழந்தை வளர்ப்பின் பல அம்சங்களில் பயன்படுத்தும் சொற்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்