ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சவக்கிடங்கில் பணியாற்றிய திரு பாலகிருஷ்ணன் பெரியதம்பி நாகன், பிபிஎம், 73வது வயதில் மே 25ஆம் தேதி இயற்கையை எய்தினார்.
சுகாதார அமைச்சின் நோயியல் பிரிவில் 1969ல் தமது 18வது வயதில் ஆய்வுக்கூட உதவியாளராகச் சேர்ந்த திரு பாலகிருஷ்ணனை அப்பிரிவின் அன்றைய ஆய்வுக்கூடத் தலைவர் சாவ் ஸீ செங், அதே பிரிவின் மற்றொரு பகுதியான பிணவறைக்கு ஆள் தேவைக் கருதி மாற்றினார்.
அதனால் 20 வயதில் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையிலுள்ள பிணவறை வேலையில் சேர்ந்தார் திரு பாலகிருஷ்ணன்.
அதுவே அவரது முதல் முழுநேரப் பணியிடமும், கடைசிப் பணியிடமும்கூட. தன் தொழிலுக்குக் காட்டிய விசுவாசம் தன் பணியிடத்திற்கும் காண்பித்தார் அவர்.
அன்றாடம் காலை 6 மணிக்கு முன்பே கடமையின் அழைப்பினால் அவர் வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிடுவார். ஆனால், பணியிடத்திலிருந்து கடைசி ஆள்களில் ஒருவராகக் கிளம்புவார். தடயவியல் அதிகாரிகளுக்கு உதவியாளராகத் தொடங்கி, தடயவியல் தொழில்நுட்பராகி, தடயவியல் தொழில்நுட்ப மேலதிகாரியாகப் படிப்படியாக உயர்ந்தார்.
தற்கொலைகள், சாலை விபத்துகள், 1978 ‘ஸ்பைரோஸ்’ எண்ணெய்க்கப்பல் வெடிப்பு, 1986 ‘ஹோட்டல் நியூ வோர்ல்ட்’ சம்பவம் மற்றும் பல அசம்பாவித மரணங்களை அவர் தடயவியல் நோயியல் நிபுணர்களுடன் (forensic pathologists) தீர ஆய்வுசெய்தார்.
ஒரு குழுவாக அவர்கள் இறந்தவர்களுக்குக் குரல் கொடுத்தனர். தம் பராமரிப்பில் இருந்த “அமைதிச் சாட்சிகள்” மூலம் அவர்கள் உண்மைகளைக் கண்டறிந்தனர்.
அன்றாடம் அவரும் குழுவினரும் காவல்துறை தகவல்களோடு பிணவறையில் உள்ள பிணங்களை ஒப்பிட்டு, உற்றார் உறவினரிடம் அவற்றைத் திரும்பக் கொடுக்குமுன் அவற்றைச் சரியாக அடையாளங்கண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 15, 1986ல், ‘ஹோட்டல் நியூ வர்ல்ட்’ இடிபாடுகளிடையே புகுந்து, தப்பிக்கும் வழியை மறைத்த இரு உடல்களை அகற்ற பல மணி நேரம் திரு பாலகிருஷ்ணனும் ஒரு மூத்த தடயவியல் நோயியல் நிபுணரும் இணைந்து போராடினர்.
ஆண்டுதோறும் வேலையிலிருந்து ஓய்வுபெற மனம்வராத அவர், கடைசி கட்ட வயிற்றுப் புற்றுநோயினால் இவ்வாண்டு பிப்ரவரியில் ஓய்வுபெற்றார். இறுதியில் அதுவே அவரது உயிரைப் பறித்தது.
“அன்பான, நகைச்சுவையான, அறிவானவர் திரு பாலகிருஷ்ணன். அவரது பராமரிப்பிலிருந்த ஒவ்வொருவரையும் நன்கு பார்த்துக்கொள்வதில் அவருக்குத் தளராத கடமையுணர்ச்சி இருந்தது.” என அவருடன் பணியாற்றியவர்கள் நினைவுகூர்ந்தனர்.
“11 பிள்ளைகள் இருந்த குடும்பத்தைத் தாங்கவேண்டும் என்பதால் அவர் உயர்நிலைக் கல்வியை முடிக்கவில்லை. அனைவராலும் மதிக்கப்பட்ட, அன்பாகக் கருதப்பட்ட பரிவான மனிதர்.” என கூறினார் மகன் ராஜேந்திரன், 46.
“தான் முறையாகக் கல்வி கற்கவில்லையானாலும் தன் பிள்ளைகளுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கற்பித்து வளர்த்தார். தன் பிள்ளைகள் பட்டம் பெறவேண்டும் என்பதற்காக அவர் பகுதி நேரமாகத் தோட்டக்காரராகவும் பணியாற்றினார்.” என நினைவுகூர்ந்தார் மகன் சரவணன், 47.
அவரது மனைவி அருக்காணி, இரு மகன்கள், மருமகள்கள், ஆறு பேரன் பேத்திகள், வேலையிட நண்பர்கள் மட்டுமின்றி முழு சிங்கப்பூரும் இன்று அவரது கடமையுணர்ச்சியை மெச்சுகிறது.
திரு பாலகிருஷ்ணனின் அரும்பணியைப் பற்றிய கூடுதல் தகவல்கள் மே 4, 2015ல் தமிழ் முரசில் வெளியானது.
பிணவறை என்பது பேசப்படக்கூடாத ஒன்று என்ற கருத்தை முறியடித்து வாழ்ந்து காட்டிய இவர், இறப்பிலும் சிங்கப்பூரில் என்றும் நீங்கா முத்திரையைப் பதித்துள்ளார்.

