மாதவிடாய் முடிவும் இதயநோய்களும்

மாதவிடாய் முடிவும் இதயநோய்களும்

3 mins read
1e2533a0-1b5c-4b41-9660-0544eb1a9ce6
 டாக்டர் பிணக்கின் வி பரேக். - படம்: தி ஹார்லி ஸ்திரீட் ஹார்ட் அண்ட் வாஸ்குலார் சென்டர்
Google News Preferred Icon

இறுதி மாதவிடாயை எதிர்நோக்கும் பெண்களுக்கு இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் விரைவாக கால்சியம் படியக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதனால் பெண்களுக்கு இதயநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

‘கொரோனரி ஆர்ட்டரி கால்சிஃபிகேஷன்’ எனப்படும் இப்பிரச்சினை இதயத்தின் மூன்று முக்கிய தமனிகளில் ஏற்படும். தமனிகளில் கொழுப்புச் சத்து சேரத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குப் பிறகு கால்சியமும் சேரத் தொடங்கும்.

தி ஹார்லி ஸ்திரீட் ஹார்ட் அண்ட் வாஸ்குலார் சென்டர் எனும் தனியார் இதய மருத்துவமனையில் இதயநோய் நிபுணத்துவ ஆலோசகராக இருக்கும் டாக்டர் பிணக்கின் வி பரேக், மாதவிடாய் முடிவுக்கும், இதயப் பிரச்சினைக்கும் இடையிலான தொடர்பு குறித்து விளக்கினார்.

மாதவிடாய் இறுதிப் பருவத்தின்போது பெண்களின் உடலில் சுரப்புநீர் (ஹார்மோன்) மாற்றம் அதிகமாக ஏற்படும். ‘ஈஸ்ட்ரோஜென்’ எனப்படும் சுரப்புநீரின் அளவு குறையும்போது தமனிகளில் கால்சியம் அதிக அளவில் சேரும். ஈஸ்ட்ரோஜென் அளவு குறைய குறைய இதயத் தசையின் வீக்கமும் அதிகரிக்கத் தொடங்கும். அதன் விளைவாக இதயத் தமனிகளில் சேரும் கால்சியத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கும்.

இறுதி மாதவிடாய்க்குப் பிறகு பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் எளிதில் ஏற்படக்கூடும். இதனால் அவர்களின் இதயத் தமனிகள் எளிதில் பாதிக்கப்படும். இன்சுலின் எதிர்ப்பு, ‘டைப் 2’ வகை நீரிழிவு நோய் தொடர்பான ஆபத்தும் அதிகரிக்கிறது. இது அதிக அளவில் கால்சியம் சேர வழிவகுக்கும்.

மாதவிடாய் இறுதிப் பருவத்தை அடையாத பெண்களுடன் ஒப்பிடுகையில் மாதவிடாய் முடிவை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.

உடலியல் மற்றும் வளர்சிதை மாற்றங்களாலும் பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாதவிடாய் முடிவுற்ற பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்பதால் அது இதயப் பிரச்சினைக்கான ஆபத்தை அதிகரிக்கும்.

மாதவிடாய் முடிவின்போது பெண்களில் சிலர் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைக் குறைக்கத் தொடங்குகின்றனர். இத்தகைய சூழலில் இதயநோய்க்கு அப்பாற்பட்டு இதர நோய்களும் வரலாம். இதனால் வாழ்க்கைமுறையில் உடற்பயிற்சியைச் சேர்த்துக்கொள்வது மிக அவசியம்.

கொழுப்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளல், இனிப்பு குறைவான உணவுகளை உட்கொள்ளல், புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுதல், மது அருந்துவதைத் தவிர்த்தல், ஆரோக்கியமான உடல் எடையைக் கட்டிக்காத்தல் எனப் பெண்கள் பல்வேறு வழிகளைப் பின்பற்றலாம்.

இவற்றுக்கு அப்பாலும் இதயத் தமனிகளில் கால்சியம் சேரும் பிரச்சினை ஏற்பட்டால் பெண்களுக்குப் பல சிகிச்சைத் தெரிவுகள் உள்ளன. ஆனால், வருமுன் காப்பது மிக முக்கியம். அதனால் மாதவிடாய் ஏற்படும் பருவத்தின்போதே மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுரப்புநீர் மாற்று சிகிச்சை, ஸ்டாடின், ஆஸ்பிரின், பீஸ்போஸ்போநெட்ஸ் போன்ற மருந்துகள் சிகிச்சைத் தெரிவுகளில் அடங்கும். நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் ‘கொரோனரி அஞ்சியோபிளாஸ்ட்டி’, ‘ஸ்டென்டிங்’, ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

ஆசிரியராகப் பணிபுரியும் ஜெ. பூரணி, 60, மாதவிடாய் முடிவை எதிர்கொண்டபோது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்தார். இதனால் அவருக்கு அதன் பக்கவிளைவுகள் அவ்வளவாகத் தெரியவில்லை. அவருக்கு ‘ஹாட் ப்ளாஷஸ்’ எனப்படும் திடீரென உடலின் வெப்பநிலை அதிகரித்தல், வியர்வை, தோல் சிவந்து காணப்படுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.

இல்லத்தரசியான ரத்தினம், 55, மாதவிடாய் முடிவின்போது தனக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகச் சொன்னார். அதுவரை உடலில் எந்தப் பிரச்சினையும் அவருக்கு ஏற்பட்டதில்லை. இதனால் அவர் இதய நலத்தைப் பேணிக்காக்கும் வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டு அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்.

நிர்வாகத் துறையில் பணியாற்றும் பாரதி சரவணன், 50, மாதவிடாய் முடிவை எதிர்நோக்கியபோது கால் எரிச்சல், மாதவிடாய் சுழற்சி விட்டுவிட்டு வருவது ஆகியவற்றைக் கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு எதிர்கொண்டார். ரத்த சோகை, சோர்வு போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
பெண்கள்ஆரோக்கியம்சுகாதாரம்

தொடர்புடைய செய்திகள்