402 பேர் சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளாகப் பதவி நியமனம்

2 mins read
38 வார கடும் பயிற்சியின் பலன்
2f7d23f1-e6bd-42fb-9d22-f3d81b9bcf68
முழுநேர சிங்கப்பூர்க் கடற்படைவீரர் லெஃப்டினெண்ட் ஷ்ரவன் கிருஷ்ணன் ஷர்மா, 27 (இடம்), தகுதி வாள் விருது பெற்ற தேசிய சேவையாளர் இரண்டாம் லெஃப்டினெண்ட் கீன் டோமினிக் டிராவாசோ, 21. - படங்கள்: ரவி சிங்காரம்

காட்டில் முகாம் அமைத்த முதல் நாள் இரவிலேயே தன்னுடைய பாட்டி தவறிவிட்டார் என்ற துயரச் செய்தி தொலைபேசிமூலம் வந்தது.

மனம் சிதைந்துபோய் அவசரமாக இந்தியா திரும்பினார் அப்போது தேசிய சேவைப் பயிற்சி அதிகாரியாக இருந்த 21 வயது கீன் டோமினிக் டிராவாசோ.

ஜூன் 8ஆம் தேதி சிங்கப்பூர் ஆயுதப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தில் நடந்த 133/23 பயிற்சி அதிகாரி ஆணை வழங்கும் அணிவகுப்பில் ஆணை பெற்ற 402 பயிற்சி அதிகாரிகளில் அவரும் ஒருவர். அவர் இரண்டாம் லெஃப்டினெண்டாக ஆணை பெற்றார்.

மொத்தம் 42 கடற்படையினர், 33 ஆகாயப் படையினர், 327 ராணுவப் படையினர் அதிகாரிகளாக ஆணை பெற்றனர். அணிவகுப்புச் சடங்கை மேற்பார்வையிடும் அதிகாரியாக வருகையளித்தார் போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட்.

தளவாடங்கள் பிரிவின் 50 பயிற்சி அதிகாரிகளில் தலைசிறந்த 10 விழுக்காட்டினரில் ஒருவராக வந்ததற்காக, மே 31ஆம் தேதி தகுதி வாள் விருதையும் பெற்ற கீன், தன் பாட்டிக்கே அவ்விருதை அர்ப்பணித்தார்.

“இன்று நான் இந்நிலையை அடைவதைக் கண்டிருந்தால் என் பாட்டி நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார்,” என்றார் கீன்.

கடலின் ஆழத்தைவிட ஆழமான ஆர்வம்

அதிகாரியாக ஆணை பெற்ற மற்றொருவர் முழுநேரக் கடற்படை வீரர் ஷ்ரவன் கிருஷ்ணன் ஷர்மா, 27.

கடற்படைப் பயிற்சி வீரரிலிருந்து ‘லெஃப்டினெண்ட்’ பதவிக்கு அவர் முன்னேறினார்.

தேசிய சேவையின்போது தனக்குப் போதிய பக்குவம் இல்லை எனக் கருதி பயிற்சி அதிகாரிப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை மறுத்த ஷ்ரவன், தன் படிப்பை முடித்தபிறகு தானாக அவ்வாய்ப்பைத் தேடி அதை தன்வசப்படுத்தினார்.

தேசிய சேவைக்குப் பின் ‘பிரிட்டிஷ் கொலம்பியா’ பல்கலைக்கழகத்தில் அனைத்துலக உறவுகள், அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும் ‘சியோன்ஸ் போ பாரிஸ்’ பள்ளியில் அனைத்துலகப் பாதுகாப்பில் முதுகலைப் பட்டமும் பெற்ற அவரது மனதில் என்றுமே சிங்கப்பூர் நிலைத்திருந்தது.

அதனால், முதுகலைப் பட்டத்தைத் தொடங்கிய முதலாண்டிலேயே சிங்கப்பூர்க் கடற்படைக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்தார்.

“கடற்படையில் ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக இருந்துள்ளது,” என்றார் ஷ்ரவன்.

அவ்வகையில், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்பு ஹாங்காங்கிற்குச் சென்ற முதல் சிங்கப்பூர்க் கடற்படைக் கப்பலில் பயணம் செய்த இனிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார் ஷ்ரவன்.

“அப்பயணம்வழி, சிங்கப்பூரில் பிறந்து ஹாங்காங்கில் வாழும் 90 வயது மாலுமிக்கு அறிமுகமானேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர்க் கடற்படையினரிடமிருந்து பெற்ற தொப்பியை அவர் அணிந்திருந்தார். அவரது கதைகள் என்னை வியப்பில் ஆழ்த்தின,” என்றார் ஷ்ரவன்.

குறிப்புச் சொற்கள்