சுவையான உணவு, திகிலூட்டும் அனுபவம்: ‘த செம்ம பிஸ்ட்ரோ’

சுவையான உணவு, திகிலூட்டும் அனுபவம்: ‘த செம்ம பிஸ்ட்ரோ’

2 mins read
208c8523-0452-419d-a190-40dcc197162d
‘த டெவில்ஸ் பிளே’ நாடக அனுபவத்தில் பங்கேற்றோர். - படம்: லாவண்யா வீரராகவன்

குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக உணவருந்தும் அனுபவத்தைத் திகிலூட்டும் நாடகத்துடன் இணைத்து வழங்கியுள்ளனர் ‘த செம்ம பிஸ்ட்ரோ’ உணவுக்கடைக் குழுவினர்.

கடந்த மே 30ஆம் தேதி, ‘ஸ்ப்ரிங்சைட் வாக்’கில் உள்ள ‘த செம்ம பிஸ்ட்ரோ’ உணவுக்கடையில் நடைபெற்ற ‘த டெவில்ஸ் பிளே’ எனும் இந்நாடக அனுபவம் இரண்டு மணி நேரம் நீடித்தது.

சுவையான மூன்று வகை உணவு, பானங்கள் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன. திகிலூட்டும் ஒளி, ஒலி அமைப்புடன் இருள் சூழ்ந்த சூழலில் முன்கதைக் காணொளியுடன் தொடங்கியது ‘த டெவில்ஸ் பிளே’.

காணொளியைத் தொடர்ந்து உணவு வழங்கத் தொடங்கிய ஒரு பணிப்பெண்ணும், வருகையாளர்போலத் தோன்றிய பாதிரியாரும் நாடகக் கதாபாத்திரங்களாக மாறி அந்த உணவங்காடியை மையமாகக் கொண்ட பேய்க்கதை ஒன்றைக் கூறத் தொடங்கினர்.

பேய்பிடித்த பணிப்பெண்போல நடித்த ஜானகி நாயர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். தொழில்நுட்பத் துறையில் முழுநேரமாகப் பணியாற்றிவரும் இவர், நாட்டிய நாடகங்களில் அனுபவம் பெற்றவர். இவ்வகைச் சூழலில் நடிப்பது முதல் முறை என்பதால் சற்று பயம் இருந்தாலும், இது நல்ல அனுபவம் என்கிறார் இவர்.

திகில் நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள்.
திகில் நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

இந்த நாடகத்தை எழுதி இயக்கிய ‘ஆர்ட் ஆஃப் கான்செப்ட்ஸ்’ படைப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ரிஷிவர்மன், கீர்த்தனா இருவரும் ஒரு மாதம் செலவிட்டு நாடகக் கதையை எழுதியதாகக் கூறினர்.

ஒலி, ஒளி அமைப்பு, தேவையான இதர பொருள்கள் என முழுமையாகத் தயார் செய்ய மூன்று மாத காலம் பிடித்ததாகவும் அவர்கள் கூறினர்.

பொதுவாக, ஒரு மேடை அமைப்பில் பல கதாபாத்திரங்களுடன் வடிவமைக்கும் நாடகம்போல இல்லாமல், உணவகத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அவர்களுடன் உரையாடுவது, நெருக்கமாகச் சென்று நடிப்பது, அவர்களைக் கதைக்குள் ஈடுபடுத்துவது எனப் பல அம்சங்களைச் சேர்க்க வேண்டியிருந்தது சவாலாக இருந்ததாகவும் இருவரும் தெரிவித்தனர்.

நகைச்சுவை, கலை, படைப்புத்திறன் உள்ளிட்டவற்றில் கொண்ட ஆர்வத்தால் தனது உணவுக்கடைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் விதமாக இதனைச் செய்ததாகக் கூறினார் ‘த செம்ம பிஸ்ட்ரோ’ உணவுக்கடையின் உரிமையாளர்களில் ஒருவரான கணேஷ்.

“எப்போதும் புதிது புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தின் விளைவாக உருவானதே இந்தத் திகில் நாடக முயற்சி,” என்றார் அவர்.

நண்பர்களுடன் இதைக் கண்டு ரசித்த புவன், சதீஷ் இருவரும் இது முற்றிலும் வித்தியாசமான அனுபவம் என்றும், நடிகர்கள் இருவரும் கதாபாத்திரங்களாகவே மாறிச் சிறப்பாக நடித்ததாகவும் குறிப்பிட்டனர்.

மே 30, ஜூன் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ‘த டெவில்ஸ் பிளே’, வரும், ஜூன் 13, 20ஆம் தேதிகளில் நாளொன்றுக்கு இருமுறை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்