தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாய்களின் மொழியை அறிய உதவும் செயற்கை நுண்ணறிவு

2 mins read
cdf38ad9-d233-4c69-b52d-6bdafca84d10
விலங்குகளுடன் பேச விரும்பும் மனிதர்களின் கனவை நெருங்க உதவ உள்ளது செயற்கை நுண்ணறிவு. - படம்: பிக்சாபே

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதற்கு எடுத்துக்காட்டாக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நாய்களின் குரைப்பு வகைகளையும், அவற்றின் பொருளையும் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பசி, பயம், நேசம் உள்ளிட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் விலங்குகளில் நாய்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. வாலாட்டுதல், காதுகளை மடக்குவதில் தொடங்கி நீளும் பட்டியல் கொண்ட உடல் மொழிகளைத் தாண்டி ஒலி வடிவிலும் அவை பலவற்றைப் பகிர்கின்றன.

அவற்றைப் புரிந்து கொள்ள பல ஆண்டுகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ஆர்வத்தை ஆய்வாக்கக் கைகொடுத்துள்ளது செயற்கை நுண்ணறிவு.

நாய்களின் குரைப்பு சார்ந்த தகவல்களைத் திரட்டி, அதனைச் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பகுப்பாய்வு செய்து அதன் மூலம் குறைப்புக்கான பொருளையும் நாய்களின் வயது, பாலினம், இனம் உள்ளிட்டவற்றையும் கண்டறிய முயன்று வருகின்றனர் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

மனிதக் குரலைப் பயன்படுத்தி இயந்திரக் கற்றல் செய்யும் அதே முறையைப் பயன்படுத்தி நாய்களின் தகவல் தொடர்பு நுணுக்கங்களை அறிய முடியும் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.

‘வாய்ஸ் ரெகக்னிஷன்’ எனப்படும் குரலை அறிந்துணரும் மென்பொருள் போன்ற செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பயன்படுத்துவது நாய்க் குரைப்பில் உள்ள தொனி, ஒலி, உச்சரிப்பு முதலிய மிதமான வேறுபாடுகளைக் கூர்ந்து ஆராய உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மனிதக் குரலை இயந்திரத்திற்குக் கற்பிக்க தேவையான தகவல்கள், தரவுத்தளம் இருப்பதுபோல, நாய்களின் குரலுக்கு இல்லை என்பதால் 74 வெவ்வேறு வகை நாய்களின் குரைப்பு, உறுமல் உள்ளிட்ட வேறுபட்ட ஒலிகளைப் பதிவு செய்து சேகரித்துள்ளது இந்த ஆய்வாளர் குழு.

மனிதக் குரல் கற்றல் அமைப்புகளில், நாய்களின் குரலில் உள்ள வேறுபாட்டை அறியத் தேவையான கட்டமைப்புகளைப் புகுத்திப் பயன்படுத்துவது இது முதல் முறை என்றும் அந்த ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

விலங்குகள் நலனில் முக்கியத் தாக்கத்தை இந்த ஆய்வு ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவு கணக்கீட்டு மொழியியல், மொழி வளங்கள் மற்றும் மதிப்பீடுகளுக்கான இணை அனைத்துலக மாநாட்டில் படைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பயணித்து வரும் இந்த ஆய்வு உயிரியல் நிபுணர்கள், விலங்கு நடத்தை நிபுணர்கள் உள்ளிட்ட பலருக்கு உதவியாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்