ஒரு கர்நாடக சங்கீதக் கலைஞர் தன் கணவர்மீது கொண்டிருந்த அளவற்ற அன்பை வெளிப்படுத்தும் கருவியாக அவரது இசையே அமைந்தது.
சென்ற ஆண்டு மே 19ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டி காணாமற்போன தன் 39 வயது கணவர் ஸ்ரீநிவாஸ் சாய்னிஸ் தத்தாதிராயாவிற்கு அர்ப்பணமாக ‘இறுதியில் மலைக்கே கடைசி சொல்’ என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் சுஷ்மா சோமா.
மலைகளுக்குத் தன் இதயத்தையும் இறுதியில் உயிரையும் பறிகொடுத்த ஸ்ரீநிவாஸ் அடிக்கடிக் கூறிய வார்த்தைகளே ‘இறுதியில் மலைக்கே கடைசி சொல்”.
தமிழ் வரிகள் கொண்ட இந்த ஐந்து பாடல் தொகுப்பு இவ்வாண்டு மே 19ஆம் தேதி யூடியூப், ஸ்பாட்டிஃபை போன்ற அனைத்து இசைத் தளங்களிலும் வெளியானது. பேண்ட்கேம்ப் தளத்திலும் (https://sushmasoma.bandcamp.com/album/the-mountain-has-the-last-say) இத்தொகுப்பை வாங்கலாம்.
பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளதோடு வயலின், கித்தார் வாத்தியங்களையும் வாசித்துள்ளார் சுஷ்மா.
கணவரின் மறைவுக்குப் பின்பு துக்கத்தால் சில மாதங்களுக்கு பேசக்கூட சிரமப்பட்ட சுஷ்மா, இன்று பாடி இசைத் தொகுப்பு வெளியிட்டதன் பின்னணியில் பல மாத உழைப்பும் மனத் திடமும் அடங்கியுள்ளது.
“சென்ற ஆண்டு நடந்த சம்பவம் என்னை ஆறாத்துயரில் ஆழ்த்தியது. என் குரல் பாதிக்கப்பட்டதால் நான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. என் இசைப்பயணம் தொடருமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது,” என நினைவுகூர்ந்தார் சுஷ்மா.
ஆனால், கடமையின் அழைப்பை அவர் மறக்கவில்லை. 2022ல் வெளியான ‘இல்லம்’ என்ற அவரது விருதுபெற்ற இசைத்தொகுப்பை டிசம்பர், ஜனவரியில் மும்பை, பெங்களூரில் நிகழ்ச்சிகளாகப் படைக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
“அந்நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களுடன் அதிகம் பேசவேண்டியிருக்கும். ஆனால், இவ்வளவு துயரத்தில் இருக்கும்போது எவ்வாறு உற்சாகத்தோடு நிகழ்ச்சியைப் படைப்பது? நான் என்னிடமே பொய் சொல்வதுபோல இருந்தது.
“இசையுலகில் மீண்டும் நுழைய ஒரே வழி என் கணவர்தான் என நான் அப்போது உணர்ந்தேன்,” என்றார் சுஷ்மா.
தம் கணவரைப் பற்றி முன்பு கவிதைகள் எழுதியிருந்த சுஷ்மா, சென்ற அக்டோபரில் அவற்றைப் புதிய இசைத்தொகுப்பாக வெளியிட முடிவெடுத்தார். 2020ல் இளம் கலைஞர் விருதை வென்றிருந்த சுஷ்மா, அதன்மூலம் பெற்ற மானியத்தை இத்தொகுப்புக்காகப் பயன்படுத்த தேசிய கலைகள் மன்றம் அனுமதித்தது.
தனக்காக ‘இல்லம்’ இசைத்தொகுப்பைத் தயாரித்த நெருங்கிய நண்பர் ஆதித்யா பிரகாஷை மறுபடியும் இசைத் தயாரிப்புக்கு அணுகினார் சுஷ்மா. நவம்பர் முதல் ஜனவரி வரை அவரும் ஆதித்யாவும், சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் பாடல்களைப் பதிவுசெய்தனர்.
“நான் இசைத் தொகுப்புப் பணிகளைத் தொடங்கியதும் எனக்கு மன நிம்மதி கிடைக்கத் தொடங்கியது. அதன்வழி என் துயரத்தை வெளிப்படுத்தியதும் என்னால் மற்ற இசை வகைகளையும் உணரமுடிந்தது,” என்றார் சுஷ்மா.
ஆனால் இசைத்தொகுப்பை செய்துமுடித்ததும், அதை பொதுமக்களுக்கு வெளியிடுவதா என்ற தயக்கம் சுஷ்மாவுக்கு இருந்தது.
“என் இதயத்தையே நான் இதில் பதிவுசெய்துள்ளேன். இதை எப்படிப் பிறரிடம் பகிர்ந்துகொள்வது?” என சிந்தித்த சுஷ்மாவுக்கு, அன்பானவர்களை இழந்த மற்ற கலைஞர்களின் இசைத்தொகுப்புகள் உந்துதல் கொடுத்தன.
“அவர்களது கதைகள் தெரியாமலேயே இசையைக் கேட்டு நான் அழுதேன். அப்போதுதான் இசையின் வலிமையை நான் உணர்ந்தேன். என் தொகுப்பை வெளியிட்டேன்,” என்றார் சுஷ்மா.
தன் வலியை ‘கனா கண்டான், வென்றான்; அதே கனா கண்டேன், தோற்றேன்’ போன்ற வரிகளோடும், தன் கணவர் என்றென்றும் தம் வாழ்வில் இடம்பெறுவதை ‘காலமானார் | காலம் ஆனார்’ போன்ற வரிகளோடும் உணர்த்துகிறார் சுஷ்மா.
‘மே 19’ என்ற முதல் பாடல் வரிகளை சுஷ்மாவோடு இணைந்து எழுதியுள்ளார் அவருடைய நண்பர் ஜெயா ராதாகிருஷ்ணன். அவர் நான்காம் பாடலுக்குக் கூடுதல் வரிகளையும் வழங்கினார்.
வார்த்தைகளே இல்லாத இடங்களிலும், குரல்-வாத்திய சங்கமம்மூலம் சுஷ்மாவின் மனப் பேரலைகளை உணரமுடிகிறது.
“வார்த்தைகளால் கூற முடியாததை என் வாத்தியங்கள் கூறுகின்றன. அமைதியை நாடும் நெஞ்சங்களுக்கு என் இசை ஆறுதலாக அமையும்,” என்றார் சுஷ்மா.
ஸ்ரீநிவாசின் எவரெஸ்ட் பயணம்
பல சிகரங்களையும் பல ஆழங்களையும் வெற்றிகரமாகத் தொட்ட ஸ்ரீநிவாஸ் சாய்னிஸ் தத்தாதிராயா, கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி எவரெஸ்ட் சிகர உச்சிக்குத் தம் பயணத்தைத் தொடங்கினார்.
மே 19ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்ததாக ஸ்ரீநிவாஸ் தன் மனைவி சுஷ்மாவுக்குத் தகவல் அனுப்பினார்.
ஆனால், மலை உச்சியில் குறைந்த உயிர்வாயுவால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தாம் திரும்ப வராமல்போகக்கூடும் என அவர் கூறியதும், சுஷ்மாவிற்கு உலகமே இடிந்து விழுந்தது. ஒரு வாரத்திற்கு அவரைத் தேடும் பணிகள் நீடித்தும் அவர் கிடைக்கவில்லை.
தம் உயிரோடு ஒன்றிப் போன அன்பு கணவரைத் தொலைத்த சுஷ்மாவின் வாழ்க்கைப் பயணம் இனி அவரது நினைவுகளில் தொடர்கிறது.

