சும்மா இருப்பது சலிப்பாக இல்லையா? எவ்வளவு நேரம் சும்மா இருப்பது??
இவை அன்றாடம் அனைவர் காதுகளிலும் விழும் சொற்றொடர்கள். சும்மா இருப்பது நேர விரயம் இல்லை என்றும் அது ஒருவகையில் மன நலனை மேம்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள்.
மூளை எப்போதும் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கத் தூண்டப்படுவதும், அதற்காக மேற்கொள்ளும் உடனடியாக மனநிறைவு தரும் செயல்களும் ஒரு சுழற்சி நிகழ்வாக நடந்துகொண்டே இருக்கிறது.
குறிப்பாக, தொழில்நுட்ப மேம்பாடு அந்தச் சுழற்சியை எளிதாக்குகிறது. சாப்பிடுவது, பயணம் செய்வது போன்ற நேரங்களிலும் காணொளி பார்ப்பது போன்றவற்றில் ஈடுபடும்போதும் மூளை விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. அது மூளைக்கு உற்சாகத்தை அளித்து, மேன்மேலும் அதில் ஈடுபட வழிவகுக்கிறது.
இதனை ‘உடனடி மனநிறைவுணர்ச்சி’ என்கின்றனர் நிபுணர்கள். சிறு செயல்களில் மூளை மனநிறைவை எட்டப் பழகிவிட்டால், அதிகம் சிந்தித்துச் செயல்படவேண்டிய செயல்களையும், நீண்ட நேரம் எடுக்கும் செயல்களையும் செய்ய ஒத்துழைக்காமல் போகலாம் என்பது அவர்களின் கருத்து.
எடுத்துக்காட்டாக, புத்தகத்தின் இரு பக்கங்களைப் படிப்பதைவிட, 10 குறுங்காணொளிகள் பார்ப்பது எளிது. அவற்றின் மூலம் 10 புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டதாக மூளை நம்பத் தொடங்கிவிட்டால், தேவை ஏற்பட்டாலும் புத்தகம் படிக்க ஆர்வமும் கவனமும் இல்லாமல் போகும்.
அதுமட்டுமின்றி, நாளடைவில் எரிச்சலையும் மன அமைதிக்குலைவையும் ஏற்படுத்தலாம்.
சலிப்பிலிருந்து தப்பிக்க வழக்கமான செயல்களில் ஈடுபடுவதைவிட சலிப்பைச் சரியான முறையில் அணுகுவது மனநலத்தை மேம்படுத்துவதுடன் மூளையின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
சரியான அணுகுமுறை மூளையின் அதிவேக செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, சிந்தனைகளைச் சீராக்கவும் உதவும். மூளை சலிப்படைவதை உணரும்போது உடனடியாக அதனை எதிலும் ஈடுபடுத்தாமல் இருப்பது அந்த அணுகுமுறையின் முதற்படி. மூளைக்கு வெளியிலிருந்து வேலை எதுவும் கொடுக்கப்படாமல் இருக்கும்போது, சிந்தனைகள் ஆழமானதாக இருக்கும்.
சில நேரங்களில் இந்த அமைதியான தருணங்கள் தற்பகுப்பாய்வு, சில செயல்களின் வெளிப்பாடுகளை ஆராய்ந்து மனத்தைத் தெளிவடையச் செய்கிறது.
தொடந்து அமைதியான சூழல்களை அமைத்துக் கொள்வது புதிய சிந்தனைகளையும் படைப்புத் திறனையும் வளர்க்க உதவும்.
சுற்றுப்புறத்தில் நிகழும், கவனிக்கப்படாதவற்றை கவனிக்கவும் இது வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. ‘மீ டயம்’ என பரவலாகப் பிரபலமடைந்து வரும் தன்கவனிப்புக்கு மூளையைச் ‘சும்மா’ வைத்திருப்பது உதவுகிறது.
வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து, பல முடிவுகளை எடுக்க உதவும் மூளை ஒருவித குழப்பத்துடனே இருக்கும். அதனை மீட்டெடுத்து, மீள்நிரப்பு செய்து சமநிலையை எட்ட ‘சும்மா’ இருப்பது உதவும்.
‘சும்மா’ இருப்பது எப்படி?
எப்போதும் ஏதேனும் செய்து பழகிய மூளைக்கு சும்மா இருப்பது பெரிதும் சவாலான செயல். முதலில் வீடு சுத்தம் செய்வது, பயணம் செய்வது, துணி மடிப்பது, துணி தேய்ப்பது போன்ற பிற வீட்டுப் பணிகளைச் செய்யும்போது கேட்பொறி (Headphone) அணியாமல், தொலைக்காட்சி உள்ளிட்ட எதையும் பார்க்காமல் கவனத்துடன் செய்யப் பழகலாம்.
தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால், அதனை மூளை ஏற்றுக்கொள்ளாமல் மனத்தில் பயத்தைத் தூண்டக்கூடிய சிந்தனைகளுக்கு வழிவகுப்பது தவிர்க்க இயலாதது. மனத்தை ஒருநிலைப்படுத்தி நல்வழியில் செலுத்த தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
உடல் ஆற்றலை உறிஞ்சக்கூடிய உடற்பயிற்சி, சமையல் செய்வது, புத்தகம் படிப்பது, கைவினைப் பொருள்கள் செய்வது, படம் வரைவது, எழுதுவது என அதிகக் கவனம் தேவைப்படும் செயல்களை அன்றாடம் செய்ய பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
ஒவ்வொருமுறை மனநிறைவுச் சுழற்சிக்குத் தள்ளப்படும்போதும், எதற்காக அதிலிருந்து விலகுவது அவசியம் என்பதைச் சற்று நேரம் எடுத்து மூளைக்கு மறுமுறை சொல்வது, நாளடைவில் மூளையை ஒத்துழைக்க வைக்கும்.
தேர்வை ஏற்பட்டாலன்றி, ‘மல்டி டாஸ்கிங்’ எனும் ஒரே நேரத்தில் பல வேலை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பேசிக்கொண்டிருக்கும்போது திறன்பேசி பார்ப்பது, பணியின்போது தொலைக்காட்சி பார்ப்பது என மூளையைப் பழக்கப்படுத்தாமல் இருப்பது மிகவும் நன்மை தரும்.