தெளிவு தந்த கிராபி

தெளிவு தந்த கிராபி

2 mins read
ae23a3eb-27c7-48f9-8102-adbc10e41ec8
கிராபியில் உள்ள குலோங் முவாங் கடற்கரை. - படம்: பிரசன்னா கிருஷ்ணன்

ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தாய்லாந்துக்குப் பயணம்.

கடந்த ஈராண்டுகளில் நேப்பாளம், சுவிட்சர்லாந்து ஆகியவற்றுக்குப் பயணம் மேற்கொண்ட நான், இம்முறை அண்டை நாடான தாய்லாந்தில் உள்ள கிராபிக்குச் சென்றேன். குறைந்த செலவில் மனநிறைவடைந்தேன்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 22லிருந்து 26ஆம் தேதிவரை குலோங் முவாங் கடற்கரைக்கு அருகே பான் கோ குவாங் ஸ்தீரிட்டில் உள்ள சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் ‘அட்சீகொண்டோ’ கூட்டுரிமை வீடுகள் ஒன்றில் வசித்தேன். முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்டில் ஹோட்டலில் தங்கவில்லை.

அடிக்கடி வெளியே செல்வதைவிட உடலுக்கும் மனத்துக்கும் ஓய்வளித்துக்கொள்வதே இப்பயணத்தின் நோக்கமாக இருந்தது. நேரத்துக்கு உறங்கி எழுவது, நடக்கப்போவதை எண்ணிக் கவலைப்படாமல் அந்தந்த நொடியை அனுபவிக்கப் பழக்கப்படுத்திக்கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்தினேன். பொழுது இன்பமாகக் கழிந்தது.

குலோங் முவாங் கடற்கரைக்கு ‘அட்சீகொண்டோ’விலிருந்து 10 நிமிடங்களுக்குள் நடந்து செல்லலாம். தினமும் காலையில் கடலின் அழகை ரசிக்கச் சென்று வந்தேன்.

24ஆம் தேதி காலை படகோட்ட (கயாக்கிங்) ஆவ் தலேன் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அந்தமான் கடலில் உள்ள சதுப்பு நிலம் வழியாகப் படகோட்டினேன்.

படகோட்டும்போது தற்படம்.
படகோட்டும்போது தற்படம். - படம்: பிரசன்னா கிரு‌ஷ்ணன்
அந்தமான் கடலில் சதுப்பு நிலம் வழியாகப் படகோட்டம்.
அந்தமான் கடலில் சதுப்பு நிலம் வழியாகப் படகோட்டம். - படம்: பிரசன்னா கிரு‌ஷ்ணன்

உண்மையைச் சொன்னால் படகோட்டியபோது அதைப் பற்றிப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் சில நாள்களுக்குப் பிறகு அந்த அனுபவம் என்னைச் சீண்டியது.

அந்தமான் கடலில் சதுப்பு நிலம் வழியாகப் படகோட்டம்.
அந்தமான் கடலில் சதுப்பு நிலம் வழியாகப் படகோட்டம். - படம்: பிரசன்னா கிரு‌ஷ்ணன்

கிராபி பயணமே அத்தகைய ஓர் உணர்வைத் தந்தது. சிங்கப்பூர் திரும்பிய பிறகு அதைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தேன்.

மற்றபடி ‘அட்சீகொண்டோ’வுக்கு அருகே இருந்த பல உணவகங்களில் சாப்பாட்டை ஒரு பிடிபிடித்தேன். எதிர்பார்த்த சுவை இல்லை.

ஆக மலிவான விலையில் சாப்பாடு விற்கும் உணவகத்தில்தான் சுவை தூக்கலாக இருந்தது.

பான் கோ குவாங் ஸ்திரீட் முழுவதும் உணவகங்கள் உட்பட பலவகையான கடைகள் இருந்தன. இருந்தாலும் சில கடைப் பகுதிகள் காலியாக இருந்தன, சாலை ஓரளவு அமைதியாகவே காணப்பட்டது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின் தாக்கம் அதற்குக் காரணம் என்றார் கடைக்காரர் ஒருவர். சுற்றுப்பயணத் துறையின் இன்னல்கள் இன்னமும் தொடர்வது என்னை வருந்தச் செய்தது.

சிங்கப்பூரில் நம்மில் பலரால் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. கிராபியிலோ இரண்டு நிமிடங்களுக்குக்கூட வெளியில் இருக்க முடியவில்லை, அவ்வளவு வெயில்.

‘அட்சீகொண்டோ’ நீச்சல் குளத்தின் நீர்கூட சூடாக இருந்தது.

ஆனால், மேற்கத்திய நாடுகளிலிருந்து வருகை தந்த சுற்றுப்பயணிகள் பலரும் அந்த வெப்பத்தை ரசித்தனர். குளிர் நாடுகளில் வளர்ந்த அவர்களுக்கு வெப்பம் ஒரு வரப்பிரசாதம்.

பிப்ரவரி 26ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பினேன். ஓய்வுக்காக மட்டுமே இப்பயணத்தை மேற்கொண்ட நான் இலக்கை அடைந்தேன்.

மாறுபட்ட சுற்றுப்பயணம் இது. வாழும் நாட்டில் சில வேளைகளில் போதுமான ஓய்வைப் பெறாததை நாம் அறியாமல் இருக்கலாம். அப்படியிருக்க அமைதியான உறக்கம், தெளிவான சிந்தனை ஆகியவற்றைப் பெறவும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாமே!

குறிப்புச் சொற்கள்