அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் ஆரத்தழுவும் இயற்கை, பசுமை

2 mins read
e631687b-fbc8-4251-89e4-50f18ba74d8f
அலெக்சாண்ட்ரா மருத்துவமனையின் இயற்கைக் கண்காட்சியை மேற்பார்வையிடும் மேலாளர் வெண்டி லிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அலெக்சாண்ட்ரா மருத்துவமனையின் புளோக் 29க்குச் செல்வோர், அங்குள்ள இயற்கை அம்சங்களைக் கண்டும் நுகர்ந்தும் மகிழலாம்.

‘நேச்சர்ஸ் எம்பிரேஸ்: எ கிஃப்ட் டு த மைண்ட்’ என்ற இயற்கைக் கண்காட்சியில் வருகையாளர்கள், இயற்கை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு இதம் அடையலாம்.

மழைக்காட்டின் மண், மலர் வாசனைகள் இந்தக் கண்காட்சி வளாகத்தில் கமழ, வருகையாளர்கள் நீர்நிலையின் அழகை ரசிக்கலாம், தோட்டத்தில் துப்புரவுப் பணிகளைச் செய்யலாம். அல்லது, மெய்நிகர்க் காட்டில் மெதுநடை மேற்கொள்வது போன்ற அனுபவங்களைப் பெறலாம்.

“கவலைகளை மறக்க வைத்து இயற்கை மீதான ரசனையை அதிகரிக்க இங்கு வாசனைகள் பயன்படுத்தப்படுகின்றன. மனநலப் பிரச்சினை உடைய ஒருவருக்கு வாசனைத் திரவங்கள் உதவுகின்றன,” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பின் கல்வி இயக்குநர் டாக்டர் பர்லின் இங் தெரிவித்தார்.

செப்டம்பர் இறுதிவரை இயங்கும் இந்த இயற்கைக் கண்காட்சியை ‘மைண்ட் ஆர்ட் எக்ஸ்பெரிமெண்டல் லே’ப்பும் என்யுஎஸ் இயோ பூன் கிம் அறிவியல் நிலையமும் உருவாக்கியுள்ளன. இத்திட்டத்திற்கு தேசிய பூங்காக் கழகம் ஆதரவளிக்கிறது.

வரும்முன் காக்கும் மனநலப் பராமரிப்பு முறையில் இத்திட்டம் கவனம் செலுத்துவதாக நிலைய இயக்குநர் இணைப் பேராசிரியர் ஜான் வோங் தெரிவித்தார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த எல்லா வகை மக்களின் மனநலனை மேம்படுத்தவும் உணர்வுகளின் மீள்திறனை அதிகரிக்கவும் இத்திட்டம் முற்படுவதாக பேராசிரியர் வாேங் கூறினார்.

“இயற்கைச் சூழல் மிகுந்த இடங்களில் நடப்பதால் ஒருவரது மனநலம் மேம்படுவதாக எங்கள் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நகர்ப்புறத் திட்டமிடுதலில் பசுமை இடங்களை ஒருங்கிணைப்பதால் நலன் பேணும் சுற்றுச்சூழலை உருவாக்கி மனநலப் பாதிப்புகளைக் குறைக்கலாம்.

“இயற்கைச் சூழலில் சற்று நேரம் இருந்தாலும் அதனால் மனநலனுக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம்,” என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூருக்குச் சிறிய நிலப்பரப்பு இருந்தாலும் அதில் 40 விழுக்காடு (7,800 ஹெக்டர் அளவு) மரங்களும் புதர்களும் நிறைந்த பசுமைப் பகுதிகளாக உள்ளன.

நகரமயமாதல் அதிகரிக்க, நகர்ப்புற இடங்களில் இயற்கையை அதிகம் ஒருங்கிணைக்க புத்தாக்கமிக்க தீர்வுகள் தேவைப்படுகின்றன. போத்தல்களுக்குள் தாவரங்களை வளர்ப்பதற்கும் பாசியால் கலைப்பொருள்களை உருவாக்குவதற்கும் வகுப்புகளை ‘மைலேப்’ வழங்குகிறது.

“நகர்ப்புற, வெப்பமிகு சுற்றுச்சூழலில், இயற்கை வனப்பகுதிகளைச் சிலரால் எளிதில் அடைய முடியாது. எனவே, மெய்நிகர் அனுபவங்களையும் உள்ளரங்க நடவடிக்கைகளையும் வழங்குவதன் மூலம் மாற்று தீர்வுகளை வழங்குகிறோம்,” என்று பேராசிரியர் வாேங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்