தொழில் நிறுவனங்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதற்காக ஒருவரை ஒருவர் வேவு பார்த்தல், செயற்கை நுண்ணறிவு, எவ்வாறேனும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கம் என்பனவற்றை மையமாகக் கொண்ட ‘அவன் அவள் அது’ நாடகத்தை அவாண்ட் நாடகக் குழு மேடையேற்றியது.
அவாண்ட் நாடகக் குழு ஏற்பாடு செய்த ‘அவன் அவள் அது’ என்ற மேடை நாடகம், ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தின் ‘பிளாக் பாக்ஸ்’ இடத்தில் ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கருப்பொருளாகக்கொண்டு, அது ஒருவருக்கு எவ்வாறு உதவும், ஒருவரை எந்த நேரத்தில் ஏமாற்றும் என்பது காட்டப்பட்டது.
செயற்கை நுண்ணறிவை மருத்துவரீதியான செயல்களுக்குப் பயன்படுத்தலாம் என்று காட்டிய இந்நாடகம், அதைத் தவறான முறையில் பயன்படுத்தினால் நமக்கே தீங்கு விளைவிக்கும் என்றும் உணர்த்த முனைந்தது.
நாடகத்தில் பல திருப்புமுனைகள் இருந்தன. எதிர்பாராத முடிவும் மனத்தைக் கவரும் வசனங்களும் இடம்பெற்றிருந்தன.
இவற்றுக்குக் காரணமாக இருந்த சி.வெற்றிவேல், 25, “இதில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால், நாம் பார்க்க முடியாத ஒன்றை, அதாவது செயற்கை நுண்ணறிவை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்வது என்பதுதான். எனவே, நான் மேடையில் உணர்ச்சிகளை முன்னிலைப்படுத்த விரும்பினேன்,” என்று குறிப்பிட்டார்.
முதல்முறையாக நாடகத்தில் நடிக்கும் முகம்மது அஷ்ரப், 23, இது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தார்.
நாடகத்தில் நகைச்சுவை வேடமேற்றிருந்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவரான இவர், பயிற்சி செய்ய ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருந்ததாகக் கூறினார். தொடக்கத்தில் சற்று அஞ்சியதாகவும் பயிற்சிக்குப் பின்னர் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டதாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
அவருடன் இணைந்து நடித்த மீரா பாலசுப்ரமணியன், 40, “உலகமே செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்கிறது. அதை மக்கள் முழுமையாக நம்பியுள்ளனர். அதை மையமாகக் கொண்டு, இளையர்களை ஈர்க்கும் வண்ணம் இந்நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
பல இளையர்களை இந்த நாடகத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் ஜி.செல்வநாதன், இத்தளம் எதிர்கால நடிகர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் நாடகத் துறைமீதான ஆர்வத்தை மேம்படுத்தவும் உதவும் என்றார்.
“இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு முக்கியமானதாக உள்ளது. அதை எந்த அளவிற்குப் பயன்படுத்த வேண்டும், அதைக் கவனத்துடன் பயன்படுத்தாதபோது ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை மக்களுக்கு உணர்த்த விரும்பினோம்,” என்றார் அவர்.
“அத்துடன், மனிதர்களின் இருமுகங்கள் பற்றியும் இந்நாடகத்தில் ஆராய்ந்தோம்,” என்று கூறினார்.
துணை இயக்குநரும் நாடக நடிகர்களில் ஒருவருமான புரவலன் நாராயணசாமி, 51, “செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனிதர்களை ஆட்டிப்படைக்குமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. அதையொட்டி ‘யார் அடுத்த ஆளுமை?’ என்ற கேள்வியை மையமாகக்கொண்டு இந்நாடகத்தை அமைத்தோம்,” என்றார்.
இந்த நாடகத்தில் பங்கேற்பதற்கு முன்னர், செயற்கை நுண்ணறிவு பற்றி அதிகம் அறிந்திராத அவர், பின்னர் அதைக் கற்றறிந்து, பயிற்சி செய்ததாகக் கூறினார்.
செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு, அதையொட்டிய பல கருத்துகளை முன்னர் பார்த்திராத பார்வையாளர்கள், இந்த நாடகம் தங்களுக்குச் சிந்தனையைத் தூண்ட வைத்த ஒரு புதுமையான அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்டனர்.
“நேரடியாக வெளிப்பட்ட எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கண்டது நல்ல அனுபவமாக இருந்தது,” என்று ஃபர்ஹானா அப்துல் ஹமீட், 21, கூறினார்.
அவாண்ட் நாடகக் குழுவின் அடுத்த மேடை நாடகமான ‘காஃப்கா’ ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை அரங்கேறும்.

