கேட்பார் இன்றித் தவிக்கும் பிள்ளைகள் ‘டிங்கில் ஃப்ரெண்ட்’ தொலைபேசிச் சேவையை அழைக்கும்போது பல நேரங்களில் இவர் குரலைக் கேட்டிருப்பர்.
‘சில்ட்ரன்ஸ் சொசைட்டி’ எனப்படும் சிறார் சங்கத்தின்கீழ் 44 வயது திருவாட்டி சுவேதா ஆற்றிய தொண்டுக்காக அவருக்கு அந்த அமைப்பு, வெள்ளிச் சேவை விருதை வழங்கியது.
ஆர்ச்சர்ட் ஹோட்டலில் சனிக்கிழமையன்று (ஜூன் 29) நடைபெற்ற சிங்கப்பூர் சிறார் சங்க விருது நிகழ்ச்சியின்போது சுவேதாவுடன் மொத்தம் 64 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறார் சங்கத்தின் புரவலராக இருக்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அமைப்பின் தலைமை நிர்வாகி ஆங் பூன் மின்னும் விருதுகளை வழங்கினர்.
கோபால் ஹரிதாஸ் விருது, பிளாட்டினம் விருது, தங்க விருது உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
15 ஆண்டுகளாகப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் திருவாட்டி சுவேதா, ஆகஸ்ட் 2018ஆம் தேதியன்று சிங்கப்பூர் சிறார் சங்கத்தில் சேர்ந்தார்.
துணைப்பாட ஆசிரியராக இருந்துகொண்டு அவர், சிறார் அமைப்பைப் பற்றி இணையம் வழி அறிந்து அதிலேயே சேர முடிவெடுத்தார்.
‘டிங்கில் ஃப்ரெண்ட்’ தொலைபேசிச் சேவையில் தொண்டூழியராகத் தொடங்கி, உதவிக்காக அழைக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் உரையாடினார்.
தொடர்புடைய செய்திகள்
காலப்போக்கில் அவர், இளம் சந்தேக நபர்களுக்கான பெரியவர்கள் திட்டத்தில் (Appropriate Adult Scheme for Young Suspects) சேர்ந்து காவல்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட இளம் வயதினருக்கு மனநல ஆலோசனை வழங்கி வருகிறார்.
அத்துடன், நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் இளையர்களைச் சமாதானப்படுத்தி உறுதுணை அளிக்க முற்படும் ‘பாதிப்படையக்கூடிய இளம் சாட்சிகள்’ திட்டத்திலும் (Vulnerable Witness Support) திருவாட்டி சுவேதா பங்கேற்றார்.
தம் தொண்டூழிய அனுபவத்தில் பல்வேறு விதமான சம்பவங்களை எதிர்கொண்டதை திருவாட்டி சுவேதா, தமிழ் முரசிடம் பகிர்ந்தார்.
புதிதாக மணவிலக்கு செய்துகொண்ட பெற்றோர்களின் பிள்ளை, மாற்றாந்தந்தையால் வதைப்பட்ட சிறுமி, போலிஸ் விசாரணையின்போது பதறிய சிறுவன், தன் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணிய 10 வயது பிள்ளைஎன தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் அனுபவமும் திருவாட்டி சுவேதாவுக்கு உள்ளது.
இத்தகைய சவால்மிக்க சூழலை எதிர்கொள்ள திருவாட்டி சுவேதா, சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு பயிலரங்குகளுக்குச் சென்று திறன்களைக் கற்றுத் தேர்ந்தார்.
“சிறார் அமைப்பில் சேர்ந்த பின்னர் நான் பிறரைப் பற்றி முன்தீர்மானம் எடுப்பதைக் குறைத்துக்கொண்டு பிறர் சொல்வதை மேலும் நுட்பமாகச் செவிசாய்க்கக்கூடியவராக மாறியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.
பயிற்சியின்மூலம் தமது 15 வயது மகளைச் சிறந்த முறையில் பராமரிக்க முடிவதாகச் சொல்கிறார் சுவேதா.
சமூகத்திற்குப் பங்காற்றுவதுடன் நல்ல வளர்ச்சியைத் தொண்டூழியத்தால் அடைவதாகவும் திருவாட்டி சுவேதா கூறினார்.
“இப்போது என் கணவரும் இங்கு தொண்டூழியம் செய்து வருகிறார். பொதுமக்களும் இத்தகைய தொண்டூழியப் பணி செய்து மனநிறைவான மனநிலையை எட்டலாம்,” என்றார் திருவாட்டி சுவேதா.

