இளையரிடையே அதிகரித்து வரும் போதைப்புழக்கம் சிங்கப்பூர் சமூகத்தில் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. 2023ல் போதைப்பழக்கத்துக்காகப் பிடிபட்டோரில் பாதிக்கு மேற்பட்டோர் 30 வயதுக்குக் குறைந்தவர்கள்.
இவர்களில் ஐவர் 14 வயது மாணவர்கள். முதல்முறையாக கஞ்சா பயன்படுத்தியோரில் 64% இவ்வயது வரம்புக்கு உட்பட்டவர்கள்.
இந்நிலையில் இளையோரைப் போதைப்பொருள் தாக்கங்களிலிருந்து மீட்டெடுப்பதை ஒரு முக்கியக் குறிக்கோளாய் கொண்டுள்ள சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கம் (எஸ்.ஏ.என்.ஏ) ‘யூத் ரைஸ் அப்’ எனும் இளையர் பிரிவை அமைத்துள்ளது. ‘எழுச்சி’ எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட எஸ்.ஏ.என்.ஏயின் தொண்டு விழா ஜூன் 28ஆம் தேதி ‘தி ஃபுல்லர்டன்’ ஹோட்டலில் நடந்தேறியது.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம், பெண் போதைப்புழங்கிகளின் தனித்துவமான சவால்களைக் கண்டறிந்து அவற்றைக் களையும் எஸ்.ஏ.என்.ஏயின் முயற்சியைப் பாராட்டினார். போதைப்பொருள் ஒழிப்பில் ஓர் ஒட்டுமொத்தச் சமூகமே தேவைப்படுகிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.
உலகளவில் போதைப்பொருள் குறித்த மனப்போக்கு நீக்குப்போக்காகி வருவதும், இது சமூக ஊடகம் வாயிலாக இளையோரை அலைக்கழிப்பதும் வருத்தமளிப்பதாக நிகழ்வில் பேசிய எஸ்.ஏ.என்.ஏயின் தலைவர் ஜில்லியன் கோ டான் கூறினார். இச்சிக்கல்களை சமூக அளவில் களைவதற்கான பன்முகத் தீர்வுகள் அவசியம் என்றும் அவற்றை எஸ்.ஏ.என்.ஏ தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘யூத் ரைஸ் அப்’, இளையோரிடையே போதைப்பொருள் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்குடையது. இப்பிரிவை வழிநடத்தும் தலைவர்களில் ஒருவரான சொப்னா நாயர், தொடக்கப்பள்ளிக் காலத்திலிருந்தே மின்சிகரெட், போதைப்பொருள் ஆகியவற்றுக்கு இளம் பிள்ளைகள் அறிமுகமாவதைச் சுட்டினார்.
சக மாணவர்களும் நண்பர்களுமே இளம் தலைமுறையினரோடு இன்னும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆகவே, அத்தகைய வழியில் உதவும் இளையர் ஆதரவுக் குழுக்களை அமைக்கத் திட்டமிடுவதாக சொப்னா கூறினார்.
“பேசக்கூடாத தலைப்பாகப் போதைப்பொருள் தாக்கம் இருக்கக்கூடாது. இன்றைய இளையர்கள் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தை விரும்புகின்றனர். ஆரோக்கியமான பழக்கங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கருவிகளையும் தகவல்களையும் அவர்களுக்கு அளிப்பதே மிக அவசியம்,” என்றார் 34 வயது சொப்னா நாயர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஓராண்டாக எஸ்.ஏ.என்.ஏயில் தொண்டூழியராகப் பணிபுரிந்து வருகிறார் ஆட்டிசம் அசோசியேஷனில் பயிற்றுவிப்பாளராக இருக்கும் சொப்னா.
போதைப்பழக்கத்திலிருந்து மீண்டுவரும் பயணத்தில் உள்ளோருக்கு அவர் கைகொடுத்து வருகிறார். வேலை வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்குவது போன்ற வழிகளில் சொப்னாவைப் போன்ற ‘சனா காக்கிஸ்’ ஆதரவளித்து வருகின்றனர்.
கடந்த 52 ஆண்டுகளாக இயங்கி வரும் எஸ்.ஏ.என்.ஏ, ஆண்டுதோறும் போதைப்பழக்கத்திலிருந்து மீண்ட 2,000 பேருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. மாணவர்களைச் சென்றடையும் ‘பேட்ஜ்’ திட்டம், 1977ல் தொடங்கி இன்றளவில் 4,000 மாணவர்களை ஆண்டுதோறும் ஈடுபடுத்துகிறது. 2021லிருந்து 2023 வரை இயங்கிய இளையர் சுயமேம்பாட்டுத் திட்டத்தின்மூலம் போதைப்பொருளைத் தவிர்க்கும் வழிமுறைகளைக் கண்டறிவது பற்றிப் பகிரப்பட்டது. இத்திட்டத்தைப் பள்ளிகளில் அமலாக்கும் எண்ணம் கொண்டுள்ளது எஸ்.ஏ.என்.ஏ.
மீண்டும் குற்றம் புரிவது, பிற குற்றவாளிகளைக் காட்டிலும் போதைப்பொருள் குற்றவாளிகளிடையே மூன்று மடங்கு அதிகம். போதைப்பொருள் குற்றவாளிகளின் பிள்ளைகள் குற்றம் புரியும் வாய்ப்பு, பிற பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகம்.
இவற்றைக் கோடிகாட்டி, போதைப்பொருள் சிக்கல்களை ஒரு சிறுபான்மையினரின் போராட்டமாகக் கருதவேண்டாம் என்று திருவாட்டி ஜில்லியன் கூறினார்.