புதுமையை வரவேற்று காலத்துக்கேற்ற ருசியான, ஆரோக்கியமான சைவ உணவை மக்களுக்கு வழங்குவது நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆனந்த பவனின் தலையாய நோக்கம். இதன் அடிப்படையில், ஜூன் 11ஆம் தேதி தனது சமையல் வல்லுநர்களுக்கான போட்டி ஒன்றை அது நடத்தியது.
ஆனந்த பவனின் பயணத்தைச் செழுமையாக்கக் கைகொடுத்துள்ள ஊழியர்களோடு இணைந்து இம்மைல்கல்லைக் கொண்டாடும் எண்ணத்தில் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட 17 உணவுவகைகளில் எட்டு உணவுகள், சிறப்புப் பரிசுகளை வென்றன. உற்சாகத்துக்கும், புத்தாக்கத்துக்கும் ஏனைய உணவுவகைகள் பரிசு பெற்றன. ஜூலை 20ஆம் தேதி அன்று இடம்பெறும் ஆனந்த பவனின் நூற்றாண்டு விழா சிறப்புப் பட்டியலில் இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில இணைக்கப்பட உள்ளன.
தென்னிந்திய, வட இந்திய, கலவை பாணியிலான உணவுவகைகளை ஆனந்த பவனின் ஊழியர்கள் போட்டியில் திறம்பட தயாரித்தனர். முதல் பரிசான $1,000 வென்றது வல்லுநர் திரு பாசுவின் பன்னீர் கெபாப் உணவுவகை.
கையால் அரைத்த 24 மசாலா பொருள்களைக் கொண்ட அவரின் பன்னீர் சார்ந்த உணவுவகையை வெகுவாகப் பாராட்டினார் நடுவரான பிரபல சமையல் கலைஞர் திரு பாலா. அவர் தமது தனிப்பட்ட கத்தி வடிவிலான அணியூக்கு ஒன்றை திரு பாசுவிற்குப் பரிசளித்தார்.
“ஆனந்த பவன் ஆரோக்கியத்தை எப்போதும் விட்டுக்கொடுப்பதில்லை. புதுப்புது உணவுவகைகளையும் உத்திகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் எனக்கு இங்கு கிடைத்துள்ளன,” என்றார் கடந்த ஐந்து மாதங்களாய் ஆனந்த பவனில் பணிபுரியும் 29 வயது பாசுதேவ் ஜனா. அத்தகைய சிறந்த உணவுத்தரத்தையே ஆனந்த பவனுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், ‘எம்.எஸ்.ஜி’, செயற்கை பதனப்பொருள்கள், செயற்கை நிறங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஆனந்த பவன் முற்றிலும் தவிர்த்து வருகிறது.
ஒவ்வொரு வேளைக்கும் புதிதாய் உணவு தயாரிப்பதோடு, முழு பச்சை காய்கறிகளைப் பயன்படுத்துவது அதன் வழக்கம். சிங்கப்பூரில் இயங்கும் ஆகப் பழமைவாய்ந்த இந்திய உணவகங்களில் ஒன்றான ஆனந்த பவன், தென்னிந்திய சைவ உணவோடு தற்சமயம் மக்களின் மனதை அறிந்து நனிசைவ (vegan), இந்தோ-சீன உணவுகளையும் வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
“வாடிக்கையாளர்களுக்கு நல்ல சுவையுள்ள உணவு தரும் அதே வேளையில், அவர்களின் உடல்நலனையும் மனத்தில் வைத்தே ஆனந்த பவன் இயங்குகிறது. சைவ உணவை அரவணைக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதில் பங்களிப்பதும் எங்களின் குறிக்கோள் ஆகும்,” என்றார் ஆனந்த பவன் உணவகத்தின் தலைமை நிர்வாகி விரென் எட்டிகன்.
திரு குழந்தைவேலு முத்துசாமி கௌண்டராலும் அவரின் சகோதரர்களாலும் 1924ல் ஆனந்த பவன் தொடங்கப்பட்டது. சிலிகி சாலையின் எல்லிசன் கட்டடத்தில் திறக்கப்பட்ட அது, தற்போது ஐந்து இடங்களில் இயங்கி வருகிறது.