தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வலிகளை வண்ணங்களாக்கிய ஓவியக் கண்காட்சி

3 mins read
1d50a4f2-f7e5-43a8-b042-321a40ad5b22
கண்காட்சியில் பங்கேற்ற சிலருடன் சிறப்பு விருந்தினர் எரிக் சுவா. - படம்: ராஜேந்திரன் கே சேதுராஜ்

‘ஆட்டிசம்’ - இச்சொல்லைக் கேட்டவுடன் தொடர்புத்திறன் குறைபாடு கொண்ட குழந்தைகள், அவர்களுக்கு சமூகம் தரவேண்டிய ஆதரவு ஆகியவை நினைவுக்கு வரும். சிலருக்கு, அந்த பாதிப்பைக் கடந்து சாதித்தவர்களின் கதைகள் நினைவுக்கு வரலாம்.

ஆனால், அவர்களை கவனித்துக்கொள்ள, தங்கள் வேலை, கனவு அனைத்தையும் விடுத்து அவர்களுக்காகவே வாழ்வை அர்ப்பணிக்கும் பராமரிப்பாளர்கள் குறித்து யாரும் பெரிதாகப் பேசுவதில்லை.

பராமரிப்பாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், சமூகம் சில நேரங்களில் தரும் மனவலி, சுயகழிவிரக்கம் ஆகியவை வெளியில் தெரிவதில்லை. அவர்களின் கதைகளைச் சொல்லவும், அவர்களை அரவணைக்கும் விதமாகவும் ‘ஆசீர்வாதம்’ எனும் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

இந்திய சமூகத்தைச் சேர்ந்த பத்துப் பராமரிப்பாளர்களின் உருவப்படத்தைக் காட்சிப்படுத்திய இக்கண்காட்சி சிண்டாவில் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

தாய், தந்தை, பாட்டி, அக்கா என குறைபாடுள்ளோரைப் பராமரிக்கும் பத்துப் பேரின் கதைகளைப் பேசும் ஓவியங்களைப் பத்து உள்ளூர்க் கலைஞர்கள் படைத்துள்ளனர்.

தொடர்புத் திறன் குறைபாடுள்ள தன் மகனைச் சுற்றியே தனது வாழ்வை அமைத்துக்கொண்டுள்ள ராஜேந்திரன் கே சேதுராஜ், 56 இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார்.

“என்னைப் போன்றவர்களின் மன இறுக்கம் குறையவும், தொடர்புத் திறன் குறைபாட்டின் காரணமாக சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் பராமரிப்பாளர்களுக்கு ஊக்கமளிக்கவும், பொதுமக்களுக்குப் பராமரிப்பாளர்களின் சிரமங்களைத் தெரியப்படுத்தவும் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தேன்,” என்றார் திரு ராஜேந்திரன்.

ஏறத்தாழ 130க்கும் மேற்பட்டோர் இக்கண்காட்சிக்கு வந்து சென்றதை சுட்டிக்காட்டியதுடன், அவர்கள் மத்தியில் இது ஒரு நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புவதாகச் சொன்னார்.

தன் மகன் ஹீரனை ஒற்றைத் தாயாக வளர்த்தெடுத்து, தற்போது 25 வயதில் அவரை வேலைப்பயிற்சி பெறும் அளவிற்கு முன்னேற்றியுள்ள திருவாட்டி லேகா, தன்னை முற்றிலும் புதிதாக மாற்றிய இப்பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள, அதனை உருவப்படத்தில் வார்த்தெடுத்துள்ளார் கலைஞர் இங் வய் லின்.

தன் தம்பியுடன் இயல்பாகப் பேசிப் பழகச் சிரமப்பட்டாலும், அதனை மீறி அவருக்குக் கணிதம், அறிவியல் கற்பிக்கும் அனுஷ்கா, சவால்மிக்க நேரங்களில் தான் நிலைகுலைந்து போவதையும், தன் தம்பிக்கு அரவணைப்புத் தர வேண்டும் என தான் ஆசைப்படுவதையும் பகிர்ந்தார். ஓவியக் கலைஞர் வோங் கெங் செங் வரைந்த அனு‌ஷ்காவின் ஓவியம் அவரது மனத்தவிப்பை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது.

சமூக அலட்சியம் தரும் எதிர்கால பயத்தைப் பகிர்ந்துகொண்ட ராஜசேகர், நக்கீரன், தன் கனவுகள் தகர்ந்தாலும் மீண்டெழுந்து ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் சக்திதாசன், தன் செல்லப் பேரனைப் போன்ற பிள்ளைகளுக்கு பக்கபலமாக இருக்க வலியுறுத்தும் வாசுகி, மனவலிமையுடன் போராடும் கல்யாணி என ஒவ்வொருவரது கதை பேசும் ஓவியங்களும் காண்போர் மனங்களைத் தொடுவதாக விளங்குகின்றன.

பராமரிப்பாளர்களுக்கு ஆசீர்வாதமாக அமையும் இந்த ஓவியக் கண்காட்சிக்கு எந்தவித பயனும் எதிர்பாராமல் ஓவியங்கள் வரைந்துகொடுத்த கலைஞர்கள், யாருமறியாத அவர்களது கதைகளை அடிப்படையாகக் கொண்டு வரைந்தது மனநிறைவு அளிப்பதாகத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்