தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆனந்த பவன் உணவகம் நூற்றாண்டு நிறைவு நிழற்படப் போட்டியின் வெற்றியாளரைத் தேர்ந்தெடுங்கள்!

5 mins read
d3458b8d-139d-42e0-9ad2-1338b2bff078
2022 தீபாவளியின்போது ஆனந்த பவன் உணவகத்தில் இடம்பெற்ற தின்பண்ட விற்பனை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆனந்த பவன் உணவகம், தனது நூற்றாண்டு நிறைவையொட்டி இணையவழி நிழற்படப் போட்டியை நடத்துகிறது.

சிங்கப்பூரில் சுவையாகச் சமைக்கப்படும் தமிழ்ப் பாரம்பரிய உணவு வகைகளை இந்த உணவகத்தில் பல தலைமுறைகளாகச் சுவைத்தவர்களின் மறக்கமுடியாத தருணங்களை இந்தப் போட்டிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட படங்கள் ஆவணப்படுத்துகின்றன.

இந்தப் போட்டிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஏறக்குறைய 100 படங்களிலிருந்து நடுவர்கள் தேர்வுசெய்த 15 படங்கள் பொதுமக்களின் வாக்களிப்புக்காக விடப்பட்டுள்ளன.

நினைவுப் பயணத்தின் முத்தாய்ப்பாக, ஆனந்த பவனின் நூற்றாண்டு நிறைவு விருந்து ஜூலை 20ஆம் தேதியன்று நடைபெறும். அப்போது, நிழற்படப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

முதல் பரிசாக 500 வெள்ளி ரொக்கமும் இரண்டாம் பரிசாக 300 வெள்ளி ரொக்கமும் மூன்றாம் பரிசு 200 வெள்ளி ரொக்கமும் வழங்கப்படும். இவற்றுடன், 100 வெள்ளி பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.

வாக்களிக்க விரும்புவோர் இந்த இணைப்பை நாடலாம்.

மணவிழாவில் குதூகல ‘நங்கையர் சங்கிலி’ (2020)

- படம்: டி. சாந்தி மகேந்திரன்

டி. சாந்தி மகேந்திரன்: என் திருமண நாளன்று தோழிகளுடன் ஆனந்த பவன் நிகழ்ச்சி அறையில் ஆடிச் சிரித்து மகிழ்ந்த இன்பமான, உயிரோட்டமிக்க, அற்புதமான தருணத்தை இந்தப் படம் ஆவணப்படுத்துகிறது. அத்துடன், என் திருமணத்தின்போது சிறப்பாகத் தெரிவு செய்யப்பட்ட உணவும் நினைவிற்கு வந்தது.

உணவக ஊழியர்களுடன் இரவு உணவு (1971)

- படம்: லிங்கம் சின்னப்பன் ராமசாமி

லிங்கம் சின்னப்பன் ராமசாமி : 221 சிலிகி ரோட்டில் இருந்த பழைய ஆனந்த பவனில் அப்போது சிறுவனாக இருந்த நான், இரவு நேரத்தில் கடை ஊழியர்கள் உடனிருக்க சுவையான உணவை வாழையிலையில் சாப்பிடுகிறேன்.

வண்ணமய, சத்துள்ள ரங்கோலி (ஜனவரி 2019)

- படம்: கலா தேவி

கலா தேவி: லிட்டில் இந்தியாவில் 2019ல் உருவாக்கப்பட்ட ‘ஆர்ட்வொர்க்’கின் ஓர் அங்கமாக ரங்கோலிக்கான அடிப்படை வடிவத்தை வரைந்தேன். ரங்கோலி வடிவத்தை தாளிப்புப் பொருள்களாலும் பருப்பாலும் நிரப்பும் யோசனையை ஆனந்த பவன் ஊழியர்கள் வழங்கினர். இந்தச் ‘சத்துள்ள’ ரங்கோலி, நிகழ்ச்சிக்காகக் கூடியிருந்தோரின் கண்களுக்கு விருந்தளித்தது.

சிறந்த சேவையாளர்

- படம்: அப்பாதுரை செந்தில்குமார்

அப்பாதுரை செந்தில்குமார் (2020): 2020ல் ஆனந்த பவனின் ‘இயந்திர சிப்பந்தி’யை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். உணவு, பானத்துறையில் நிலவிவந்த தொடர்ச்சியான ஊழியர் பற்றாக்குறையால் நாங்கள் இந்தத் திட்டத்தைத் தாெடங்கி வைத்தோம். இந்த ‘இயந்திர சிப்பந்தி’யைப் பலர் தங்களது சமூக ஊடகங்களின் மூலம் காண்பித்து மகிழ்ந்தனர்.

இளமையின் இனிமை

- படம்: சாய் குமார்

சாய் குமார் ( 1970கள்) : 221 சிலிகி ரோட்டில் முன்பு இருந்த ஆனந்த பவனின் பழைய கடையில் என் மாமா நடராஜன் பணியாற்றுவதை இந்தப் படம் காட்டுகிறது. சுற்றியும் கண்ணுக்கு நிறைவான நிறங்களில் நாவிற்குச் சுவையான உணவு வகைகள். பலகாரங்கள் அடுக்கப்பட்ட விதம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

அமுத சுரபிகள்

- படம்: விஜயலட்சுமி, ஜெயராஜ்

விஜயலட்சுமி, ஜெயராஜ் (2023) - அன்பர்கள் சூழ இன்பமயமாக அமைந்தது எங்கள் மணநாள். புனிதமரம் பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற எங்கள் திருமணத்தில் ஆனந்த பவன் உணவை வாழையிலையில் பரிமாறும்படி கேட்டிருந்தோம். உணவக ஊழியர்களின் விருந்தோம்பல் மனத்திற்கு நிறைவாக இருந்தது. அன்று எங்களுக்குத் தெரிந்தன, அமுத சுரபிகள் இரண்டு!

சுடச்சுட இட்லி, சாம்பார், சட்னி

- படம்: அப்துல் மாலிக் முஹம்மது அபு பக்கார் 

அப்துல் மாலிக் முஹம்மது அபு பக்கார் (ஜூன் 2024): இரவு நேர வேலைக்குப் பிறகு களைத்துப் போகும் எனக்கு இதம் தருவது இந்த இட்லியும் தேனீருந்தான். வேலைக்கு முன்பு அல்லது பின்பு நான் இங்குதான் என் காலை உணவையும் மதிய உணவையும் உண்பேன். புன்னகை பூத்த முகங்களுடன் என்னை வரவேற்க ஆனந்த பவன் ஊழியர்கள் காத்திருக்கும் காட்சி என் மனத்தை என்றுமே நிறைக்கக்கூடியது.

கவர்ச்சிகரக் கைவினை

- படம்: ஹஷிமுதீன்

ஹஷிமுதீன் (ஜனவரி 2019): காய்களின்மீது வடிவங்களைச் செதுக்கி வரைவது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. லிட்டில் இந்தியாவிலுள்ள ஆர்ட்வொர்க்கில், காய்கறிகளில் நுட்பமிகு மலர் வடிவங்களைத் தீட்டினேன். ஆனந்த பவன் உணவகத்திற்கு வெளியே நான் செய்து காண்பித்த கைவினை பலரின் கவனத்தை ஈர்த்தது.

82 வயது பிறந்தநாளுக்காக இன்ப அதிர்ச்சி தந்த சக ஊழியர்கள்

- படம்: நாராயணசாமி ஜெகநாதன்

நாராயணசாமி ஜெகநாதன் (மே 2024) : 58 சிராங்கூன் ரோட்டில் என்னுடன் வேலை செய்துவந்த ஊழியர்கள் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து எனக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். மே 19ஆம் தேதியன்று நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தால் என் உள்ளம் குளிர்ந்தது. கடை முதலாளிகளில் ஒருவர் அங்கு வந்து எனக்கு அன்பளிப்பாகப் பணம் தந்ததும் என்னால் மறக்க இயலாதது.

மரியாதைக் காவலர் கலந்துகொண்ட திருமண விருந்து

- படம்: மலர் ராணி ஜீவரத்தினம்

மலர் ராணி ஜீவரத்தினம் (1993): ஆனந்த பவன் உணவகத்திலிருந்து விநியோகம் செய்யப்பட்ட எங்கள் திருமண விருந்துணவை எங்கள் விருந்தினர்கள் ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் திருமண மண்டபத்தில் உண்கின்றனர். 1993ஆம் ஆண்டு என் திருமணம் நடைபெற்றது. புது மாப்பிள்ளையாக அப்போது இருந்த என் கணவர், ராணுவத்தில் கேப்டனாக இருந்ததால் மரியாதைக் காவலர் திருமண நிகழ்வில் பங்கேற்றார்.

கொவிட்-19 நன்கொடைக்காகத் தின்பண்டங்களைப் பொட்டலமிடுதல் (மே 2020)

- படம்: ராஜசேகர்

ராஜசேகர்: கொவிட்-19 கிருமிப்பரவலின்போது தங்குவிடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான தின்பண்டங்களைப் பொட்டலமிடும் ஆனந்த பவன் குழுவினர். பரிவுமிக்க இந்தச் செயல், கூட்டாக செய்யப்பட்ட நன்கொடை.

கொவிட்-19 காலகட்டத்தில் வளைகாப்பு (2020)

- படம் : நித்யா பாலு

நித்யா பாலு :தற்போது மூன்று வயதாகியுள்ள என் இரண்டாவது பிள்ளையை எதிர்பார்த்து நடத்திய வளைகாப்பு எனக்கு உணர்ச்சிபூர்வமான வளைகாப்பாக இருந்தது. 2020ல் கொவிட் -19 தொடர்பான விதிமுறைகளுக்கு இடையே நடந்த அந்தத் திருநிகழ்வில் உற்றார் உறவினர் சூழ நாங்கள் இன்ப வெள்ளத்தில் நனைந்தோம்.

ஆகப் பெரிய முறுக்கு சாதனை முயற்சி (அக்டோபர் 2017)

- படம்: தென்னரசு

சமையல் வல்லுநர் தென்னரசு: இந்த மாபெரும் முறுக்கைத் தயாரிப்பதற்கான திட்டத்தை நிறைவேற்றுவது ஆனந்த பவன் நிறுவனத்திற்குப் பெருஞ்சவாலாக இருந்தது. முறுக்கைச் சரியாகச் சுடுவதற்காக நாங்கள் பலமுறை சோதனை செய்திருந்தோம். பல்வேறு சுடுகலன்களைப் பயன்படுத்தினோம். குழு உறுப்பினர்கள் வழங்கிய நல்ல யோசனைகளால் நாங்கள் அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்தோம். அந்த அனுபவம் எங்களுக்கு மனநிறைவளித்தது.

மகளின் நான்கு வயது பிறந்தநாள் (மே 2019)

- படம் : விஜய் ராஜ்

விஜய் ராஜ்: குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்த உணர்ச்சிமிகு தருணத்தைக் காட்டுகிறது இந்த நிழற்படம். எங்கள் மகளின் நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடுவதுடன் குடும்ப உறுப்பினர்கள் எங்களுக்குப் புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகளையும் கண்டு மகிழ்ந்தனர். ஆனந்த பவன் உணவகம் எல்லோருக்கும் போதிய இடமளித்து வயிறார உணவு பரிமாறியது. வீடு போன்ற சூழலை அன்று அங்கு நாங்கள் உணர்ந்தோம்.

காசாளர் மேசைக்குப் பின் கணவர் (1997)

-

காந்தி பாலு : 221 சிலிகி ரோட்டில் இருந்த ஆனந்த பவன் உணவகத்தில் காசாளர் மேசைக்குப் பின்னாள் என் கணவர் நின்றுகொண்டிருந்தார். அக்காலத்தில் நீங்கள் மேசையில் அமர்ந்த பின்னர் உணவக ஊழியர் உங்களிடம் என்ன சாப்பிடுகிறீர்கள் எனக் கேட்பார்கள். இப்போது என் கணவர் உணவு விநியோகத்தில் பணியாற்றுகிறார். இது எங்களுக்கு இன்ப நினைவு.

குறிப்புச் சொற்கள்