நுண்கலை மாணவர்களின் நுட்பமிகு ஓவிய பாணிகள் காட்சிப்படுத்தப்பட்டன

2 mins read
பட்டச்சித்திரம், மதுபாணி, தஞ்சாவூர், கேரளா உள்ளிட்ட 14 வித இந்திய ஓவிய பாணிகள் இடம்பெற்றன
7f35d173-382b-4e1a-bb2a-8d547b3febd5
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் ஓவியக் கண்காட்சியில் காட்சிக்கலை மாணவர்களின் படைப்பு. - படம்: சிஃபாஸ்

கைதேர்ந்த ஓவிய மாணவர்களின் படைப்புகள், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் (சிஃபாஸ்) கண்காட்சியின் வாயிலாகப் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டன.

கடந்த வாரம் புதன்கிழமை (ஜூலை 3) முதல் ஞாயிறு வரை 2A ஸ்டார்லைட் ரோட்டில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், வருகையாளர்கள் கண்கவர் ஓவியங்களையும் சிற்பங்களையும் கண்டு ரசித்ததுடன் அவற்றை உருவாக்கிய ஓவியர்களுடன் உரையாடியும் மகிழ்ந்தனர்.

பட்டச்சித்திரம், மதுபாணி, தஞ்சாவூர், கேரளா உள்ளிட்ட 14 வித இந்திய ஓவிய பாணிகளுடன் மேற்கத்திய சாயலையும் கொண்டுள்ள பல வண்ண ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஓவிய ஆசிரியர் ரகுவீரன் பால்ராஜின் வழிகாட்டுதலில் சிஃபாஸ் கலைப் பள்ளியில் துடிப்புமிக்க ஓவியச் சமூகம் உருவாகியுள்ளது. சென்னையின் டாவின்சி ஊடகக் கல்லூரி, கம்ஃபர்ட் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட கலைப் பள்ளிகளில் பயின்ற திரு ரகுவீரன், ஓவியத்திலும் உயிரோவியத்திலும் தேர்ச்சி பெற்றவர்.

தஞ்சாவூர் பாணியிலான தம் ஓவியங்களைப் பற்றி வருகையாளர்களுக்கு விளக்கம் தரும் ஓவிய மாணவர் மீனாம்பிகை சுந்தரவடிவேலன்.
தஞ்சாவூர் பாணியிலான தம் ஓவியங்களைப் பற்றி வருகையாளர்களுக்கு விளக்கம் தரும் ஓவிய மாணவர் மீனாம்பிகை சுந்தரவடிவேலன். - படம்: சிஃபாஸ்

எட்டு நிலைகளில் கற்பிக்கும் சிஃபாசின் காட்சிக்கலைத் துறை, தனது பாடத்திட்டத்தைக் கடந்த ஆண்டு மறுஆய்வு செய்ததை திரு ரகுவீரன் சுட்டினார்.

“ஆரம்ப நிலையில் பென்சிலைப் பயன்படுத்தி நிழல்களை வரைதல், வண்ணங்களை எவ்வாறு பயன்படுத்துதல் போன்ற திறன்களை மாணவர்கள் கற்கின்றனர். போகப்போக, அக்ரிலிக் ஓவியங்கள் போன்றவற்றைக் கற்று இறுதியில் கண்காட்சி, ஓவிய நூல் படைக்கும் திறனாளர்களாக மலர்வர்,” என்று அவர் கூறினார்.

கண்காட்சியில் தங்கள் படைப்புகள் இடம்பெறுவதில் மகிழ்ச்சி அடையும் மாணவர்களில் ஒருவரான மீனாம்பிகை சுந்தரவடிவேலன், தம் படைப்புகளுக்கு அந்தக் கண்காட்சி சிறந்த தளம் என வருணித்தார்.

“2013 முதல் நான் இந்தப் பள்ளியில் காட்சிக் கலையைப் பயின்று வருகிறேன். தஞ்சாவூர் பாணியைப் பழகிக்கொண்டு தமிழ் மணப்பெண்ணைப் பற்றிய படங்களைத் தயாரித்துக் காட்சிக்கு வைத்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

காகிதச் சுருள்கள் தொடர்பான கலையானது ‘பேப்பர் குவிலிங்’. இதன் மூலம் பெண்ணின் பெருமையை வெளிப்படுத்த முடிந்ததாக ராமப்ரியா ஜெயராமன், 53, பகிர்ந்துகொண்டார்.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கு மத்தியிலும் கையால் உருவான ஓவியப் படைப்புகளுக்கு என்றுமே தனி மதிப்பு இருக்கும் என்று திரு ரகுவீரன் தெரிவித்தார்.

“நாகரிகங்களின் சிறப்புக்கு அவற்றின் கலைப் படைப்புகளே அளவுகோல் என அகழ்வாராய்ச்சிகளில் காண்கிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்