காந்தக் குரலால் சிங்கப்பூர் ரசிகர்களை மீண்டும் கட்டிப்போட ‘ஷேர் தி லவ்’ இசைக் கச்சேரியை சனிக்கிழமை (ஜூலை 13) படைக்கவிருக்கிறார் பிரபல இந்தியப் பின்னணி, மேடைப் பாடகர் சித் ஸ்ரீராம்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் இடம்பெறும் இவருடைய இசை நிகழ்ச்சியை இம்முறை மேடைக்கு மிக அருகில் நின்றுகொண்டு பார்த்து ரசிக்கும் வாய்ப்பை ஏற்பாட்டாளர்கள் ஏற்படுத்தித் தருகின்றனர்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 12) செய்தியாளர் சந்திப்பில் பேசிய சித் ஸ்ரீராம், “சிறு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் எனது திரைப்படப் பாடல்களை இசை நிகழ்ச்சியில் படைக்கவுள்ளேன். அவை தரும் உற்சாகத்தை ரசிகர்களுடன் இணைந்து உணர நானும் ஆவலுடன் உள்ளேன். நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்கள் புத்துணர்வோடு விடைபெறுவர் என நம்புகிறேன்,” எனக் கூறினார்.
ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க பாடல்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அவற்றைப் படைப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார் இவர்.
ரசிகர்கள் முன் பாடல்களைப் படைக்கும் அனுபவமே தனி எனக் கூறிய சித் ஸ்ரீராம், கூட்டமாகத் திரண்டு வரும் மக்களுடன் ஒன்றிணைந்து இசையைக் கொண்டாடும் தருணங்கள் ஒவ்வொரு முறையும் உற்சாகம் தருகின்றன என்றார்.
சிறு வயதிலிருந்தே கர்நாடக இசை பயின்று வந்த சித் ஸ்ரீராம், எந்தவோர் எதிர்பார்ப்புமின்றி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு அனுப்பிய மின்னஞ்சல் இவரது இசைப் பயணத்தையே மாற்றியமைத்தது.
‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘அடியே’ பாடலில் தொடங்கிய இவரது பயணம், இன்று உலகளவில் இந்திய இசையைப் பிரதிநிதிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது.
‘தள்ளிப் போகாதே’ எனும் பிரபல பாடல் தயாரான தருணத்தை சித் ஸ்ரீராம் நினைவுகூர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“பாடலாசிரியர் தாமரை என் உச்சரிப்பை செம்மைப்படுத்த உதவினார். ஆங்கிலப் பாணியின் தாக்கம் அதிகம் இருந்ததால் என்னுடன் அமர்ந்து ஒவ்வொரு வார்த்தையின் உச்சரிப்பை அவர் சொல்லிக் கொடுத்தார். ஏறத்தாழ 10 மணி நேரம் கடந்தாலும் தொய்வடையாமல் அவர் வழிகாட்டினார்,” என்று சித் ஸ்ரீராம் பகிர்ந்தார்.
பாடலாசிரியர் தாமரையின் வழிகாட்டுதலும் தாம் கற்ற பாடமும் மறக்கமுடியாத தருணங்கள் என்றார் இவர். கடும் உழைப்பும் தொடர் பயிற்சியும் இன்றி திறமையை மட்டும் நம்பி இருந்துவிட முடியாது என்றார் இவர்.
இசைவழி இந்தியக் கலாசாரத்துடன் இணைந்து வளர்ந்த சித் ஸ்ரீராம், செயல்கள் மற்றும் முன்மாதிரியாக இருப்பதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு நம் மொழியையும் கலாசாரத்தையும் கொண்டுசேர்க்க முற்பட வேண்டும் என்றார்.
தன் தொழில் தந்துள்ள இப்பொறுப்பை பெருமையுடன் ஏற்றுள்ள இவர், ஆர்வத்துடன் இசை மூலம் தன் பங்கை ஆற்றுகிறார்.
தமிழ்த் திரையிசைப் பாடல்களை சிங்கப்பூர் மக்களுக்காக ‘ஷேர் தி லவ்’ இசைக் கச்சேரியில் சித் ஸ்ரீராம் பாடவுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் https://sistic.com.sg/events/sid0724 என்ற சிஸ்டிக் இணையப்பக்கத்தில் நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.