இங்கிலாந்துக் காற்பந்து என்றாலே காற்பந்து ரசிகர்களின் முகத்தில் ஒரு புதுப்பொலிவைக் காணலாம்.
அதுவும் அத்தகைய காற்பந்துக் கோட்டையில் நுழைவதென்பது சிங்கப்பூரர்கள் பலரது நிறைவேறாத கனவு. அது வெறும் கனவுக் கோட்டையல்ல என நிரூபித்துள்ளார் 30 வயது சுரேன் வாட்டா.
அவர் தற்போது இங்கிலாந்தின் சார்ல்டன் அத்லெடிக் பெண்கள் காற்பந்து முதல் அணியின் தலைமை இயன்முறை மருத்துவராகப் (lead physiotherapist) பணிபுரிகிறார்.
சிங்கப்பூர் அமைத்த அடித்தளம்
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (எஸ்ஐடி), டிரினிடி கல்லூரி டப்ளின் இணைந்து வழங்கும் நான்காண்டு இயன்முறைப் பட்டப்படிப்பை முதன்முதலாக மேற்கொண்ட மாணவர்களில் சுரேனும் ஒருவர்.
இயன்முறை மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் - சிறுவயதில் காற்பந்து விளையாட்டின்போதும் தேசிய சேவையின்போதும் கால் எலும்புகளில் ஏற்பட்ட முறிவுகளும் பிரச்சினைகளுமே. அவரைக் குணப்படுத்திய இயன்முறை மருத்துவர்களின் சிகிச்சைகள், அத்துறைமீது அவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தின.
படிப்பை முடித்தவுடன் ‘யூ-ஃபிட்’ எனும் தனியார் மருந்தகத்தில் முழுநேரமாகப் பணியாற்றத் தொடங்கிய சுரேன், ரக்பி விளையாட்டு தொடர்பாக இயன்முறை மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். எனினும், சிறுவயதில் தந்தையுடன் தொலைக்காட்சியில் காற்பந்து விளையாட்டுகளைக் கண்டு ரசித்ததை அவர் மறக்கவில்லை.
அதனால், தெம்பனிஸ் ரோவர்ஸ் ஆண்கள் முதல் அணியிலும் ஜேஎஸ்எஸ்எல் சிங்கப்பூர் பெண்கள் முதல் அணியிலும் பகுதிநேரக் காற்பந்து இயன்முறை மருத்துவராகவும் அதே சமயத்தில் பணிபுரிந்தார்.
இங்கிலாந்திற்குச் சிறகடித்துச் சென்ற சுரேன்
“அப்போது காற்பந்து இயன்முறை மருத்துவத்தில் சிங்கப்பூரில் முழுநேர வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்தது. அதனால் நான் வெளிநாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தேன். அதுவும் காற்பந்தின் சிகரமான இங்கிலாந்தைக் குறிவைத்தேன்,” என்றார் சுரேன்.
தொடர்புடைய செய்திகள்
‘லிங்க்ட்இன்’ தளத்தில் அவர் முன்னுதாரணங்களாகக் கருதிய பல இயன்முறை மருத்துவர்களும் முதுநிலைப் பட்டங்கள் வைத்திருப்பதால், தாமும் அவ்வாறு இங்கிலாந்தில் மேற்படிப்பு மேற்கொண்டால் அங்கு வேலைவாய்ப்புகளைத் தன்வசப்படுத்தலாம் என எண்ணினார் சுரேன்.
பல பெரிய காற்பந்து அணிகளுக்கு அருகில் உள்ள பர்மிங்ஹேம் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பைப் பயில விண்ணப்பித்தார் சுரேன். செப்டம்பர் 2022 முதல் 2023 வரை அங்கு படிக்கும் வாய்ப்போடு, காமன்வெல்த் உபகாரச் சம்பளத்தையும் அவர் பெற்றார்.
எனினும், அது அவரது முதற்படியே. இங்கிலாந்தில் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை சுரேன் விரைவில் உணர்ந்தார். பல இடங்களில் விண்ணப்பித்தும் வேலை கிடைக்காது சோர்ந்தபோது அதிர்ஷ்டம் அவரது கதவைத் தட்டியது.
ஒருநாள் காற்பந்துத் திடலைச் சுற்றி அவர் ஓடிக்கொண்டிருந்தபோது அங்குப் பயிற்சி செய்துகொண்டிருந்த விளையாட்டாளர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டிருந்ததை அவர் கண்டார். அங்கு இயன்முறை மருத்துவர் யாரும் இல்லாததால், விளையாட்டாளர் பெரும் வருத்தத்தோடு பயிற்சியிலிருந்து ஓய்வெடுத்தார்.
அப்போது சுரேன் பயிற்றுவிப்பாளரிடம் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவ்விளையாட்டாளருக்குத் தம்மால் உதவமுடியும் என்றார். அவ்வாறு தொடங்கியதுதான் சுரேனின் இங்கிலாந்து வேலைப் பயணம். அதன் பின்பு, வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன. பர்மிங்ஹேம் காற்பந்து அணியிலுள்ள 9 முதல் 16 வயது வரையிலான காற்பந்து வீரர்களுக்கு முழுநேர இயன்முறை மருத்துவராகப் பணியாற்றும் வாய்ப்பும் கிட்டியது.
ஈராண்டுக்குமுன் விதைத்தது மரமானது
2023ன் இறுதியில், சார்ல்டன் அத்லெடிக் பெண்கள் அணியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து, பர்மிங்ஹேமிலிருந்து சார்ல்டனுக்கு மாறினார் சுரேன். அதற்கான விதையை சுரேன் 2021லேயே நட்டார்.
சிங்கப்பூரில் தம்முடன் பணியாற்றிவந்த ஒருவர் வாயிலாக அப்போது சுரேன் சார்ல்டன் அத்லெடிக் முதல் அணியின் இயன்முறை மருத்துவத் தலைவர் ஏடம் கோவுக்கு அறிமுகமானார். அதனால், லண்டனில் சார்ல்டனுடன் குறுகிய காலத்திற்குப் பயிற்சி செய்ய முடிந்தது.
2023ல் மீண்டும் வாய்ப்பைத் தேடி சுரேன், ஏடம் கோவிடம் விண்ணப்பம் செய்தார். அதன் பிறகு பெண்களின் முதல் அணியில் சுரேனுக்கு முழுநேர வேலை கிடைத்தது.
ஒரே விளையாட்டு; அனுபவம் வெவ்வேறு
சிங்கப்பூரிலும் இங்கிலாந்திலும் அனுபவங்களைப் பெற்றுள்ளார் சுரேன்.
“இங்கிலாந்தில் விளையாட்டாளர்கள் பல ஆட்டங்களுக்கும் நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டும். ஆறு மணி நேரம்கூட எடுக்கலாம். சிங்கப்பூரில் எனக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான் பயணம் நீடிக்கும்.
“மேலும், இங்கிலாந்தில் அணி வென்றால் மேல்பிரிவுக்கு முன்னேறலாம்; தோற்றால் கீழ்ப்பிரிவுக்குத் தள்ளப்படுவதோடு சிலர் வேலையை இழப்பதைக்கூடக் கண்டிருக்கிறேன். சிங்கப்பூரில் ஒரே பிரிவுதான் உள்ளது. அதனால் மனதளவில் முற்றிலும் வேறுபட்ட அனுபவம்,” என்றார் சுரேன்.
‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’
தம்மைப் போன்று சிங்கப்பூரர்கள் தங்கள் குறிக்கோள்களை அடையவேண்டும் என விருப்பம் தெரிவித்தார் சுரேன்.
“பலதரப்பட்ட அனுபவங்களை நாடுங்கள்; பலருடைய அறிமுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்; திறன்களை மேம்படுத்துங்கள்; உங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்துங்கள்,” என்பதே சுரேன் இளையர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறார். குறிப்பாக, இயன்முறை மருத்துவத்திற்கு எஸ்ஐடி மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளையும் நாடலாம் என அவர் கூறினார்.

