கிரிஷ்மிதா ஷிவ் ராம்
சிங்கப்பூர் எக்ஸ்போவில் இந்திய பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராமின் அரங்கம் நிறைந்த கச்சேரி கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடந்தேறியது.
பல்வேறு வயதினரும் கலந்துகொண்ட இக்கச்சேரி உற்சாகம் மிகுந்த, கண்கலங்க வைக்கும் தருணங்கள் நிறைந்ததாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் தம் பெற்றோரும் சகோதரியும் இணைந்திருந்ததாகவும் அது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாகவும் சித் ஸ்ரீராம் கூறினார். கர்நாடக இசை கற்ற தம் தாயார், தாத்தாவிடமிருந்து தாம் பலவற்றைக் கற்றுக்கொண்டதாகவும் அது தமக்குப் பெரிதளவில் வாழ்க்கையில் உதவியதாகவும் அவர் கூறினார்.
தமிழ்க் கலாசாரம் மீது தமக்கு மிகுந்த பற்று இருப்பதாகக் கூறிய அவர், அமெரிக்காவில் இருந்ததால் தமது கலாசாரத்தோடு பெரிய அளவில் இணைய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். இசை மூலமே தமது கலாசாரத்தோடு சித் ஸ்ரீராம் இணைந்துள்ளார்.
பிரபலமான பாடல்களை அவர் பாட, அரங்கமே அவருடன் சேர்ந்து பாடத் தொடங்கியது.
‘ஆராரிராரோ ராரோ’ என்று அவர் பாடிய திரைப்படப் பாடல், அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை அளித்தது. சித் ஸ்ரீராமின் இசைக் குழுவும் மிகவும் ஆற்றல்மிக்க முறையில் கச்சேரியைப் படைத்தது.
இசை, நடனம், உணவு மூலம் தங்களது வேர்களுடன் இணைவது முக்கியம் என்றார் சித் ஸ்ரீராம்.
தொடர்புடைய செய்திகள்
“கலாசாரத்துடன் இணைவது ஒரு சுமையாக இருக்கக்கூடாது, அது தானாக வரவேண்டும். இசை, ஒவ்வொருவருடன் இணைவதற்கு உதவியாக இருக்கிறது,” என்று கூறினார்.
இசை, ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அது ஒருவரின் வாழ்க்கைக்கு மெருகூட்டுகிறது என்றும் குறிப்பிட்ட அவர், அதுவே இசையின் ஆகப்பெரிய சக்தி என்றும் சொன்னார்.
இசை இன்றளவும் மனிதநேயத்தைக் கட்டிக்காத்து வருகிறது என்பது சித் ஸ்ரீராமின் உறுதியான எண்ணம்.
‘நாயகன்’ படத்தில் ‘தென்பாண்டி சீமையிலே’ பாடலை சித் ஸ்ரீராம் பாடியவுடன் தமக்கு அழுகை வந்துவிட்டதாகவும் தந்தையின் நினைவுவந்துவிட்டதாகவும் பார்வையாளர்களில் ஒருவர் சொன்னார். கச்சேரிக்கு வந்திருந்த பலரும் தங்களது பொழுது இனிதே கழிந்ததாகக் கூறினர்.
ஓய்வின்றி தொடர்ந்து மூன்று மணி நேரம் பாடி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய சித் ஸ்ரீராம், தாம் விரைவில் மீண்டும் சிங்கப்பூருக்கு வரவுள்ளதாகக் கூறினார்.
இதனால், இன்னொரு முறை அவரது இசைமழையில் நனையக் காத்திருக்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.