வைதீக மரபினரின் சமூகப் பங்களிப்பு

வைதீக மரபினரின் சமூகப் பங்களிப்பு

2 mins read
29afab38-b575-400b-b893-7ca805035215
சிங்கப்பூர் தென்னிந்திய பிராமணர் சபையின் முன்னணி உறுப்பினர்களுடன் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். - படம்: சிங்கப்பூர் தென்னிந்திய பிராமணர் சபை

சொந்தச் சமூகத்திற்கு மட்டுமல்லாது, சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்கும் பங்களித்துவரும் சிங்கப்பூர் தென்னிந்திய பிராமணர் சபை, செழுமையான தனது கடந்த காலத்தை நினைவுகூர்ந்தும் சிறப்பான வருங்காலத்தை எதிர்பார்த்தும் தன் நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள பிஜிபி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் அச்சபையைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டன.

மண்டப முகப்பில் தமிழுடன் மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வரவேற்பு வாசகங்களுடன் கூடிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

மொழி வேறுபாடுகள் மட்டுமின்றி, ஸ்மார்த்தம், சைவம், வைணவம் போன்ற சமயவழி வேறுபாடுகள் உள்ளபோதும் பல தலைமுறைகளாகச் சிங்கப்பூரில் வாழ்கின்றவர்கள், புதிய குடியேறிகள் என ஏறக்குறைய 400 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஒற்றுமை பாராட்டினர்.

சிறப்புரைகளும் கலை அங்கங்களும் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

1924ல் நிறுவப்பட்ட இச்சங்கம், சிங்கப்பூரில் தம் கணவரை இழந்த பிராமணப் பெண்ணுக்கு உதவுவதற்காக ஒரு சமூக முயற்சியில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்றைய காலனித்துவ ஆட்சி முதல், ஜப்பானியப் படையெடுப்பு, மலேசியாவுடனான இணைப்பு, நவீன சிங்கப்பூர் உருவாக்கம் எனப் பல வரலாற்றுப் படலங்களைக் கடந்து வந்துள்ளது.

தங்கள் மரபுக்குரிய சமயச் சடங்குகள் மட்டுமின்றி, இந்து தர்மத்தைப் பின்பற்றும் பொதுமக்கள் பங்குபெறும் தைப்பூசம், ஐயப்பன் வழிபாடு, குடமுழுக்குப் பெருவிழாக்களில் பிராமண சங்கத்தின் பங்களிப்பு நெடியதாகவும் தொடர்ச்சியாகவும் உள்ளது.

அத்துடன், இச்சங்கம் சமூகத்திற்கும் சேவையாற்றி வருகிறது. சிங்கப்பூரிலுள்ள வெவ்வேறு சமூகங்களுடன் இணைந்து செயல்படும் பிராமணர் சங்கம், முற்போக்கான, அனைவரையும் ஒருங்கிணைக்கும் அணுகுமுறையைப் பின்பற்றி வருவதாக சபையின் தலைவர் ல. கார்த்திகேயன் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும், இச்சங்கம் தனது சொந்த நிதியிலிருந்து தன்னார்வ நல அமைப்புக்கு நன்கொடை வழங்கி வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டு, $5,000 காசோலையை ‘இட்ஸ் ரெய்னிங்ரெய்ன் கோட்ஸ் (IRR)’ எனும் வெளிநாட்டு ஊழியர் நல அமைப்பிற்கு நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சபையின் நூற்றாண்டு நினைவுமலர் வெளியிடப்பட்டது. 217 பக்கங்களைக் கொண்ட அந்த ஆங்கில மொழி நூலில் சபையின் தொடக்கக் காலம், முக்கிய நடவடிக்கைகள், சிங்கப்பூர் பிராமணர் மரபைச் சேர்ந்த மதிப்புமிக்க சாதனையாளர்கள், வைதீக மரபைப் பற்றிய விளக்கங்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளது.

சிங்கப்பூரின் கலாசார, சமூக அடையாளத்திற்கு இச்சபை எப்படியெல்லாம் பங்காற்றியது என்பதை இந்த மலர் விவரிப்பதாக அதன் தலைமை ஆசிரியரான டாக்டர் உமா ஜெயராமன் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ஓவியம், நடனம், இசை உள்ளிட்ட கலைகளில் இச்சமூகத்தினரின் பங்களிப்பும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த கால மற்றும் தற்போதைய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் தன்னலமற்ற சேவை இந்நிகழ்வின்போது அங்கீகரிக்கப்பட்டது. கடந்த காலத்தை நன்றியுணர்வுடன் நினைப்பதாகக் கூறிய திரு கார்த்திகேயன், “எல்லா உயிர்களும் சிறப்புற்றிருக்க வேண்டும் என்ற பண்பை பிராமண மரபினர் தொடர்ந்து போற்றி, சமூகத்திற்கும் சிங்கப்பூருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவேண்டும் என வேண்டுகிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்