‘திகழ்விழி’யின் விழிப்புணர்வான குறும்படம்

‘திகழ்விழி’யின் விழிப்புணர்வான குறும்படம்

3 mins read
d1a3ad69-df22-4dba-b2e9-19377c026294
‘திகழ்விழி’ படத்தில் வரும் ஒரு காட்சி. - படம்: ஆண்ட்ரியா ரஞ்சினி
multi-img1 of 4

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமண தாமதத்தை எதிர்நோக்கும் ஒரு பெண்ணின் கதையைப் பற்றியது  ‘திகழ்விழி’ என்ற குறும்படம்.

கதையின் முக்கிய கதாபாத்திரமான திகழ்விழிக்கு முப்பது வயதாகப் போகும் நிலையில், ஜாதகக் குறைப்பாட்டால் அவருக்கு திருமணம் ஆகவில்லை.

இதனால், பிறந்தநாள் நெருங்கும் நேரத்தில் திருமணமே வேண்டாம் என உதறித் தள்ளிவிடலாமா என யோசிக்கத் தொடங்கினார் திகழ்விழி. அதே நேரத்தில் தமக்குப் பிடித்த ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என்ற ஏக்கமும் இருப்பதால் குழப்பம் அவர் மனதை வாட்டுகிறது.

இக்கதையை மையமாக கொண்ட உள்ளூர் படைப்பான ‘திகழ்விழி’ எனும் குறும்படத்தை முதல் முறையாக இயக்கி உள்ளார் ஆண்ட்ரியா ரஞ்சினி. இயக்கினார். பல புது நடிகர்களை இக்குறும்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ள அவர், இக்குறும்படத்திற்கு எழுத்தாளராகவும் பங்களித்துள்ளார்.

இந்தக் குறும்படம் ஜூன் 16ஆம் தேதி, சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் வெளியிடப்பட்டது. மேலும், இது யூடியூப் தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

பாரம்பரிய நம்பிக்கைகள், உறவுகள் ஆகியவற்றின் சிக்கல்களைக் காட்சிப்படுத்த முனைந்துள்ளார் இப்படத்தின் படைப்பாளர்.

“சமூக எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட ஆசைகளுடன் மோதும்போது பல பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தை உள்ளடக்கிய ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க விரும்பினேன்,” என்று இயக்குநர் விளக்கினார்.

ஜாதகம் மற்றும் கலாசார எதிர்பார்ப்புகள் கதையில் தடையின்றி பிணைக்கப்பட்டுள்ளன. பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் சமநிலைப்படுத்தும் சிக்கல்களைப் பற்றிய ஒரு பார்வையையும் பார்வையாளர்களுக்கு வழங்குகின்றது.

இக்குறும்படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்த வரதராஜன் பிரபு, “சிறிய குழுவாக இருந்தாலும், குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட படைப்பு என்றாலும் குழுவாக சேர்ந்து இத்திட்டத்தில் பங்கேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.”

“20 நிமிட குறும்படமாக இருக்கவேண்டிய இது, ஒரு மணி நேர அளவு படமாக இருந்தாலும், சிறப்பாக உள்ளது என்று நான் நம்புகிறேன்.”

“நாங்கள் குழுவாக எதிர்கொண்ட ஒரு சவால், ஒலிச் சேர்க்கை செய்யும்போது, வசனங்களை நேரத்திற்கேற்ப கூறுவது தான். ஆனால் , சவால்களைக் கடந்து, இப்படத்தை குழுவாக வெளியிட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது,’’ என்று தெரிவித்தார்.

இக்குறும்படத்திக்காக ஒரு பாடல் அமைக்கப்பட்டது. அப்பாடலின் எழுத்தாளர், சாரோ ராமன், “இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. வரிகளை தமிழில் சரியாக எழுதுவது, சரியான வரிகளில் சரியான வார்த்தைகளைச் சேர்ப்பது, வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு முடிவு செய்வது போன்ற பலவற்றை நான் கற்றுக்கொண்டேன்,’’ என்று பகிர்ந்து கொண்டார்.

பாடலைப் பாடிய, யோகித்தா சச்சிதானந்தன் கூறுகையில், “இது ஒரு நல்ல வாய்ப்பாக சுவாரசியமான அனுபவமாக இருந்தது. நான் முன்பு பாடிய பாடலுக்கு மாற்றாக இது ஒரு நல்ல அனுபவமாக தான் இருந்தது.” என்று தெரிவித்தார்.

இந்தக் காதல் பாடலுக்கு இசையமைத்த ஜோதி கிருஷ்ணன், “நான் பாடலுக்கு இசை அமைப்பது இது தான் முதல்முறை. நன்கு முயற்சி செய்து இப்பாடலைப் படைத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் அவர்.

‘திகழ்விழி’ படப்பிடிப்பு நிறைய நினைவுகளுடன் நிகழ்ந்த ஒரு பயணமாயிருந்தது என்று பகிர்ந்துகொண்டார் இயக்குநர் ஆண்ட்ரியா.

திகழ்விழியின் போராட்டத்தையும் சமூகத்திற்கு அளிக்கும் கருத்துகளையும் பார்வையாளர்கள் கடைசி காட்சியில் பார்க்கலாம் என்றும் இயக்குநர் கூறினார்.

‘திகழ்விழி’ மூலம், தன்னைக் கண்டறியவும் பல பெண்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளை வெளிப்படுத்தவும் ஒரு தளமாக இந்தப் படம் இருந்ததாக ஆண்ட்ரியா கூறினார்.

குறிப்புச் சொற்கள்