தமது அன்பான உபசரிப்புக்கும் சிரித்த முகத்திற்கும் பெயர் பெற்ற திருவாட்டி கிருஷ்ணசாமி சரோஜனி நாயுடு, 60, அவரது அக்கம்பக்கத்தார் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நபர்.
2009 ஆண்டுமுதல் மக்கள் கழகத்தின் அடித்தளத் தலைவராகச் செயல்பட்டுவரும் அவர், தற்போது சோங் பாங் ‘ஸோன் 3’ குடியிருப்பாளர்கள் குழுவின் செயலாளராக பணியாற்றுவதுடன், இரண்டு பகுதிநேர வேலைகளையும் செய்து வருகிறார்.
தமது தற்போதைய வீட்டிற்கு முதன்முதலில் 2012ல் குடியேறியபோது, பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்ததைத் தாம் கவனித்ததாக திருவாட்டி சரோஜனி சொன்னார்.
அந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், மின்தூக்கித்தளத்திலும் அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்திலும் அண்டைவீட்டாரைச் சந்திக்கும்போது, அவர்களை நட்புடன் அணுகுவார். நாளடைவில் அங்குள்ள அனைவரும் நண்பர்களாவதற்கு இது வழிவகுத்தது.
மலாய், சீன, யுரேசியர் உட்பட பல்வேறு இனங்களைச் சேர்ந்த அனைத்து அண்டைவீட்டாருடனும் அவர் நெருக்கமான, வலுவான பிணைப்பை உருவாக்கியுள்ளார்.
தமது சீன அண்டைவீட்டாருடன் அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வருவதாக திருவாட்டி சரோஜனி சொன்னார். அவர்களின் 2 வயது மகனும் தம்முடைய 9 வயது மருமகனும் அடிக்கடி ஒன்றாக விளையாடுவதை நினைவுகூர்ந்தார் அவர். வீட்டில் அவரும் அவரின் கணவரும் மட்டுமே இருப்பதால், மீன்தலைக்குழம்பு சமைக்கும்போது அதைத் தாம் தமது சீன அண்டைவீட்டாருடன் பகிர்ந்துகொள்வதாகவும் அவர் சொன்னார்.
மலாய் இனத்தைச் சேர்ந்த திருவாட்டி சரோஜனியின் அண்டைவீட்டுக்காரரான 58 வயது திருவாட்டி ஜாஹிமா பிண்டே அக்கியாக்குடனும் அவர் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளார்.
“திருவாட்டி சரோஜனி அனைவருக்கும் நிறைய உதவி செய்வார். நமது வட்டாரத்தில் பொது பிரச்சினையாக இருந்த தெருப் பூனைகளின் கழிவுகளை அகற்ற நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம்,” என்று திருவாட்டி ஜாஹிமா குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“பண்டிகைக் காலங்களில், நாங்கள் அனைவரும் பல பொருள்களையும் உணவையும் பரிமாறிக்கொள்வோம். நமது கலாசாரத்தைப் பகிர்ந்துகொள்வதுடன் மற்ற இனத்தவரின் கலாசாரத்தைப் பற்றியும் கற்றுக்கொள்வோம்,” என்றார் திருவாட்டி சரோஜனி.
குறுஞ்செய்திகள் மூலமாகவும் நேருக்கு நேர் பேசுவதன் மூலமாகவும் சமூக மன்றத்தில் நடக்கவிருக்கும் சமூக நிகழ்ச்சிகளையும் நடவடிக்கைகளையும் குறித்து அனைவருக்கும் மறக்காமல் தெரியப்படுத்துவார் திருவாட்டி சரோஜனி.
வாடகை உந்துவண்டி ஓட்டுநராகப் பணிபுரியும் அவரின் கணவர், சில சமயங்களில் நாள் முழுவதும் வேலை செய்வதால் தாம் தனிமையாக உணர்வதால் எப்போதும் மற்றவருடன் தொடர்பில் இருக்க முதலில் முயற்சி எடுப்பதாகக் கூறினார்.
நட்புடன் பழகும் அவரது குணம், பன்முகத்தன்மை கொண்டாடப்படும் ஒரு நெருக்கமான சூழலை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.
“மக்களுடன் பேசுவதிலும் புதிய நண்பர்களைச் சந்திப்பதிலும் நான் அதிக விருப்பம் கொண்டுள்ளேன். மக்கள் கழகத்தின் உறுப்பினராகச் செயல்படும்போது இதற்கான பல வாய்ப்புகள் அமைகின்றன.
“மேலும், என்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒரு தளத்தையும் இந்தப் பதவி எனக்கு அளிக்கிறது,” என்று அவர் தமது சமூக சேவை பயணத்தைப் பற்றி விவரித்தார்.
பரபரப்பான இன்றைய வாழ்க்கைச்சூழலில், தொடர்புகளையும் நல்லிணக்கத்தையும் ஓர் உரையாடலின்மூலம்கூட உருவாக்க முடியும் என்பதைத் தமது முயற்சிகளின் மூலம் திருவாட்டி சரோஜனி தினமும் நடத்திக் காட்டுகிறார்.

