தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புனிதத் தலங்களைத் தரிசிக்க வெளிநாடு செல்லும் சிங்கப்பூரர்கள், கூட்ட நெரிசல்மிகு இடங்களில் கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளை நிபுணர்கள் இருவர் தமிழ் முரசிடம் பகிர்கின்றனர்.

கூட்ட நெரிசலில் சிக்குவோர் நிதானம் காக்கச் சில வழிகள்

2 mins read
30e19495-842c-4abe-a5cd-6e74348bb006
தைப்பூசத் திருவிழாவின்போது மலேசியாவின் பத்துமலைப் படிகளில் ஏறிச் செல்லும் பக்தர்கள். - படம்: த ஸ்டார்

திறந்தவெளி, உள்ளரங்கு ஏன், ஒரு கப்பலில்கூட கூட்ட நெரிசல் ஏற்படலாம். சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் இது அவ்வப்பொழுது நிகழ்வதுண்டு.

நிலைமை கை மீறிப் போனால், துயரம்.

ஜூலை 2ஆம் தேதி இந்தியாவிலுள்ள ஹாத்ரஸ் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியாரைத் தரிசிக்க வந்த கூட்டத்தில் பலர் மிதிபட்டு உயிரிழந்தனர்.

80,000 பேர் மட்டுமே நிற்கக்கூடிய இடத்தில் 250,000 பேர் திரண்டதால் அசம்பாவிதம் ஏற்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்தன.

இதுபோன்ற பெருங்கூட்டத்தில் ஆபத்துக்குள்ளாகாமல் இருப்பதற்குப் பயணிகள், முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

முக்கியமாக, பயணக்குழுவில் இருப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்கவேண்டும் என்று பயண வழிகாட்டி நிர்மலா ராஜேந்திரன், 64, கூறினார்.

ஓர் இடத்திற்குப் போவதற்கு முன் நம்மைத் தயார்படுத்திக்கொள்வது எப்படி என்று திருவாட்டி நிர்மலா விளக்கினார்.

“நாங்கள் செல்ல விரும்பும் இடத்தின் பருவநிலை, அங்கு இயற்கைப் பேரிடர் ஏற்படும் வாய்ப்பு, அரசியல் பதற்றநிலை, சுகாதார நிலவரம் போன்றவற்றைச் செய்தி ஊடகங்களின் மூலமாகவும் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்களின் மூலமாகவும் அறிவேன்.

“சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையப்பக்கத்திலுள்ள அறிக்கைகளையும் காண்பேன். போகவேண்டிய இடத்திற்கு எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு என்பதைத் தெரிந்துவைத்திருப்பேன்,” என்று அவர் கூறினார்.

நிலவரம் எந்நேரமும் மாறலாம் என்பதால் விழிப்புடன் இருக்கவேண்டும்.

“இமயமலைப் பகுதியிலுள்ள திருக்கயிலை மலையை ஒருமுறை வலம் வந்த பின் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. உள்ளூர்வாசிகள் இதுபற்றி என்னிடம் உடனே தெரிவித்ததால் பாதுகாப்புடன் திரும்பினோம்,” என்றார் திருவாட்டி நிர்மலா.

திருக்கயிலை யாத்திரையில் பயண வழிகாட்டி நிர்மலா ராஜேந்திரன்.
திருக்கயிலை யாத்திரையில் பயண வழிகாட்டி நிர்மலா ராஜேந்திரன். - படம்: நிர்மலா ராஜேந்திரன்

குறிப்பிட்ட சில இடங்களுக்குப் போகும்போது நுழைவாயில்களும் வெளிவாசல்களும் எங்கே உள்ளன என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வது முக்கியம் என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும் அப்பள்ளியின் பொதுப் பாதுகாப்புத் திட்டத் தலைவருமான ரஸ்வானா பேகம் தெரிவித்தார்.

“காயங்களுக்கான மருந்துகள், துணிக்கட்டுகள் உள்ளிட்ட முதலுதவிப் பொருள்களை உடன் வைத்திருப்பது நல்லது,” என்று அவர் கூறினார்.

“முடிந்தால் கூட்டங்களுக்கு மிக அருகே செல்லாமல் இயன்றளவு ஒதுங்கியிருங்கள். ஒன்றாகவோ தனித்தனியாகவோ சென்றாலும் அனைவரும் சந்திப்பதற்கு உகந்த ஓர் இடத்தை உறுதி செய்யவேண்டும். உள்ளூர் அவசர எண்களையும் உங்கள் கைப்பேசிகளில் வைத்திருப்பது நல்லது,” என்று அவர் கூறினார்.

கூட்டம் திடீரென வந்தால் ஓரத்திற்கு நகரும்படியும் பேராசிரியர் ரஸ்வானா அறிவுறுத்தியுள்ளார்.

“ஒருவேளை கூட்டத்தில் சிக்கினால் முதலில் கரங்களால், உங்கள் தலை, முகப்பகுதிகளை மூடிக்கொள்ளுங்கள். நீங்கள் தடுக்கி விழுந்தால் உங்கள் பிறப்புறுப்பை மறைக்க, குனிந்து பந்துபோல ஒடுங்கிக்கொள்ளுங்கள்,” என்றும் அவர் கூறினார்.

பயணத்திற்கான முன்தயாரிப்பு, பயணத்தின்போது விழிப்புநிலை, ஆபத்து ஏற்பட்டால் நிதானம் ஆகியவை இந்த நிபுணர்கள் கூறும் குறிப்புகளின் சாராம்சமாகும்.

குறிப்புச் சொற்கள்