சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்களின் வளமான வரலாற்றைப் பாதுகாக்கவும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கவும் இவர்களைப் பற்றிய தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் செய்யவும் துவங்கப்பட்டுள்ளது, புதிய ‘மைக்ரோசைட்’ ஒன்று.
‘இம்ப்ரோஃப்’ (IMPROF) எனப்படும் இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கம் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து வழங்கும் இந்த இணையத்தளம், இந்திய முஸ்லிம் கலாசாரம், தனிநபர்கள், நிறுவனங்கள், பள்ளிவாசல்கள், இலக்கிய வெளியீடுகள் முதலியவற்றைப் பற்றிய தகவல்களை மையப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மற்ற இனத்தவர் இந்திய முஸ்லிம்களைப் பற்றி எழுதியுள்ள இலக்கிய வெளியீடுகளையும் இந்தத் தளத்தில் காணலாம்.
இத்தளம், அறிஞர்கள், சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் தகவல் வளமாக அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.
தேசிய நூலகத்தின் ‘பாசிபிலிட்டி’ அறையில் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற தளத்தின் வெளியீட்டு விழாவில் கல்வி, வெளியுறவு ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நோன்புப் பெருநாளன்று இம்ப்ரோஃபின் தலைவரான ராஜ் முஹமதுக்கு வாழ்த்துத் தெரிவிக்க தொலைபேசியில் அழைத்தபோது இந்த இணையத்தளத்தைப் பற்றிய யோசனை பிறந்ததாக சொன்னார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் மகிழ்நன்.
“சிங்கப்பூரில் உள்ள இந்திய முஸ்லிம்கள் ஒரு சிறிய சமூகமாக இருந்தாலும், அவர்கள் சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப உதவிய ஒரு குறிப்பிடத்தக்க சமூகம்.
“நமது சமூகத்தைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு சமூக வரலாற்றை நன்கு அறிந்திருப்பது அவசியம் என்று சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் நம்புகிறது. இதுபோன்ற இன்னும் பல முயற்சிகளில் ஊக்குவிப்பாக செயல்பட ஆசைப்படுகிறோம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
நான்கு ஆண்டு உழைப்பால் தயாரான இந்த இணையத்தளம், இந்திய முஸ்லிம்கள் பற்றிய புரிதலையும் சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு ராஜ் முஹமட்.
“சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்களைப் பற்றி பல தவறான கருத்துகள் இன்றும் நிலவுகின்றன. இந்த இணையத்தளத்தின்வழி இந்திய முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்புகள், பாரம்பரியம் பற்றிய விரிவான தகவல்களை வழங்கி அத்தவறான கருத்துகளை மாற்றுவதே எங்கள் நோக்கம்.
“மேலும், மற்ற துணை இனக் குழுக்களும் தங்களது வரலாறுகளை ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் இந்தத் திட்டம் தூண்டும் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.
இதுவரை 111 தலைப்புகளைக் கொண்டுள்ள இந்த இணையத்தளம், எதிர்காலத்தில் மேலும் பல தகவல்களுடன் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இணையத்தளத்திலுள்ள வெவ்வேறு தலைப்புகளையொட்டி பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள உதவும் தளம் ஒன்றும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
இணையத்தளத்தின் முகவரி: https://singapore-indian-muslims.glide.page

