மாணவர்களின் போராட்டத்திற்கு எதிராக ஜூலை 17ஆம் தேதி முதல் இணையச் சேவைக்கு பங்ளாதேஷ் அரசாங்கம் 11 நாள்களுக்கு விதித்த தடை, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) பிற்பகல் 3 மணிக்கு முடிவுக்கு வந்தது.
எனினும், வாட்ஸ்அப், டிக்டாக், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்கள் மீதிருந்த கட்டுப்பாடு புதன்கிழமை ஜூலை 31ஆம் தேதி பிற்பகல்தான் அகற்றப்பட்டது.
‘இன்னும் சீராகவில்லை’
“நேற்றுதான் (ஜூலை 31ஆம் தேதி) என்னால் ‘ஃபேஸ்புக்’கை நேரடியாகத் திறக்க முடிந்தது. இதற்கு முன்பு ‘விபிஎண்’ பயன்படுத்தவேண்டியிருந்தது,” என்றார் அண்மையில் சிங்கப்பூரிலிருந்து பங்ளாதேஷுக்குத் திரும்பிய வெளிநாட்டு ஊழியர் ரூபல்.
“ஆனால் வாட்ஸ்அப் மூலம் தொலைபேசி அழைப்புகள் செய்யும் அளவிற்கு இன்னும் சீராகவில்லை,” என ஜூலை 31ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி மாலை 6.45 அளவில் கூறினார் ரூபல்.
குடும்பத்தை விட்டுப் பிரிந்து சிங்கப்பூரில் பணியாற்றும் பங்ளாதேஷ் ஊழியர்களும் கடந்த சில நாள்களில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
நேரடி அழைப்புகளிலும் இடையூறு
இணையச் சேவை இயங்காதபோது ‘ஐடிடி’ நேரடித் தொலைபேசி அழைப்புகள் பங்ளாதேஷைச் சென்றடையவில்லை எனவும் சென்றடைந்தவற்றில் அங்கிருந்து பேசுவோரின் குரல் தெளிவாகக் கேட்கவில்லை எனவும் சில பங்ளாதேஷ் ஊழியர்கள் கூறினர்.
எனினும், ‘ஐடிடி’ அழைப்புகள் இப்போது சீராகிவிட்டதாக சிலர் தெரிவித்தனர்.
ஜூலை 26ஆம் தேதி முதல், ‘இமோ’ செயலிச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக வெளிநாட்டு ஊழியர்கள் கூறினர். பங்ளாதேஷியர் பயன்படுத்தும் பிரபலத் தொடர்புத் தளமானது ‘இமோ’.
தொடர்புடைய செய்திகள்
வாட்ஸ்அப் சேவை வழக்கநிலைக்குத் திரும்பினாலும், அது சிலருக்கு சீராக இல்லை.
“வாட்ஸ்அப்பில் செய்தி எழுதியனுப்ப முடிகிறது, ஆனால் புகைப்படங்களை அனுப்ப முடியவில்லை,” என திங்கள்கிழமையன்று கூறினார் வெளிநாட்டு ஊழியர் ரூபல். கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால் நிலைமை இனி சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4ஜி கட்டமைப்பு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக பங்ளாதேஷ் அரசாங்கம் அறிவித்தும் அந்நாட்டில் சிலருக்கு வைஃபை சேவைதான் இயங்கியது.
‘பணம் அனுப்பச் சிரமப்பட்டோம்’
இணையச் சேவைத் தடை, பங்ளாதேஷின் வங்கிச் சேவைகளுக்கும் இடையூறு விளைவித்தது. பாதிக்கப்பட்ட வங்கிகளின் இணையச் சேவை ஜூலை 24ஆம் தேதிதான் வழக்கநிலைக்குத் திரும்பியது.
குடும்பத்தாருக்கு தாங்கள் அனுப்பிய பணம் ஒழுங்காக போய்சேருமா என ஊழியர்களுக்கு ஐயம் ஏற்பட்டதால், கடந்த சில நாள்களாகவே கூட்டம் குறைந்திருப்பதாக லிட்டில் இந்தியாவில் வங்கிப் பணியாளர் ஒருவர் கூறினார்.
“இணையச் சேவை தடைபட்டபோதும் பங்ளாதேஷிலுள்ள எங்கள் வங்கிக் கிளைக்கு உடனுக்குடன் பணம் அனுப்ப முடிந்தது.
“ஆனால் இணையச் சேவை சீரடைந்த பிறகுதான் மற்ற வங்கிகளுக்குப் பணமாற்றம் செய்ய முடிந்தது. அதுவரை நாங்கள் இங்குள்ள பங்ளாதேஷ் ஊழியர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுப் பாதுகாத்தோம்,” என்றார் லிட்டில் இந்தியாவில் உள்ள என்பிஎல் பணமாற்றச் சேவையின் தலைமை நிர்வாகி முகமது ஆசாட்.
எனினும், பல வெளிநாட்டு ஊழியர்களும் மாதத்தின் முதல் வாரத்திலேயே சம்பளம் பெறுவதால் இம்மாதத்திற்குப் பெரும்பாலோர் ஏற்கெனவே பங்ளாதேஷுக்குப் பணம் அனுப்பிவிட்டனர். அதனால் பெரிதாகப் பாதிப்பு ஏற்படவில்லை.
‘உண்மை எது, பொய் எது?’
“சமூக ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவதால் எது உண்மை, எது பொய் என அறிவது கடினமாகியுள்ளது. பலரும் போலித் தகவல்களைப் பரப்புகின்றனர்,” என்றார் பங்ளாதேஷ் ஊழியர் ராஃபிகுல்.