சிங்கப்பூரில் உன்னி மேனன் இசை மழை

2 mins read
0304607d-8793-4e12-9c88-3c457dcd29c6
செய்தியாளர் சந்திப்பில் பாடகர் உன்னி மேனன். - படம்: அனுஷா செல்வமணி

தனது பாடல் வரிகளின் அர்த்தத்தை சிங்கப்பூர் ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் என்றும் அதுதான் சிங்கப்பூர் ரசிகர்களிடம் தனக்குப் பிடித்தது என்றும் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர் உன்னி மேனன் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக ஏராளமான இசைக் கச்சேரிகளில் பங்கேற்றிருந்தாலும், தனது பாடல்களைக் கொண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக பிரத்தியேக இசை நிகழ்ச்சியை அவர் ஆகஸ்ட் 3ஆம் தேதி படைத்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் 4,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள உன்னி மேனன், ‘உயிரே’ திரைப்படத்தில் தான் பாடிய புகழ்பெற்ற பாடலான ‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை’ எனும் பாடலே என்றும் தனது மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளதாகக் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில் மலையாளப் பிரிவில் சிறந்த பின்னணிப் பாடகர் விருதை வென்ற அவர், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) லிட்டில் இந்தியாவில் உள்ள மிஸ்டர் பிரியாணி உணவகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

பல்வேறு வகை பாடல்களைப் பாட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்ததாகக் கூறிய உன்னி மேனன், இசையமைப்பாளர் தேவா தனக்கு உயர் சுருதி கொண்ட பாடல்களைப் பாட வாய்ப்பளித்ததாகச் சொன்னார்.

இசையமைப்பாளர்கள் இல்லாமல் தன்னால் இந்நாள் வரை புத்தாக்கத்துடன் பாடல்களைப் பாடியிருக்க இயலாது என்றார் அவர். பிரபல பின்னணி பாடகி சுஜாதாவுடன் தன்னால் மிக சௌகரியமாக பாட முடியும் எனக் கூறிய உன்னி மேனனுக்கு பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

ஜீ தொலைக்காட்சியில் இடம்பெறும் ‘சரிகமப’ பாடல் போட்டியின் வெற்றியாளர் வர்ஷா கிருஷ்ணன், பிரபல பின்னணிப் பாடகியும் சூப்பர் சிங்கர் பாடல் போட்டியில் கலந்துகொண்டவருமான ஸ்ரீநிஷா ஜெயசீலன் இருவரும் சனிக்கிழமை இசை நிகழ்ச்சியில் உன்னி மேனனுடன் சேர்ந்து பாடினர்.

‘மாஸ்க் ஸ்டுடியோஸ்’ நிறு­வ­னத்தின் ஏற்பாட்டில், தமிழ்த் திரைப்படப் பாடகர் கிருஷ்ணா ஐயர் நிகழ்ச்சி நெறியாளராக அங்கம் வகித்த இந்த மூன்று மணி­நேர இசைக் கச்சேரி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்