சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தனது 101வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி ‘தேசிய தின ஸ்போர்ட்ஸ் ஃபியேஸ்டா 2024’ விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.
சென்ற ஆண்டுவரை ‘ரெட் டாட் ஸ்போர்ட்ஸ் ஃபியேஸ்டா’ என்ற பெயர்கொண்ட போட்டிகள் இவ்வாண்டு புதிய பெயரோடு புதுப்பிப்பு கண்டன.
கிரிக்கெட்டை மட்டுமே மையப்படுத்திய ஆண்டுகளைக் கடந்து, மூன்றாவது ஆண்டாக இப்போட்டிகள் பல்வகையான விளையாட்டுகளையும் உள்ளடக்கின.
காற்பந்து, கிரிக்கெட், கபடி, ஹாக்கி, தடகளம், சிலம்பம் ஆகிய விளையாட்டுகள் இம்முறை இடம்பெற்றன.
இவ்வாண்டு ‘எதிர்காலத் தலைமுறை’ என்பதே போட்டிகளின் கரு. அதற்கேற்ப, முதன்முறையாக பல்லினங்களையும் சார்ந்த 8 முதல் 18 வயது வரையிலான சுமார் 500 சிறுவர்கள் போட்டியிட்டனர்.
ஆகஸ்ட் 2 முதல் 4ஆம் தேதி காலை வரை கிரிக்கெட் போட்டிகளும் ஆகஸ்ட் 4ஆம் தேதி பிற்பகல் 1 முதல் 5 மணி வரை மற்ற விளையாட்டுகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா.
“சிங்கப்பூரிலிருந்து பல அனைத்துலக விளையாட்டாளர்களையும் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“அதனால் இன்றைய விளையாட்டாளர்களில் ஒருவர் எதிர்காலத்தில் சிங்கப்பூருக்காக ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வார் என நான் நம்புகிறேன்,” என ஊக்குவித்தார் அமைச்சர் இந்திராணி.
“சிறுவர்களுக்கு மன உளைச்சல் என்பது முன்பு தூரத்து சொந்தமாக இருந்தது. இப்பொழுது பக்கத்து சொந்தமாகிவிட்டது. இந்த மன உளைச்சலைப் போக்க இவ்வாண்டு சிறுவர்களை மையப்படுத்தினோம்,” என்றார் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் விளையாட்டுத் தலைவர் திருக்குமரன்.
மழை ஓய்ந்ததும் காற்பந்தில் U-8, U-10, U-12, ஹாக்கியில் U-10, U-12, கபடியில் ஒரே பிரிவு போட்டிகள் தொடர்ந்தன.
விளையாட்டுகளில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
U-8 பிரிவில் ‘பிரடேட்டர்ஸ்’ காற்பந்து அணியை வெற்றிக்கு வழிநடத்திச் சென்றார் எட்டு வயது டௌஷிக் பிரேமனேஷ் நாயுடு. முன்பு தேசிய சிறுவர் அணி (U8) பயிற்சிக்குச் சென்ற இவர், இன்று லயன் சிட்டி செய்லர்ஸ் முதல் அணி, மியூனிக் காற்பந்துப் பள்ளி அணிகளில் விளையாடுகிறார்.
“நம் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பிற இனத்தாரிடம் காண்பிக்க முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் சிலம்பக்கோர்வைப் பயிற்றுவிப்பாளர் மோகனபிரியன் அன்பழகன், 23. கண்கவர் சிலம்பக் காட்சியை வழங்கிய சிலம்பக்கோர்வை, இதற்கென மலேசியாவிலிருந்து சில உறுப்பினர்களை வரவழைத்திருந்தது.
தனியே, முழுநேரக் காற்பந்துப் போட்டியில் முன்னாள் சிங்கப்பூர்த் தேசிய விளையாட்டாளர் அணி சிங்கப்பூர் இந்தியர் சங்க விளையாட்டாளர் அணியை 1-0 கோல் கணக்கில் வென்றது.

