தமிழாசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கு

தமிழாசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கு

2 mins read
d95a4324-d6d3-480d-a1b2-72b77c2dbd3c
ஜோகூர் பாருவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு பற்றிய பயிலரங்கில் பங்கேற்ற சிங்கப்பூர் கல்வியாளர் குழு. - படம்: கங்கா பாஸ்கரன்

கங்கா பாஸ்கரன்

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு பற்றிய பயிலரங்கை ஜோகூர் தமிழ் கல்வியாளர் சமூக நல மேம்பாட்டு இயக்கம் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை ஜோகூர் பாரு ஜோதிக் உள்ளரங்கில் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் மலேசியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 250 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

மாணவர்களுடைய கற்றல் வேகத்திற்கேற்ப தனிநபர் கற்றல் கருவியைப் பயன்படுத்திக் கற்க புதுப்புது உத்திகளைத் தமிழாசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் தாங்கள் தெரிந்துகொண்டதை வகுப்பறையில் செயல்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பயிலரங்கை நடத்தியதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக் கழகத்தின் முன்னாள் மூத்த விரிவுரையாளர், துறையின் தலைவரான திரு சேதுபதி ராமசாமி கூறினார்.  

மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும் ஆசிரியர்களின் பாடத்திட்ட வடிவமைப்பில் பாடச்சுமையைக் குறைப்பதற்கும் இந்தச் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு துணை நிற்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் இப்பயிலரங்கு வழிவகுக்கும்.

அத்துடன் தமிழாசிரியர்கள் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் பயனாளராக மட்டும் இல்லாமல் பங்களிப்பாளராக மாறவும் இந்தப் பயிலரங்கு உதவும் என்றும் கூறினார். 

சிங்கப்பூர் கல்வி அமைச்சு, பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு, தமிழ்ப் பகுதியில் இருந்து உதவி இயக்குநர் மோகன் சுப்பையா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தமிழ்ப் பாடக்கலைத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்தும் செயற்கை நுண்ணறிவில் எவ்வாறெல்லாம் கட்டளைகளைத் தரவேண்டும் என்பது குறித்தும் திரு மோகன் சுப்பையா பகிர்ந்துகொண்டார்.

“தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு கற்றல் கற்பித்தலில் பெரிய மாறுதல்களைப் புகுத்துகிறது. புதுப்புது கற்றல் கற்பித்தல் தொடர்பான செயலிகளும் கருவிகளும் வந்துகொண்டே இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு என்பது இருமுனை கத்தி போன்றது. அதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி அலுவலகத்தில் பணிபுரியும் திருவாட்டி தேவகி, செயற்கை நுண்ணறிவு குறித்து ஓரளவிற்குத் தமக்குத் தெரிந்திருந்தாலும் அதைப் பற்றிய ஆழமான சில நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் இப்பயிலரங்கில் கலந்துகொள்ள வந்ததாகக் கூறினார்.

மேலும், செயற்கை நுண்ணறிவை ஆக்ககரமாக எவ்வாறு கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்தலாம் என்பது குறித்த விளக்கங்கள் மிகவும் பயனுடையதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்

குறிப்புச் சொற்கள்