பொறுமையான வழிகாட்டுதலும் பொருத்தமான கற்பித்தல் உத்திகளும், கற்றல்திறன் குறைவாக உள்ளோரையும் மேடை நடனக் கலைஞர்களாக உருவாக்கும்.
‘மாயா நடன அரங்கம்’ என்ற அமைப்பைச் சார்ந்த ‘டிஏடிசி’ எனப்படும் பன்முக ஆற்றல்களுக்கான நடனக் குழு (Diverse Abilities Dance Collective), ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் படைத்த அண்மையதொரு நிகழ்ச்சி இதனை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாண்டு ஜூலை 10 முதல் 12 வரை நடைபெற்ற மனநலிவு நோய்க்குறி (Down Syndrome) மாநாட்டில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளர்கள், பிரிஸ்பன் மாநாட்டு அரங்கில் கூடியிருந்தனர்.
‘டிஏடிசி’ உறுப்பினர்களும் மாயா நடன அரங்கின் நான்கு மூத்த நடன மணிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டு, அரவணைப்பை வெளிப்படுத்தும் நடனங்களை ஆடினர். ‘சங்கமம்’ (Confluence) என்ற பெயரில் அரங்கேறிய அந்நடனம், பரதநாட்டியம் கலந்த புதிய பாணியைக் கொண்டிருந்தது.
மனிதர்கள் அனைவருமே ஆற்றல்மிக்கவர்கள் என்பதையும் அவற்றை வெளிக்கொணர அனைவரையும் ஒருங்கிணைக்கும் முறை தேவை என்பதையும் அந்நடனம் எடுத்துரைத்தது.
நடன அங்கத்துடன், ஜூன் லின், வேங் ஜியாயிங் என்ற ‘டிஏடிசி’ நடனமணிகள் இருவரின் வழிநடத்தலில் பரதநாட்டியப் பயிலரங்கு நடைபெறும் என்றும் நடனத்தை இயற்றியவரும் மாயா நடன அரங்கின் கலை இயக்குநரும் இணை நிறுவனருமான திருவாட்டி கவிதா கிருஷ்ணன் கூறினார்.
இதற்கான ஒத்திகைகள் நான்கு மாதங்களுக்கு நீடித்ததாகக் கூறிய திருவாட்டி கவிதா, தங்களுடன் சேர்ந்த ஆஸ்திரேலிய, இந்தோனீசிய, நடனமணிகள் தனித்தனியாக ஒத்திகை மேற்கொண்டு, பின்னர் நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னர்தான் இணைந்ததாகக் குறிப்பிட்டார்.
“இந்நடவடிக்கைகள், மனநலிவு நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவற்றால் பாதிக்கப்பட்டோரின் வெற்றியையும் அங்கீகரிக்கின்றன,” என்றார் அவர். உலக அளவில் தொடர்புகளை உருவாக்குவதற்கும் இந்நிகழ்ச்சி வாய்ப்பளித்தாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
நடனமணிகளில் ஒருவரும் ‘டௌன்’ நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவருமான ஜூன் லின், 40, பலரின்முன் நடனம் ஆடும்போது மகிழ்ச்சியாக உணர்வதாகக் கூறினார்.

