கிரிஷ்மித்தா ஷிவ்ராம்
சமூக ஊடகத்தை உல்லாசமாகப் பயன்படுத்தி, நினைத்ததையெல்லாம் இளையர்கள் பதிவேற்றம் செய்த காலம் மலையேறிவிட்டது. பலராலும் பார்க்கப்படும் சுயப் பதிவுகளை வெளியிடும்போது ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இளையர்கள் உள்ளனர்.
இதனால் மன உளைச்சலைத் தூண்டக்கூடியவையாக சமூக ஊடகங்கள் சில நேரங்களில் உள்ளன. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வர்ஷா, சமூக ஊடகங்களில் பதிவிடும்போது அதில் ஏதேனும் பிழை உள்ளதா எனச் சற்று பதற்றத்துடன் சரிபார்ப்பதாகக் கூறினார்.
வர்ஷா போன்ற இளையர்கள் உட்பட சிங்கப்பூரில் 5.13 மில்லியன் பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அத்துடன், சிங்கப்பூரர்கள் சராசரியாக நாளுக்கு இரண்டு மணி நேரம், 14 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிடுவதாக மெல்ட்வாட்டர் நிறுவனத்தின் ‘டிஜிட்டல் 2024’ அறிக்கை குறிப்பிடுகிறது.
சிங்கப்பூரில் இளைர்களின் மனநலன் குறித்து கூடுதல் ஆய்வு தேவைப்படுவதாக இவ்வாண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் சமூக ஊடகங்களின் பங்களிப்பு குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
சமுதாயம் முன்வைக்கும் எதிர்பார்ப்புகளால் இளையர்களின் மனநிம்மதி குலைகிறது. நிம்மதியின்மையால் மனநலமும் படிப்படியாகத் தேய்கிறது.
2020ல் மனநலப் பிரச்சினையை எதிர்கொண்ட இளையர்களின் விகிதம் 21.5 விழுக்காடாக இருந்தது. 2022ல் இது 25.3 விழுக்காடாக அதிகரித்தது.
இதன் பொருட்டு, சிங்கப்பூரில் மனநலப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தாங்கள் போதிய அளவிற்கு எதையும் செய்யவில்லை என இளையர்களுக்கு தங்கள் மீதே சந்தேகம் எழுகிறது. தாங்கள் செய்வது போதாது என்ற தாழ்வு மனப்பான்மை அவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு, சமூக ஊடகங்களும் ஒரு காரணம்.
வாழ்க்கைத்தொழில், நட்புறவு, உண்ணும் உணவு, அணியும் ஆடை என வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் ஊடகங்களில் பகிரப்படுகின்றன. வாழ்க்கையில் எல்லாவற்றையுமே போட்டிக்கான களமாக மாற்றுவது சமூக ஊடகங்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அண்மையில் ‘இன்சைட் அவுட் 2’ என்ற உயிரோவியத் திரைப்படம், ஒர் இளையரின் மனநிலை எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் உணர்வுகளை நாம் எவ்வாறு புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. கவலை, பயம், கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் அனைத்தும் நமக்குத் தேவை என்பதே படத்தின் கதை.
ஒரு சில வீடுகளில் மனநலப் பிரச்சினை பற்றி பேச வாய்ப்பு இருப்பதில்லை. அத்தகைய சூழலில் இதுபோன்ற படங்கள் இளையர்களுக்கு உதவும். குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடமிருந்து கிடைக்காத ஆறுதல் இதுபோன்ற படங்களில் கிடைப்பதாக நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி ரேஷ்மி தெரிவித்தார்.
“மனநலப் பிரச்சினையை வலியுறுத்தும் படங்கள், அது பற்றி அறியாதோருக்கு ஒரு படிப்பினையாக அமையும். இன்னும் பல படங்களை, மனநலப் பிரச்சினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்தால் இளையர்கள் அப்படங்களை நிச்சயம் பார்ப்பார்கள்,” என்றார் அவர்.
சமூக ஊடகங்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, தம்மைப் பற்றிய தேவையற்ற பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்ப்பதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி பிரியா செல்வகணபதி, 19, தெரிவித்தார்.
“சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்தவேண்டும், தன்முனைப்பு போன்ற நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவேண்டும்,” என்று இம்பார்ட் இளையர் நல அமைப்பின் நிறுவனரும் மனநல நிபுணருமான நரசிம்மன் திவாசிகமணி அறிவுறுத்துகிறார்.
“சமூக ஊடகத்திற்கும் உண்மை வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் நிறைய உள்ளதை உணர்ந்து, விளையாட்டு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வாழ்க்கையில் சமநிலை காணுங்கள்,” என்றார் அவர்.

