உலகிலேயே ஆக செல்வாக்குமிக்க கடப்பிதழ் பட்டியலில் சிங்கப்பூர் கடப்பிதழ் முதலிடம் வகிக்கிறது.
227 பயண இடங்களில் 195 இடங்களுக்குச் சிங்கப்பூரர்கள் அயல்நாட்டு நுழைவுச் சான்று (விசா) இன்றி செல்லலாம்.
கடந்த ஜூலை 23ஆம் தேதி ஹென்லி கடப்பிதழ் குறியீடு வெளியிட்ட தகவலின்படி பட்டியலின் முதலிடத்தில் சிங்கப்பூர் கடப்பிதழ் மட்டுமே உள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் ஸ்கைஸ்கேனர் எனும் பயணத்துறை அமைப்பு, மலிவான விலையில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்தெந்த தனித்துவமிக்க இடங்களுக்குச் செல்லலாம் எனும் பட்டியலை வெளியிட்டிருந்தது.
எஸ்டோனியா
பின்லாந்தின் தெற்கில் அமைந்திருக்கும் எஸ்டோனியா, ஐரோப்பிய கண்டத்தில் பலரும் அறியாத ஒரு நாடு. எஸ்டோனியாவின் தலைநகரமான தாலின் பல எழில்மிக்க அரண்மனைகளுக்குப் பெயர்போனது.
தாலின் நகரின் ஆடல், பாடல் விழா அங்கிருக்கும் மக்களிடையே மிகப் பிரபலமான ஒன்று. சிங்கப்பூரிலிருந்து தாலின் நகருக்கு செல்வதற்கான ஒரு வழி விமானக் கட்டணம் தற்போது $527லிருந்து தொடங்குகிறது.
கேப் வெர்டே
கடற்கரைகளை விரும்புபவர்கள் மாற்றத்திற்கு ஆப்பிரிக்கா வட்டார கடலோர பகுதியைச் சேர்ந்த கேப் வெர்டேவுக்குச் செல்லலாம். கடற்கரை எழிலுக்கு அப்பாற்பட்டு கேப் வெர்டேவில் இசை, கலாசாரம் மிகுந்துள்ளதால் சுற்றுப்பயணிகள் அந்நாட்டின் துடிப்பான கலாசாரத்தில் திளைத்து மகிழலாம்.
தொடர்புடைய செய்திகள்
கேப் வெர்டேயின் தலைநகர் ப்ரையா நகருக்கு சிங்கப்பூரிலிருந்து செல்வதற்கான ஒரு வழி கட்டணம் $878லிருந்து தொடங்குகிறது.
பிரெஞ்சு பாலினேசியா
பிரெஞ்சு பாலினேசியாவில் இருக்கும் தஹிடி தீவு சுற்றுப்பயணிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. கடற்கரை மட்டுமின்றி அதைச் சுற்றி இருக்கும் மலைப் பிரதேசங்கள் கண்ணைப் பறிக்கும் வண்ணம் உள்ளன.
ஸ்கைஸ்கேனர் பயண அமைப்பைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து வழியாக பிரெஞ்சு பாலினேசியா செல்வதுதான் சிறந்த வழி என சொல்லப்படுகிறது. அங்கு செல்வதற்கு ஒரு வழி கட்டணம் $1069லிருந்து தொடங்குகிறது.
மோண்டனீக்ரோ
குரோவேஷியாவுக்கு அருகில் இருக்கும் மோண்டனீக்ரோ பரபரப்பற்ற சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த இடமாக அமையும்.
இயற்கை வனப்புடைய நிலங்கள், தொன்மையான சிறிய நகரங்கள், வளமான வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார இடங்கள் என பட்டியலிட்டுக்கொண்டு போகும் அளவிற்கு மோண்டனீக்ரோ சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அங்கு செல்வதற்கான ஒரு வழி பயணக் கட்டணம் $697லிருந்து தொடங்குகிறது.
நியூ கலிடோனியா
தென் பசிபிக் பகுதியில் உள்ள பல தீவுகளை உள்ளடக்கிய ஒரு பிரெஞ்சு பிரதேசமாக நியூ கலிடோனியா உள்ளது. இரண்டாவது ஆக நீளமான பவளப் பாறையும் இங்குதான் உள்ளது.
பவள குளம், கடல் சார்ந்த வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்க ஆசை உள்ளவர்கள் நியூ கலிடோனியாவை அவர்களின் அடுத்த சுற்றுலா இடமாகத் தேர்ந்தெடுக்கலாம். அங்கு செல்வதற்கான ஒரு வழி பயணக் கட்டணம் $605லிருந்து தொடங்குகிறது.