வெப்பம் அதிகமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருவர் தனது உடலில் போதுமான நீரேற்றம் வைத்துக்கொள்ள தண்ணீருக்கு அப்பாற்பட்டு ஆரோக்கியமான சாறு வகைகளையும் பருகலாம். அதன்வழி, நீரேற்றம் கிடைப்பதோடு ஒருவருக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
இளநீர்
அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இளநீர் மிகவும் ஈரப்பதமூட்டும் பானங்களில் ஒன்றாகும். இது குறிப்பாக வெப்ப அலையின்போது உடலின் இழந்த திரவங்களை நிரப்புகிறது. இந்தப் புத்துணர்ச்சியூட்டும் பானம் இயற்கையாகவே இனிப்பானது. ஒருவரின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அத்தியாவசிய வைட்டமின்களும் இதில் உள்ளன.
எலுமிச்சை பானம்
எலுமிச்சை பானம் மிகப் பிரபலமான கோடைக்கால பானமாகும். இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிரம்பியுள்ளதால் நீரேற்றத்திற்கு அப்பாற்பட்டு ஒருவர் எலுமிச்சை பானத்தை அதிகம் பருகும்போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இதில் கூடுதல் சுவைக்காக புதினா அல்லது துளசி போன்ற மூலிகைகளைச் சேர்த்துப் பருகலாம்.
தர்பூசணி சாறு
தர்பூசணி சாற்றில் கலோரி குறைவாக உள்ளது. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், தாதுக்களின் வளம் அதில் அதிகமாக இருப்பதால் நீரேற்றத்தையும் தாண்டி உடலைக் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க அது உதவும்.
குளிர்ந்த பச்சை தேயிலை தேநீர்
குளிர்ந்த பச்சை தேயிலை தேநீர் கோடைக்காலத்திற்கு மிகச் சிறந்த பானமாகும். அதில் இயற்கையாகவே அதிக ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன.
கற்றாழை சாறு
கற்றாழை சாறு நீரேற்றத்திற்கு உகந்தது மட்டுமல்லாமல், அது வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள ஒரு பானமாகும். இது வெப்ப அலைகளின்போது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது.
வீட்டில் தயாரிக்கப்படும் விளையாட்டாளர்களுக்கான ஆற்றல் பானங்கள்
இயற்கைச் சாறுகளுக்கு அப்பாற்பட்டு வீட்டிலேயே நாம் குளிர்ச்சியூட்டும் பானங்களைத் தயாரித்து பருகலாம். தண்ணீரில் சிறிதளவு உப்பும், சர்க்கரையும் சேர்த்துப் பருகினால் போதும்.
குளிர்ந்த காப்பி
கோடைக்காலத்தில் காப்பி பிரியர்கள் எப்பொழுதும் சிரமப்படுகின்றனர். கடுமையான வெப்பத்தில் காப்பி குடிக்க முடியாத அளவுக்குச் சூடாக இருக்கும். ஆனால் குளிர்ந்த கொட்டைவடி நீரை அவ்வப்போது குடித்து வரலாம்.
தொடர்புடைய செய்திகள்
குளிர்ந்த இஞ்சி எலுமிச்சை நீர்
குளிர்ந்த இஞ்சி மற்றும் எலுமிச்சை தேநீர் வெப்ப அலையின்போது சாப்பிட வேண்டிய மற்றொரு சிறந்த பானமாகும். இஞ்சி, அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்குப் பெயர் போனது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளதோடு அது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
வெள்ளரிக்காய் கலந்த நீர்
வெள்ளரிக்காய் கலந்த நீர் உடல் நீரேற்றத்திற்கு மற்றொரு சிறந்த வழி. வெள்ளரிக்காய், புதினா, சுண்ணாம்பு கலந்த நீர் ஆகியவை வெப்பத்தைத் தணிக்க உகந்தவை. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் அது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.