ஆனந்தபவன் உணவகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசு, இவ்வாண்டு முனைவர் ந.செல்லக்கிருஷ்ணன் இயற்றிய ‘கம்பனும் வைணவமும்’ என்னும் கட்டுரை நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
15வது ஆண்டாக நடைபெற்ற இப்பரிசளிப்பு விழா ஆகஸ்ட் 17ஆம் தேதி, சையது ஆல்வி சாலையிலுள்ள ஆனந்தபவன் உணவகத்தின் மேல்தளத்தில் நடைபெற்றது.
நூற்றாண்டைக் கொண்டாடும் ஆனந்தபவன் உணவகத்தின் உரிமையாளர் பானுமதி இராமச்சந்திரா குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கம் வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், இப்பரிசளிப்புக்கு நிதியாதரவு நல்கும் ஆனந்தபவன் உரிமையாளர்கள் திருவாட்டி பானுமதி இராமச்சந்திரா, திருவாட்டி பரமேஸ்வரி எட்டிக்கன், திரு.வீரா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், சிறுகதை, கவிதை, கட்டுரை என மூன்றாண்டு சுழற்சி முறையில் நடைபெற்று வந்த இப்போட்டியில், அடுத்த ஆண்டிலிருந்து புதினமும் சேர்க்கப்பட்டு, நான்காண்டு சுழற்சி முறையில் நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
புதினத்திற்கான போட்டி முதன்முறை நடைபெறுவதாலும் சிங்கப்பூரில் வெளியாகும் புதினங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாலும் கடந்த எட்டாண்டுகளில் வெளிவந்த புதினங்களைப் போட்டிக்கு எடுத்துக்கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இலக்கியச் சிற்றுரையாற்றிய ஆசிரியர் மா.அர்ச்சுனன், திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியிலிருந்து மூன்று பாடல்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அடுத்த தலைமுறையினருக்கு தமிழை எடுத்துச் செல்லவேண்டிய கடமை தமிழ் அமைப்புகள், பொதுமக்கள் என அனைவருக்கும் உள்ளதாக நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் முனைவர் த. வேணுகோபால் குறிப்பிட்டார்.
இப்பரிசுக்கு எட்டு நூல்கள் சார்பாக விண்ணப்பங்கள் வந்திருந்தன. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் சார்புநிலைப் பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன், மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னைய விரிவுரையாளர் மன்னர் மன்னன் மருதை, தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட, ஆவணப்பட இயக்குநர், ஆய்வாளர், பேச்சாளர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் புத்தகப் பரிசுக்கு நடுவர்களாகச் செயல்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
முனைவர் ந.செல்லக்கிருஷ்ணன் இயற்றிய ‘கம்பனும் வைணவமும்’ என்னும் நூலை அவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததாகக் கழகம் அறிவித்தது.
வெற்றியாளருக்குப் பொன்னாடை போர்த்தி $3,000க்கான காசோலை வழங்கப்பட்டது.
ஏற்புரையாற்றிய முனைவர் ந.செல்லக்கிருஷ்ணன், தமது சிறுவயதிலேயே தமிழறிஞர்களோடு உரையாற்றக் கிடைத்த வாய்ப்பால்தான் தாம் கம்பனைப்பற்றி நூல் இயற்றுமளவு வளர்ந்ததாகவும் அந்நூலுக்கு விருது கிடைத்ததை எண்ணி மகிழ்வதாகவும் குறிப்பிட்டார்.
துணைப் பொருளாளர் பிரதீபா வீரபாண்டியன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். கழகத் துணைச் செயலாளர் கோ. இளங்கோவன் நன்றியுரை ஆற்றினார்.

