ஒட்டு நகங்களின் பக்க விளைவுகள்

ஒட்டு நகங்களின் பக்க விளைவுகள்

2 mins read
e1635eb2-7a0c-4e53-963c-3c4a3f6644c3
நகச் சேவைகள். - படம்: தி நியூ பேப்பர்

பெண்கள் பெரும்பாலும் அவர்களின் நகங்கள் அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி ‘மேனிக்யூர்’ எனப்படும் நகப் பராமரிப்புச் சேவைகளை நாடுவதுண்டு. நவீனமயமாகி வரும் இக்காலத்தில் அச்சேவைகள் பரிணாமம் கண்டுள்ளன.

நகச்சாயம் நீண்டநாள் நீடிக்க வேண்டும் என்பதற்காக புதிதாக ‘ஜெல்’ நகச்சாயம் சந்தையில் வெளிவந்தது. அதற்கு அப்பாற்பட்டு பெண்கள் நகங்களை மேலும் மெருகூட்ட, ‘நெய்ல் எக்ஸ்டென்ஷன்ஸ்’ எனப்படும் ஒட்டு நகங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

ஒட்டு நகங்கள் வைத்துக்கொண்டால் ஒருவர் நீண்டநாள் நகங்களை வளர்க்கத் தேவையில்லை. ஜெல் நகச்சாயம் பூசி அந்த ஒட்டு நகங்கள் ஒருவரின் அசல் நகங்களுக்குமேல் பொருத்தப்படும். அந்த ஒட்டு நகங்கள் நீண்டநாள் நீடிப்பதோடு அந்த நகங்களை எளிதில் எடுக்க முடியாததால், பெண்கள் ஒட்டு நகங்களை அதிகம் விரும்புகின்றனர்.

இச்சேவைகளை நாடும்போது நகங்களின் அழகு பொலிவு பெற்றாலும், இந்தச் சேவைகளால் நகங்களின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தரமான கடைகளுக்குச் சென்று ஒட்டு நகங்களைப் பெறும் சேவையை அவ்வப்போது மட்டும் நாடினால் அது நகங்களை பெரிதளவில் பாதிக்காது. இருந்தாலும், ஒட்டு நகங்கள் வைக்கும்போது அசல் நகத்திற்கும் ஒட்டு நகத்திற்கும் இடையில் இருக்கும் இடத்தில் கிருமிகள் அல்லது பூஞ்சை வளரக்கூடும் என்பதால் நகங்களை நன்கு பாதுகாக்க வேண்டும்.

ஒட்டு நகங்களை அசல் நகத்தின் மீது வைக்கும்போது பல்வேறு வகை வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது சிலருக்கு வீக்கம், அழற்சி, அரிப்பு, கொப்புளம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒட்டு நகச் சேவைகளை அடிக்கடி நாடினால் அசல் நகங்கள் எளிதில் உடைந்து விடுவதோடு, நகங்களின் சத்துகளும் குறைந்துவிடும். ஒட்டு நகங்களை அசல் நகத்தின்மேல் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் சிலவற்றில் ‘மெத்தில் மெதக்ரிலேட்’, ‘ஃபார்மால்டிஹைட்’ போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. அவை புற்றுநோய் உண்டாக்கும் அளவிற்கு தீங்கிழைக்கக்கூடியவை.

ஜெல் நகச்சாயம் பூசும்போதும், ஒட்டு நகங்கள் பொருத்தும்போதும், புற ஊதாக் கதிர் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி நகங்களில் புற ஊதாக்கதிர் படும்போது, அந்தக் கதிர் ஒருவரின் சருமத்தில் இருக்கும் ‘கொலாஜென்’-ஐ அழிக்கக்கூடும். இதனால் சருமப் புற்றுநோயும் ஏற்படலாம்.

ஒட்டு நகச் சேவைகளை அறவே நாடக்கூடாது என்பதை விட, நீண்ட இடைவெளி விட்டு அச்சேவைகளைப் பெற்றால் சிறந்தது. தூய்மையாக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தும் தரமான கடைகளுக்குச் செல்வது சிறந்தது.

இச்சேவைகளை நாடும்போது நகத்தின் ஆரோக்கியத்தை ஒருவர் தனிப்பட்ட முறையிலும் பாதுகாத்து வர வேண்டும். நகச் சேவைகளுக்குச் செல்வதற்கு முன்னர் இடைவெளி எடுக்கும் நேரங்களில் நகங்களை வலுவாக்கும் பொருள்களை நகத்தின்மேல் பூசலாம்.

ஒட்டு நகத்தை எடுக்க விரும்பும் போது ஒருவர் சுயமாக அந்த நகங்களை உரிப்பதற்குப் பதிலாக கடைக்குச் சென்று அவற்றை நீக்கினால் நல்லது.

குறிப்புச் சொற்கள்