அவாண்ட் நாடகக் குழு உருவாக்கியுள்ள ‘ஸ்திரீ அர்ஜுனா’ நாடகம், ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் ஜூலை 10 முதல் 12 வரை மேடையேறவுள்ளது.
“உடல் அடையாளங்களை மறைக்கலாம், சுய அடையாளத்தை மறைக்க முடியுமா?” என்ற கேள்வியை மையப்படுத்தி, ‘ஆழ்மனதின் குரல்’ என்ற முழக்க வரியோடு இவ்வாண்டின் நாடகம் அரங்கேறும்.
இருபெருங்கதைகளுள் ஒன்றான மகாபாரதத்தின் தழுவலாக, 2014ஆம் ஆண்டு அவாண்ட் நாடக நிகழ்ச்சியில் ‘ஸ்திரீ’ என்ற நாடகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் நடந்தேறியது.
இவ்வாண்டு, மீண்டும் ‘ஸ்திரீ அர்ஜுனா’ என்ற தலைப்பில் மகாபாரத கதாபாத்திரமான அர்ஜுனனை முன்னிலைப்படுத்தும் இந்நாடகம் தமிழில் மேடையேற உள்ளது.
ஜூலை 10 முதல் 12 வரை என மூன்று நாள்களுக்கு பிற்பகல் 3 மணி, இரவு 8 மணி என மொத்தம் ஆறுமுறை இந்நாடகம் மேடையேறவுள்ளது.
மகாபாரதத்தின் பகடை ஆட்டத்திற்குப் பின், 12 ஆண்டுகள் வனவாசம் சென்று, 13ஆம் ஆண்டு மாறுவேடத்தில் இருக்கும் பாண்டவர்களுள் ஒருவரான அர்ஜுனனின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படும்.
திரு பிச்சினிக்காடு இளங்கோவின் எழுத்தில், திரு க செல்வாநந்தன் இயக்கத்தில் இடைவேளையின்றி ஏறத்தாழ 120 நிமிடங்களுக்கு இந்நாடகம் ஓடும்.
சுவாரசியமான கதைக்களத்தோடும் புதுமையாக அறிமுகப்படுத்தப்படும் ‘உடல் நாடகம்’ என்ற நாடக வகையின் கூறுகளோடும் பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும் என்று ஸ்திரீ நாடகக் குழு எதிர்பார்க்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“குறிப்பாக, போர் காட்சிகளின்போது பலவிதமான சண்டைகளையும், ஒடிசி, கதகளி போன்ற பல நடன வகைகளையும் நாடகத்தில் இணைத்துள்ளோம்,” என்றார் நாடகத்தின் இயக்குநர் செல்வாநந்தன்.
நடிப்பை மட்டுமின்றி, நடிகர்கள் எந்த அளவிற்கு தங்கள் உடலை வருத்தி ஒவ்வொரு காட்சியையும் அமைக்கிறார்கள் என்பதையும் பார்வையாளர்கள் பார்ப்பார்கள் என்பதால் இந்நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்ற அவாண்ட் நாடகக் குழு விழைகிறது என்றும் அவர் கூறினார்.
மேல்விவரங்களுக்கும் முன்பதிவு செய்யவும் https://stree.eventbrite.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.

